Published : 17 Apr 2017 10:23 AM
Last Updated : 17 Apr 2017 10:23 AM

இப்படிக்கு இவர்கள்: தேவை தமிழ்வழிக் கல்வி!

கேரளத்தில் வரும் கல்வியாண்டு முதல் தாய் மொழி மலையாளம் 10-ம் வகுப்பு வரை கட்டாயம் என்று அவசரச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது (ஏப்.12) மிகவும் வரவேற்கத்தக்கது. வேற்று மாநிலத்தவருக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டிருப்பதும் நல்ல விஷயம். சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் மேல்நிலைக்கல்வியைக்கூட அவரவர் தாய் மொழியிலேயே கற்கிறார்கள்.

சமீபத்தில் நடந்த +2 தேர்வில் மொழிப்பாடத்துக்கான தேர்வின்போது தமிழைத் தாய் மொழியாகக்கொண்ட பல மாணவ-மாணவிகள் தமிழ்த் தேர்வை எழுதாமல், இந்தி, பிரெஞ்சு, சம்ஸ்கிருதம், ஜெர்மன் போன்ற பிற மொழிகளில் தேர்வு எழுதியது இந்தத் தருணத்தில் சிந்தனைக்குரியது. எத்தனையோ அவசரச் சட்டங்கள் இயற்றப்படும் தமிழகத்தில், தாய் மொழி வழிக்கல்விக்கு உதவுகிற இதுபோன்ற சட்டங்களை இயற்ற ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும்.

-சு.தட்சிணாமூர்த்தி, பி.என்.புதூர்.



அமிதாப்பிடம் கற்றுக்கொள்ள வேண்டும்!

ஏப்ரல் 11-ல் வெளியான, ‘அமிதாப் என்ன செய்தார் தெரியுமா விஷால்?’ என்ற கட்டுரை படித்தேன். ஆந்திரத்தில் விவசாயிகளின் தற்கொலை பற்றிக் கேள்விப்பட்டு, அப்பகுதியைச் சேர்ந்த 114 விவசாயிகளின் சுமார் 39 லட்சம் ரூபாய் கடன் தொகையை நேரடியாக வங்கிகளில் செலுத்தியதோடு நில்லாமல், வங்கிகளிடமிருந்து மறுகடன் பெறுவதற்கான தகுதிச் சான்றினை உரிய விவசாயிகளிடம் வழங்கியுள்ளார் அமிதாப். அவர் செய்த செயலை இன்று எந்த அரசியல் கட்சித் தலைவரும், வேறு எந்தத் தனிநபரும் செய்ய இயலுமா என்பது தெரியவில்லை. விஷால் மட்டுமல்ல அனைவரும் இவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

-ஜீவன்.பி.கே., கும்பகோணம்.



நீர்மேல் எழுத்தாகிவிட்டது

தமிழ்ப் பல்கலைக்கழக முதல் துணை வேந்தரான டாக்டர் வடசேரி அய்.சுப்பிரமணியம் பற்றிய தஞ்சாவூர்க் கவிராயரின் பதிவு (ஏப்ரல் 14) சரியான தருணத்தில் வந்துள்ளது. இதுபோன்ற பதிவுகள் வாசகர்களிடம் ஏற்படுத்தும் பாதிப்பை, விழுமியங்களைத் தொலைத்துவிட்ட சில கல்வியாளர்களிடமும் ஏற்படுத்துமா என்பது மிகப்பெரிய கேள்வி. அறநெறி தவறாமல் செயல்படுவதே பெரும் அரச வெற்றி என்று அசோகச் சக்ரவர்த்தி கல்லெழுத்தில் கூறியதெல்லாம் நீர்மேலெழுத்தாகிவிட்டது.

-கார்த்திகேயன், இணையம் வழியாக.



நோயாளிகளுக்காகவும் போராடலாமே?

ஏப்ரல் 12 அன்று வெளியான ‘மருத்துவர்கள் பாதுகாப்புடன் இருக்கிறார்களா?’ கட்டுரையைப் படித்தபோது, மருத்துவர்களின் பக்கத்தைச் சரியாகச் சொன்னதுபோல், மக்களின் பக்கத்தைச் சொல்ல மறந்துவிட்டதாகவே தோன்றியது. மக்கள், அரசிடம் குறைகளைக் கூறாமல் மருத்துவரிடம் கோபம் கொள்கிறார்கள் என்கிறது கட்டுரை. அவசர சிகிச்சைக்கு வரும் மக்கள் வேறு என்ன செய்ய முடியும்? கடையில் சென்று ஏன் பொருள் சரியில்லை என்று கேட்பார்களே ஒழிய, அந்தப் பொருளைத் தயார் செய்த நிறுவனத்திடம் போய் யாரும் கேட்பதில்லை. அவசர சிகிச்சைப் பிரிவில் போதிய மருத்துவர்கள் இல்லை என்றால், போதிய கருவிகள் இல்லை என்றால் அதைப் போராடியாவது கேட்டு வாங்க வேண்டிய பொறுப்பு மருத்துவருடையது; இல்லையா? தனியார் ‘கிளினிக்’ நடத்துவது, ஊதிய உயர்வு கேட்டுப் போராடுவது மட்டும்தான் அரசு மருத்துவர்களின் கடமையா? நோயாளிகளுக்காகவும் போராடலாமே?

-பிரவீணா ஜெயந்தி, திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x