Published : 29 Aug 2016 02:57 PM
Last Updated : 29 Aug 2016 02:57 PM

உடைத்தெறியப்பட்ட பிம்பம்

'கோமாளியின் கோபம்' கட்டுரை 'ஜோக்கர்' படம் பார்க்கத் தூண்டியது. கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதுபோல, போலி நாயக பிம்பத்தை உடைத்தெறிந்துள்ளார் ராஜுமுருகன்.

மேலும், எல்லாத் தரப்பும் செய்யும் அரசியல் நாடகங்களை, ஏமாற்று வேலைகளை, மலிந்துபோன ஊழலை, இலவசங்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளைத் தைரியமாகத் தோலுரித்துக் காட்டியுள்ளார். படத்தில் வரும் பல கதாபாத்திரங்கள் நம் நிஜ வாழ்க்கையில் பல நேரங்களில் காண்பவர்களே. அனைவரும் யதார்த்தமாக நடித்துள்ளனர்.

மக்கள் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்கத் தயங்கக் கூடாது என்ற உணர்வை ஊட்டியதற்காகவும், சமூகத்தின் மீதான அக்கறையில் துணிச்சலோடு எடுத்த படம் என்பதற்காகவும் பாராட்ட வேண்டும்.

- மு.செல்வராஜ், மதுரை.

*

நமக்கும் பங்கிருக்கிறது!

நமது கல்வி முறை மேம்படாதவரை விளையாட்டு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நம்மை நாமே குறைசொல்லிக்கொள்வது தொடரும். நாமும் பிள்ளைகளை விளையாட அனுமதிப்பதில்லை, பள்ளிகளும் அனுமதிப்பதில்லை.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களில் பெரும்பாலானோர் தங்களது 10 வயதிலேயே பயிற்சியைத் தொடங்கியவர்கள் என்பதற்கு, சமீபத்தில் பதக்கம் வென்ற சிந்துவும் சாக் ஷியுமே சாட்சி. கல்விச் சீர்திருத்தம் குறித்துப் பரவலாக விவாதம் நடந்துகொண்டிருக்கும் சூழலில், கல்வியுடன் விளையாட்டுக்குக் கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவத்தையும் வரையறுக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சி, வீழ்ச்சி எதுவானாலும் நம் ஒவ்வொருவருக்கும் பங்கிருக்கிறது.

- ஜெ.செல்வராஜ், வேடசந்தூர்.

*

புதிய மொந்தையும் பழைய கள்ளும்!

மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை தேசிய அளவில் நடத்தி, தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ள மத்திய அரசு, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தும் பொறுப்பைத் திரும்பவும் தனியார் கல்வி நிறுவனங்களிடம் ஒப்படைத்திருப்பது சரியல்ல. எதற்காக மத்திய அரசு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தியதோ, அந்த நோக்கம் அடிபட்டுவிட்டது.

முன்பு மருத்துவ இடங்களைக் கூவிக்கூவி விற்றதுபோல, இப்போதும் செய்யப்போகின்றன தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள். சரியாகச் சொன்னால், புதிய மொந்தையில் அதே பழைய கள்! எனவே, மத்திய அரசு தான் வெளியிட்டுள்ள தர வரிசைப் பட்டியலின் அடிப்படையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கும் பணியை அந்தந்த மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

- ஆர்.வடமலைராஜ், சென்னை.

*

உள்ளாட்சியிடம் ஒப்படைக்க வேண்டாம்!

முன்னாள் துணைவேந்தர் வே.வசந்திதேவியின் புதிய கல்விக் கொள்கை தொடர்பான கட்டுரையில், கல்வியைப் பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற கருத்து மிகமிக முக்கியமானதாகும். அதேநேரம், அவர் கூறியுள்ள மற்றொரு கருத்தான, கல்வி நிர்வாகம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாற்றப்பட வேண்டும் என்பதை மிகவும் யோசித்துதான் செயல்படுத்த வேண்டும்.

ஏனென்றால், உள்ளாட்சி அமைப்புகளின் முந்தைய நிலைமை வேறு, இன்றைய நிலைமை வேறு. ஊழியர்களுக்கே ஊதியம் தர இயலாத நிலையில், உள்ள பல உள்ளாட்சியின் கீழ் பள்ளிகள் கொண்டுவரப்பட்டால், உள்ளாட்சிகள் அனைத்தும் நிச்சயம் திவாலாகிவிடும். நிதிப் பொறுப்பை அரசே ஏற்றுக்கொண்டாலும்கூட ஒரு சிக்கல் இருக்கிறது.

கல்வியாளர் எஸ்.எஸ்.இராஜகோபாலன் நேர்காணலில் தெரிவித்துள்ளதைப் போல ஆசிரியர் பணி நியமனத்துக்குப் பணம் விளையாடுகிறது. கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கே லட்சங்களில் பேரம் பேசும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஆசிரியர் பணி நியமனம் என்றால் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

- வீ.சக்திவேல், ஓய்வுபெற்ற நகராட்சிக் கணக்காளர், கொடைக்கானல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x