Published : 12 Aug 2016 04:50 PM
Last Updated : 12 Aug 2016 04:50 PM

கல்விக் கொள்கையின் நிலை

புதிய தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்படவே இல்லை. அதைத் தயாரிக்கத் தேவையான அடிப்படைகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. அவையே கல்விக் கொள்கை என விவாதங்கள் நடைபெறுகின்றன.

வரலாற்றில், அரசுகள் இதுவரையில் அமைத்த கல்விக் குழுக்களின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டதைக் காட்டிலும், நிராகரிக்கப்பட்டதே அதிகம். டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைந்த பல்கலைக்கழகக் கல்விக் குழுவிலிருந்து கோத்தாரி கல்விக் குழு வரைக்கும் இதுதான் கதி.

அரசியல் சட்டத்தில் முக்கியமாக வலியுறுத்தியுள்ள மதநடுநிலை, சமத்துவம், சமநீதிக் கோட்பாடுகள் பற்றி டி.ஆர்.எஸ். சுப்பிரமணியம் குழு அவற்றுக்கு நேரெதிர் கருத்துகளைத் தெரிவித்துள்ளது. பொதுவாக, முந்தைய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்த கருத்துகளை ஆமோதிக்கும் வகையிலேயே குழு அறிக்கையின் உள்ளடக்கம் உள்ளது.

மிகச் சாமர்த்தியமாகத் தான் திறந்த மனதுடன் இருப்பதாகத் தெரிவித்தாலும்கூட, புதிய அமைச்சரது நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை. கல்வியைப் பொறுத்தவரையில் ஆர்.எஸ்.எஸ்.தான் மோடி அரசை வழிநடத்திச் செல்கிறது. அமைச்சர்கள் அதை மீறிச் செயல்பட முடியுமா?

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.

*****

இணைப்பு தரும் பிணக்கு!

தலையங்கம் 'இந்த இணைப்பு மேலும் முன்னேற வழி வகுக்கட்டும்' படித்தேன். பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகள் ஐந்தையும், பாரதிய மகிளா வங்கியையும் இணைக்கும் முயற்சி பிற்போக்குத் தனமான முயற்சியாகும். வங்கிகள் இணைப்பை வலியுறுத்தும் மத்திய அரசும் ஸ்டேட் வங்கி நிர்வாகமும் கிளைகள் மூடலோ, ஊழியர்கள் பணி இழப்போ இருக்காது என எந்த ஒரு உத்தரவாதமும் இதுவரை தரவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

உலக அளவில் இந்திய வங்கிகளின் மொத்த வணிகமே வெறும் 1.5% உள்ள நிலையில், இந்த இணைப்பினால் உலக அளவில் பெரிய வங்கியாக ஸ்டேட் வங்கி உருவெடுக்கும் எனக் கூறுவது எந்த வகையில் சரி என்பதை வல்லுநர்கள்தான் விளக்க வேண்டும். ஊழியர் சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, இணைப்பு முயற்சிகளைக் கைவிட்டு, வாராக்கடன்கள் வசூலுக்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுப்பதே நாட்டுக்கு நன்மை பயக்கும்.

- ஜா.அனந்த பத்மநாபன், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், திருச்சி.

*

சாவி எனும் தீர்க்கதரிசி!

சாவியின் நூற்றாண்டுக் கட்டுரை கண்டேன். ஒருமுறை வாசகர் கேள்வி பகுதிக்கு, 'இந்திரா காந்திக்குப் பிறகு, சஞ்சய் காந்தி திறமையான தலைவராக, பிரதமராக வருவாரா?' என்ற கேள்வி வந்தது. சஞ்சய் காந்தியின் அதிகாரம் கொடிகட்டிப் பறந்த நேரத்தில் அக்கேள்விக்கு சாவி அளித்த பதில், 'ராஜீவ் காந்தியே சிறந்த தலைவர், நிர்வாகி' என்பது. பிற்காலத்திலும் அதுதான் நடந்தது.

- மாணிக்கம், வேலூர்.

*

திமுகவும் சாதி ஒழிப்பும்

ஆடிட்டர் குருமூர்த்தி, 'திராவிட இயக்கம் உயர் சாதி எதிர்ப்பே தவிர, சாதி ஒழிப்பு இயக்கம் அல்ல' என்று கூறியுள்ளார். பெரியாரின் தலைமையிலான திராவிடர் கழகத்தினர், சாதி மறுப்புக் கொள்கையுடன் சாதியத்தின் அடித்தளமான சனாதனத்துக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் எதிராக உணர்வுபூர்வமாகப் போராடி வருகிறார்கள்.

திமுகவைப் பொறுத்தவரையில், சாதி ஒழிப்பு என்பது ஒரு முகமூடி மட்டுமே. சாதி ஒழிப்பின் முன் தேவை, சாதிய உணர்வின் வேரறுப்பாகும். ஆனால், திமுகவோ சாதி அடிப்படையில்தான் தேர்தலில் வேட்பாளர்களையே நிறுத்துகிறது.

- நவஜீவன் கருப்பையா, மின்னஞ்சல் வழியாக.

*

விளிம்புக்கு நகர்த்துதல்

சில இஸ்லாமியர்களைத் தீவிரவாதம் நோக்கி நகர்த்துவதும், சில இஸ்லாமியர்களை மத அடிப்படைவாதம் நோக்கி நகர்த்துவதும், பாஜகவின் மதவாத அரசியலே. அதேபோல் தலித்துகளுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைகள், பசுவின் பெயரால் தலித்துகள் மீதான தாக்குதல்கள் போன்றவற்றுக்கும்கூட பாஜகவின் பிற்போக்குத்தனமான அரசியல் காரணமாக இருக்கிறது.

படேல் இனத்தவர் இடஒதுக்கீடு கோரும் போராட்டம்கூட அரசின் கொள்கைகள் தோல்வியடைந்ததன் விளைவே. மோடி அரசின் கொள்கைகளுக்குக் கிடைத்த தோல்வியே இது என்பதை மேற்கண்ட இரு பிரச்சினைகளிலும் அழகாகக் கையாண்டிருந்தார் எழுத்தாளர் மருதன்.

- சே.செல்வராஜ், தஞ்சாவூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x