Published : 26 Aug 2016 11:25 AM
Last Updated : 26 Aug 2016 11:25 AM

இறுக்கமான இறுதி சுவாசம்

'வலியே மருந்தாகும்போது' கட்டுரை கண்ணீரை வரவழைத்தது. இன்றைக்கு முதிர்வயதில் மரணிக்கும் பெரும்பாலானோர், மருத்துவமனைகளில் தனிமைச் சிறையில் சித்ரவதையுடன்தான் தங்களின் இறுதி சுவாசத்தை முடிக்கும் நிலை உள்ளது.

பிழைக்க வாய்ப்பில்லை என்ற நிலையிலும், ஏதேனும் வழி பிறக்காதா… உடல்நிலையில் மாற்றம் காணாதா என்ற உறவினர்களின் நப்பாசையைத் தனியார் மருத்துவமனைகளும், மருத்துவர்களும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பாகக் கருதி, மனிதாபிமானமே இல்லாமல், தங்களின் வருமானத்துக்கு வழிகாண்கின்றனர்.

மருத்துவம், கருணைத் தன்மையைத் தொலைத்து, பொருளாதாரத்தின் கொடூர இலக்குக்கு மாறிவிட்ட இக்காலத்தில், சூழ்நிலையைப் புரிந்து செயல்பட வேண்டியது பொதுஜனங்களே. இறப்பு இயல்பானது; அது இயல்பாக நடப்பதே சரி.

- ஏ.எம்.நூர்தீன்,சோளிங்கர்.

*

சமூகத்தைத் தூண்டும் சினிமா

கோமாளியின் கோபம் எனும் அருமையான கட்டுரைக்காக அரவிந்தனுக்குப் பாராட்டுக்கள். 'ஜோக்கர்' திரைப்படம், சமூக வெளியில் வெறுப்போடும், புலம்பலோடும் தத்தம் ஏமாற்றங்களோடு வாழும் மக்களுக் காகக் குரல் கொடுக்கவும், சித்ரவதைகளைப் பொருட்படுத்தாது அதிகார அமைப்புகளை எதிர்த்து இடைவிடாது இயங்கிக்கொண்டிருக்கவுமான மனிதர்களது செயல் பாடுகளை உன்னதமாகப் பார்க்குமாறு சமூகத்தைத் தூண்டுகிறது.

அதிகம் பேசப்படும் இந்தத் திரைப்படத்தின் சில அதிரடி வசனங்கள் முக்கியமானவை என்றாலும், படத்தின் காட்சி மொழி, அதற்காக இந்தப் படத்தின் ஒட்டுமொத்தக் குழுவும் பங்களித்திருக்கும் அசாத்திய உழைப்பு, நடிகர்களது உடல்மொழி உள்ளிட்ட நுட்பமான அம்சங்கள் - அர்ப்பணிப்போடு வழங்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தைக் கொண்டாட வைக்கின்றன.

- எஸ்.வி.வேணுகோபாலன், சென்னை.

*

நம் மீது நிகழ்த்தப்படும் ஒவ்வொரு சிறிய வன்முறையும், குழப்பமும், பிரச்சினையும் கண்ணுக்குத் தெரியாத அரசியல் - பொருளியல் வாழ்க்கையின் மாய இழைகளால் நெய்யப்பட்டவை.

விபத்தாக நடக்கும் ஒரு நிகழ்வு, தற்செயலானதல்ல. அது நிகழும்போது நாம் அங்கே அதைச் சந்திக்கிறோம். மன்னர் மன்னனின் கதாபாத்திரம் வழியாக கிராமப்புற மக்கள் எவ்வாறு அரசியல்வாதிகளால், அதிகாரிகளால் கொள்ளையடிக்கப்பட்டு சிதைக்கப்படுகின்றனர் என்பதை வாழ்வனுபவத்தின் மூலம் கலையாக்கியிருக்கிறார் ராஜுமுருகன்.

இளம் வயது கருணாநிதியால் கதை வசனம் எழுதப்பட்டு, தமிழ்த் திரையுலக வராலாற்றில் மிக முக்கியான அரசியல் திரைப்படமாக வெளிவந்த, 'பராசக்தி'யில் வந்த சிவாஜியின் கதாபாத்திரத்தின் இன்றைய வடிவமே 'ஜோக்கர்' படக் கதாநாயகன். ஜனாதிபதி உரையோடு இணைந்து இடிந்து விழும் இலவசக் கழிப்பறைக் காட்சிகள் எள்ளல்.

- கு.பால்ராஜ், ராஜபாளையம்.

*

புத்தகக் காட்சி

சென்னை, ஈரோட்டைத் தொடர்ந்து கோவையிலும் புத்தகக் காட்சி நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. 'கோவை: படைப்பும் வாசிப்பும்' எனும் தலைப்பில் கோவை படைப்பாளி களைச் சுட்டிக் காட்டியுள்ளார் கா.சு.வேலாயுதன்.

புத்தகக் காட்சி என்றால் மக்களைக் கவரும் வண்ணம் இருக்க வேண்டும், மக்களும் புத்தகக் காட்சியை நாடிச் செல்ல வேண்டும் என்று இரு சாராருக்கும் அறிவுறுத்தியிருப்பது சரியானதே!

- பொன்.குமார், சேலம்.

*

எது தைரியம்?

சட்டப்பேரவையில், '2006-ல் எனக்கு இருந்த துணிச்சல் இப்போது திமுக தலைவருக்கு இருக்கிறதா?' என்று கேட்டிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.

கருணாநிதியின் ஆட்சியில் ஜெயலலிதாவால் தனியாகப் பேச முடியும். ஏனெனில், அந்த ஆட்சியில் சட்டமன்றத்தில் கொஞ்சம் ஜனநாயகம் இருந்தது, பேச வாய்ப்பும் தந்தார்கள். இப்போது நிலைமை அப்படியா இருக்கிறது?!

- மைக்கேல்ராஜ், 'தி இந்து' இணையதளம் வழியாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x