Published : 25 Oct 2014 10:47 AM
Last Updated : 25 Oct 2014 10:47 AM

எதை நிரூபிக்க முயல்கிறார் திருநாவுக்கரசு?

‘‘மானமும் அறிவும் பெற்ற மனிதர்களாக இந்த மக்களை மாற்றும் முயற்சியில் ஆயிரம் முறை சிறை சென்றாலும், நான் செய்த செயலுக்காகத் தங்களுக்கு திருப்தியளிக்கக் கூடிய உயர்ந்த பட்ச தண்டனையைத் தாருங்கள்” என்று நீதிபதிகளிடம் தண்டனையைக் கேட்டுப் பெற்றவர் பெரியார்.

1956-ல் உயர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதியிடம் 30 பக்கங்கள் அடங்கிய அறிக்கையைப் படித்துக்காட்டி, “இதில் நான் எடுத்துக்காட்டியிருக்கும் விஷயங்கள் எல்லாம் எவ்வித குரோத துவேஷ உணர்ச்சியில்லாமல், என் இன மக்களுடைய உண்மையானதும், அவசியமானதுமான நலன் கருதி ஒரு யோக்கியமான பொதுநலத் தொண்டன் என்கிற தன்மையில் சமூகம் கோர்ட்டார் அவர்களும் கனம் நீதிபதிகளுடைய சித்தம் எதுவோ அது என்னுடைய பாக்கியம் என்பதாகக் கருதி, எதையும் ஏற்க தயாராகி இருக்கிறேன்” என்று கூறியவர் பெரியார்.

எந்த ஒரு மனிதனும் மற்றொருவன் காலில் விழுந்து வணங்கக் கூடாது என வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றியவர் அவர்.

புகழ்ச்சிக்கு அடிபணியாத அவர், மேடைகளில் யாரேனும் தன்னைப் பற்றிப் புகழ்ந்து பேசும்போது தன் கைத்தடியால் மேஜையைத் தட்டி எச்சரிக்கத் தவறியதில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, அதை துக்க நாளாக அறிவித்த பெரியார், அதில் மாற்றுக்கருத்து கொண்டிருந்த அண்ணா அவர்களின் கட்டுரையையும் தனது ‘விடுதலை’ நாளிதழில் வெளியிட்டதை அறிந்தவர்களுக்கு பெரியாரின் கருத்துச் சுதந்திரம் பற்றி சந்தேகம் எழாது. தான் கொண்ட லட்சியத்தை நிறைவேற்ற தன் இயக்கத்துக்குக் கட்டுப்பாடான ஆயிரம் முட்டாள்கள் போதும் என்ற பெரியார்தான், ‘‘என் கருத்துகளை அப்படியே ஏற்றுக்கொள்ளும்படி நான் கூறவில்லை. ஒரு முறைக்கு ஆயிரம் முறை சிந்தித்துப் பார்த்து சரி எனப் பட்டதை ஏற்றுக்கொள்ளுங்கள்’’ என மேடைதோறும் மறக்காமல் சொன்னார். இப்படியிருக்க, பெரியார் பற்றிய க. திருநாவுக்கரசின் கட்டுரை எதை நிரூபிக்க முயல்கிறது?

-கி. தளபதிராஜ்,மின்னஞ்சல் வழியாக…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x