Published : 01 Feb 2016 11:42 AM
Last Updated : 01 Feb 2016 11:42 AM

பெண்களுக்கு மட்டும்தானா ‘ஹிஜாப்’?

இன்று ‘ஹிஜாப்’ தினம். இந்தச் சொல் எல்லாரும் அறிந்த ஒன்றாகிவிட்டது. அநேக முஸ்லிம்களின் சமூக வலைத்தளப் பக்கங்களில் ‘ஹிஜாப்’ போட்ட பெண்களின் படங்களுடன், ஹிஜாப் அணிவதால் விளையும் நன்மைகளும் போதிய பாதுகாப்பான உடை அணியாத பெண்களுக்கு நேரும் ஆபத்துகளும் கடமையுணர்வோடு எடுத்துரைக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

ஹிஜாப் என்ற அரபு வார்த்தைக்கு திரை, தடுப்பு, மதில் என்று பல பொருட்கள் உண்டு. திரை என்ற அர்த்தம் இருப்பதால், அது பெண்களுக்கான ஒன்றாக மட்டுமே கருதப்பட்டுவிட்டது போலும்!

ஹிஜாப் என்பது ஒரு தடுப்பு. எதற்கான தடுப்பு? எல்லாவற்றுக்கும் - எண்ணங்கள், செயல்கள், இச்சைகள், ஆடைகள் என ஐம்புலன்களுக்குமான தடுப்பு. வரம்பு மீற அனுமதிக்காத தடுப்பு. யாருக்கெல்லாம் ஹிஜாப் பொருந்தும்? கற்பு எப்படி இருபாலருக்கும் பொதுவான ஒரு நிலையோ, அதுபோல இஸ்லாத்தில் ‘ஹிஜாப்’பும் இருபாலருக்கும் உரியதாகும். ஆடையில் மட்டுமல்ல கட்டுப்பாடு, பார்வை, செயல்கள், எண்ணங்களுக்கும் கட்டுப்பாடு உண்டு ஆண், பெண் இருவருக்குமே. முக்கியமானது, ஆண், பெண் இருபாலரின் பார்வைக்கான கட்டுப்பாடு. ‘கண்களின் விபச்சாரம் பார்வை’ என்பதும் நபிமொழி. இன்றைய உலகில் இது எத்தனை உண்மை? பெண்கள் எங்கு சென்றாலும், அவர்களை ஆண்களின் பார்வைகள் பின்தொடர்கின்றன. அதைத் தவிர்க்கச் சொன்னால் உடனே, “நாங்க பார்க்கணும்னுதானே பெண்கள் இப்படி ஆடை அணிகிறார்கள்” என்று பதில் வரும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஓர் அந்நியப் பெண் மீது திடீரெனப் பார்வை பட்டுவிட்டால் உடனே பார்வையைத் திருப்பிக்கொள்ளுங்கள். அவள் மீது இரண்டாவது பார்வையைச் செலுத்தாதீர்கள். முதல் பார்வை உம்முடையது; இரண்டாது பார்வை உம்முடையதன்று. மாறாக, ஷைத்தானுடையது.”

ஆக, பார்வைக்கும் வேண்டும் ஹிஜாப். பெண்களின் கடமையை நாங்கள் அறிவோம். அறிவுரை கூறும் ஆண்கள் தங்கள் கடமையில் தவறாமல் இருக்கட்டும்!

- ஹுஸைனம்மா, மின்னஞ்சல் மூலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x