Published : 30 Aug 2016 03:02 PM
Last Updated : 30 Aug 2016 03:02 PM

தேவை கல்விக்கான இயக்கம்

ச.சீ.இராஜகோபாலனின் பேட்டி, கல்விக்கூடங்களின் அவல நிலையைத் தெளிவாக எடுத்துரைக்கிறது. மக்கள் நல அரசும், சட்டத்தின் ஆட்சியும் அமையப் பெற்றால் மட்டுமே கல்வி மாற்றம் வரும்.

பொருளாதார ஏற்றத்தாழ்வு உள்ள மேலைநாடுகளில், சமுதாய ஒழுங்கு என்பதும் சமூகத்தில் தனிமனிதப் பொறுப்பு என்பதும் ஆரம்பக் கல்வியிலிருந்தே பயிற்றுவிக்கப்படுவதால் கல்வியின் நோக்கம் அரசியல்வாதிகளின் தலையீடின்றி நிறைவேறுகிறது.

சமூகச் சிற்பிகளை உருவாக்க வேண்டிய புனிதக் கடமையை நிறைவேற்ற வேண்டிய கல்வித் துறையில் நிலவும் ஊழல், லஞ்சம், தொழிற்சங்கங்களின் குறுகிய நோக்கம் எல்லாம் சேர்ந்து, கல்வியின் நோக்கத்தையே பாழ்படுத்திவிட்டது. தேவை எல்லாம் சுயலாபம் கருதாமல், சுயமரியாதையை மீட்டெடுக்கும், மனிதத்தை மேம்படுத்தும் கல்விக்கான இயக்கமே.

- நா.வீரபாண்டியன், பட்டுக்கோட்டை.

*

இதுவே சரியான தருணம்!

சீமைக் கருவேல மரங்களின் பயங்கரமான தீய விளைவுகள் பற்றி நிறைய கட்டுரைகள், ஆய்வுகள் வந்துவிட்டன. தீயிட்டு எரித்தாலும்கூட, கரிந்துபோன பகுதியில் தளிர்விடும் தாவர இனம் இது. கேரளம் இந்த மரங்களைப் பெரும்பாலும் அழித்துவிட்டது.

சமீபத்தில் தகிக்கும் வெயில் காரணமாக நெல்லை மாவட்டத் தில் மட்டும் 1,634 குளங்கள் வறண்டுபோனதாக 'தி இந்து'வில் செய்தி கண்டேன்.

ஒரு காலத்தில் எந்தக் கோடையிலும் வற்றாத ஜீவநதியாக இருந்த எங்கள் தாமிரபரணி, இந்த நச்சு மரங்களின் ஆக்கிரமிப்பால் அழிவு நிலையில் உள்ளது. மழைக் காலமும் ஆரம்பித்து விட்டது. 'வருமுன் காப்போம்' தலையங்கம் சுட்டிக்காட்டியபடி, சீமைக் கருவேல மரங்களை அகற்ற இதுவே சரியான தருணம். அரசு எந்திரம் விழித்தெழுமா?

- எம்.எஸ்.அஹ்மத் இஸ்மாயில் நயினார், ஆழ்வார்திருநகரி.

*

மறுஆய்வு தேவை

சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமில்லை என்ற செய்தியைப் படித்தேன். ஆசிரியர் தகுதி அனைத்துக் கல்விக் கூடங்களுக்கும் பொதுவானது. சிறுபான்மையோர் கல்விக் கூடங்களில் தகுதியற்ற ஆசிரியர் கற்பிப்பது அங்கு பயிலும் மாணவரது உரிமையைப் பறிப்பதாகிவிடாதா?

பல்கலைக்கழகங்கள், கல்வித் துறை ஆகியவை ஆசிரியர்களுக்குத் தேவையான அடிப்படைத் தகுதிகளை நிர்ணயிக்கும் கடமையைப் பெற்றவை. அவற்றில் நீதிமன்றம் தலையிடுவது கல்வி மறுப்புக்கே வித்திடும். எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x