Published : 20 Jun 2017 10:16 AM
Last Updated : 20 Jun 2017 10:16 AM

இப்படிக்கு இவர்கள்: தனி மாநிலக் கோரிக்கை என்பது பிரிவினைவாதம் அல்ல!

திங்கள் அன்று வெளியான ‘டார்ஜிலிங்: வலுவடைந்திருக்கும் பிரிவினை கோரிக்கை’ தலையங்கம் கண்டேன். கோர்க்கர்களுக்கென தனி மாநிலம் வேண்டும் என்று கோரிக்கை வைத்துப் போராடுவது, பிரிவினைவாதம்போல சித்திரிக்கப்படுவதை ஏற்க இயலவில்லை. அவர்கள் கேட்பது தனி மாநிலம்தானே! குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போகும்போது ‘தனிக் குடித்தனம்’ போக நினைப்பதும் ஒரு தீர்வுதான். அது, உறவுகளை முறித்துக்கொண்டு போவதாகப் பொருள் இல்லை.

இந்தியாவில் ஆங்காங்கே எழுப்பப்படும் தனி மாநில கோரிக்கையும் இவ்வகையைச் சேர்ந்ததுதான். நிர்வாக வசதிக்காக, பாமர மக்கள் எளிதில் அணுகுவதற்கு வசதியாக, தனி மாநிலம் வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதும், இதனைப் பரிசீலித்து, தக்க சமயத்தில் தகுந்த முடிவு எடுப்பதும், சாதாரணமான நிர்வாகம் சார்ந்த நடைமுறை நிகழ்வு அன்றி வேறில்லை. நமது அரசமைப்புச் சட்டமும் இந்தக் கோட்பாட்டையே ஆதரிக்கிறது. எடுத்த எடுப்பிலேயே, முதல் நான்கு பிரிவுகள் இதனைத்தான் வலியுறுத்துகின்றன. புது மாநிலங்களை உருவாக்குதல் தொடர்பான வழிமுறைகளை விளக்கிச் சொல்கின்றன. பிறகு எப்படி, தனி மாநிலக் கோரிக்கையை ‘பிரிவினை’யாகப் பார்க்க முடியும்?

- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, சென்னை.



அனைவருக்கும் கடமை இருக்கிறது!

காந்தியின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தி எழுதிய, ‘தேசப் பிரிவினைக்கு இன்னும் வட்டி கொடுக்கிறோம்’ கட்டுரை வரலாற்றுபூர்வமாக மிகுந்த கவலையோடு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. சாவர்க்கர் போன்ற இந்துத்துவவாதிகளின் அடிப்படை இந்து ராஷ்டிரம் அமைப்பது, ராணுவத்தை இந்துத்துவமயமாய் மாற்றுவது என்பதே. அதற்கான புறச்சூழல்களைச் சாதகமாக்க பரிசோதனை வேலைகளைத் தீவிரமாக அமல்படுத்துகிறது. அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்படுகிற வகையிலான மதவெறிக் கருத்தியலை எதிர்க்க வேண்டும். இன்று இஸ்லாமிய நாடுகளில் கட்டுப்படுத்த முடியாதவாறு தீவிரவாதம் தலை விரித்தாடுவது அரசில் மதம் இருப்பதே காரணம். இதுபோன்ற நிலை இந்துத்துவ அரசாங்கத்திலும் ஏற்படக்கூடும் என்பதால், சோஷலிசக் குடியரசைக் காட்டிக் காக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது.

- முருக சரவணன், பட்டுக்கோட்டை.



நீட் குழப்பங்கள்

ஜூன் 16-ல் வெளியான, ‘நீட்: தமிழக உரிமையை நிலைநாட்ட என்ன செய்ய வேண்டும்?’ கட்டுரை வாசித்தேன். ‘நீட்’ தேர்வு திணிப்பு, கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கான காரணங்களை அலசியிருக்கிறார் கட்டுரை யாளர். நாடு முழுவதும் ஒரே தேர்வு முறை என அறிவிப்பு இருந்தும், குஜராத், வங்காளம் ஆகிய மாநிலங்களில் நடந்தேறிய குழப்பங்களைச் சுட்டிக்காட்டியது அருமை.

- கு.மா.பா.கபிலன், சென்னை.



தமிழனின் தேவை

ஜூன் 19-ல் வெளியான, ‘ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது!’ கட்டுரை வாசித்தேன். பட்டப் படிப்பு வரையில் முடித்த நான், சமீப காலத்தில்தான் அயோத்தி தாசரைப் பற்றி அறிந்துகொண்டேன். அவர் 1907-லேயே ‘தமிழன்’ என்ற இதழைத் தொடங்கியது பற்றியும், அதற்கெனத் தனி அச்சகம் வைத்திருந்தது பற்றியும் படித்தபோது பிரம்மிப்பாக இருந்தது. அரசியல், ஆய்வு, பகுத்தறிவு, சாதி எதிர்ப்பு என்று பல செய்திகளைத் தாங்கிவந்த அந்த இதழின் தொகுப்பை வாசிக்க வேண்டும் என்ற உந்துதலை இந்த நிமிடக் கட்டுரை ஏற்படுத்தியது. கட்டுரையாளர் வினோத் குறிப்பிடுவதுபோல, ‘எந்தெந்த நோக்கங்களுக்காக அயோத்தி தாசர் ‘தமிழன்’ இதழைத் தொடங்கினாரோ, அந்த நோக்கங்களை அடைய இன்றும் ‘தமிழன்’ தேவைப்படுகிறது.

- முத்துச்சாமி, முடவன்குளம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x