Published : 18 Oct 2016 11:01 AM
Last Updated : 18 Oct 2016 11:01 AM

பஞ்சாயத்துத் தலைவர்களின் வழிகாட்டி

பஞ்சாயத்துத் தலைவர் வளையாபதி குறித்த செய்திக் கட்டுரையை ஒவ்வொரு பஞ்சாயத்துத் தலைவரும் படித்துப் பின்பற்ற வேண்டும். குடிநீருக்காகப் போராடியது, ஆக்கிரமிப்புகளை அகற்றியது, குப்பைகளற்ற கிராமமாக்கியது என எல்லாவற்றையும் அகிம்சை வழியிலேயே சாதித்திருக்கிறார். கிராமங்களே இந்தியாவின் உயிர்நாடியாகக் கருதிய காந்தியின் கனவை நனவாக்கியிருக்கிறார். இந்தத் தொடரைப் புத்தக மாக்கி, பஞ்சாயத்துத் தலைவர்கள் அனைவரையும் படிக்கவைத்தால் சமூகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும். ஏனெனில், பின்பற்றுவதுதான் மனித மனங்களின் அசைக்க முடியாத வாழ்வியல் திறன்.

- கூத்தப்பாடி மா.கோவிந்தசாமி, தருமபுரி.



அரசுடமையாக்க வேண்டும்

தீபாவளி நேரத்தில் மக்களுக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கக்கூடியது ‘தீபாவளிக்கு 21,289 சிறப்புப் பேருந் துகள்: அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு’ என்ற செய்தி. அதேநேரத்தில், பண்டிகைக் கூட்டத் தைப் பயன்படுத்திக் கட்டணக் கொள்ளையில் ஈடுபடும், ஆம்னி பேருந்துகள் மீதான நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. அவர்கள் வசூலிக்கும் கட்டணத்துக்கு நாம் விமானத்திலேயே பயணித்துவிடலாம் போல. கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால், கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும். தண்டனைகளும் கடுமை யாக்கப்பட வேண்டும். தொடர்ந்து தவறிழைக்கும் தனியார் பேருந்து களை அரசுடைமையாக்க வேண்டும்.

- அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறை.



மாயமாகும் சுமைதாங்கிக் கற்கள்

திண்ணைகளின் பொற்காலம் முடிவுக்கு வந்தது வேதனைதான். மக்களின் வாழ்க்கை முறை மட்டுமல்ல, இடநெருக்கடியும் ஒரு காரணம். திண்ணை இருக்கும் இடத்தில் ஓர் அறையைக் கட்டிவிட லாமே என்று நாம் நினைக்கிறோம். திண்ணைகளைப் போலவே காணாமல் போய்க்கொண்டிருக் கின்றன சுமைதாங்கிக் கற்கள். விறகு, மூட்டை போன்றவற்றைத் தலையில் சுமந்து, நெடுந்தூரம் செல்பவர்கள், இந்தச் சுமைகளைச் சுமைதாங்கிக் கல் மீது இறக்கிவைத்து, இளைப்பாறிச் சென்ற காலம் இருந்தது. தலைச் சுமை என்பதே அரிதாகி வருவதால், சுமைதாங்கியும் முற்றிலும் மறைந்துபோகக்கூடும்.

- எம்.லோகநாதன், சிகரலப்பள்ளி.



கலைமாமணி விருதுகள்

ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்கிவரும் ‘கலைமாமணி’ விருதுகள் கடந்த 6 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என்பது இந்த அங்கீகாரத்தை எதிர்பார்த்திருக்கும் பல தமிழகக் கலைஞர்களுக்கு வருத்தம் தருவதாகும். சம்பந்தப்பட்ட துறை, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர், செயலாளர் யாராவது பொறுப்பேற்று முதல்வரிடம் இதைத் தெரிவித்திருக்க வேண்டும். கலைகளும், கலைஞர்களும் ஊக்கப்படுத்தப்படவில்லையெனில், மக்களின் பொழுதுபோக்கு வெறிச்சோடிவிடும்.

- கு.மா.பா.திருநாவுக்கரசு, சென்னை.



வேண்டும் வெளிப்படைத்தன்மை

‘தனி நபர் அந்தரங்கத்துக்கும் அரசின் வெளிப்படைத் தன்மைக்குமான எல்லை எது?’ என்பது மில்லியன் டாலர் கேள்வி. அதுவும் ஒரு பெண் முதல்வர் என்பதால் அந்த எல்லை மேலும் நீண்டுகொண்டே செல்கிறது. ஆரம்பம் முதலே இதை நன்குணர்ந்து, அரசு ஓரளவு வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொண்டிருந்தால், முதல்வரின் உடல்நிலை குறித்தும் அரசின் செயல்பாடுகள் குறித்தும் வீணான வதந்திகளைத் தவிர்த்திருக்கலாம்.

- கார்த்திகேயன், ‘தி இந்து’ இணையதளம் வழியாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x