Published : 24 Apr 2017 10:43 AM
Last Updated : 24 Apr 2017 10:43 AM

இப்படிக்கு இவர்கள்: அறிவால் அறிந்துவிடு!

ஏப்ரல்19-ல் வெளியான, ‘மீண்டும் ஒரு பஞ்சத்தை எதிர்கொள்ளப் போகிறோமா?’ கட்டுரை நிகழ்கால உண்மை குறித்துச் சிந்திக்க வைக்கிறது. மனிதர்கள் செய்யும் சிறிய தவறுகள் ஒன்றிணைந்து மாபெரும் தவறாக நிற்கிறது. முழுப் பொறுப்பும் மனிதர்களுக்கே உரியது. மழை பெய்யும்போது 16% நீர் நிலத்தில் சென்றால்தான் நிலத்தடி நீர்மட்டம் உயரும். தற்போதைய நிலவரப்படி 8%கூடச் செல்வதில்லை. அதிகரிக்கும் நீர்த் தேவையால் நிலத்தடி நீர்மட்டம் இன்னும் கீழே செல்லும். பெருநகரங்களில் சாக்கடை நீரும் கலப்பதால் குளோரைடு, ஃபுளோரைடு, நைட்ரைடு கலந்த நீரைப் பருகும் அபாயம்.

குடிநீருக்கே இந்த நிலைமை எனில், விவசாயம் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. தண்ணீர் பஞ்சத்தைக் குறைக்கக் கடல்நீரைக் குடிநீராக்குவதும், தண்ணீர் இருக்கும் இடத்தை ஆராய்வதும், சிக்கனமாக நீரைப் பயன்படுத்துவதும் முக்கியமானதாகிறது. மேம்பாட்டுப் பணிகளில் நீர்நிலைகளையும் விளைநிலங்களையும் மரங்களையும் காப்பாற்ற வேண்டும். நீர்நிலைகளை உறிஞ்சும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் தற்காலிகத் தடையாவது விதிக்க வேண்டும். ‘அறிவால் அறிந்துவிடு, இல்லையேல் அனுபவம் காட்டிவிடும்’என்ற கண்ணதாசனின் வரிகளே இதற்குச் சான்று.

- ப.மணிகண்டபிரபு, திருப்பூர்.



நல்ல முடிவு

முக்கியத் தலைவர்களின் கார்களிலிருந்து சுழலும் சிவப்பு விளக்கை அகற்ற மத்திய அரசு முடிவுசெய்திருப்பது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அமைச்சர்கள், அதிகாரிகள் என்று கூறி கார்களில் சிவப்பு விளக்குகளை பொருத்திக்கொண்டு எல்லோரையும் குழப்புவது இனி இருக்காது. அதேபோல் கார்களில் ஊராட்சித் தலைவர், ஒன்றியப் பெருந்தலைவர் என்று போர்டு வைப்பது, ஆளுங்கட்சி கொடிகளைக் கட்டிக்கொண்டு வலம்வருவது போன்றவற்றையும் நிறுத்த வேண்டும். அமைச்சர்களும்கூடத் தங்கள் கார்களில் தேசியக் கொடிகளைத் தவிர எந்தக் கொடியையும் கட்டக் கூடாது என்று அறிவித்தால், இன்னும் நன்றாக இருக்கும்.

- பெ.குழந்தைவேலு, வேலூர் (நாமக்கல்).



தெற்கு சூடானைக் காப்போம்!

ஏப்ரல்19 அன்று வெளியான, ‘செயற்கைப் பஞ்சத்தால் சிக்கித் தவிக்கும் தெற்கு சூடான்’ என்ற செய்தியைப் படித்தவுடன் மனம் வேதனை அடைந்தது. வல்லரசுகள், இதைக் கண்டுகொள்ளாதது ஏன்? இந்தச் சூழலிலிருந்து தெற்கு சூடானை மீட்க இந்தியாவாவது தனது குரலை ஐக்கிய நாடுகள் சபையில் எழுப்ப வேண்டும். பல போர்கள் அப்பாவிப் பொதுமக்களைப் பலிவாங்கியுள்ளன. உலக வல்லரசுகள் பெரும்பான்மை மக்களுக்கு உணவு கிடைக்கவும், அமைதியான சூழல் நிலவுவதற்கும் உதவினால் என்ன? சக மனிதர்கள் பட்டினியால் இறக்கிறபோது, மற்றவர்கள் ஆடம்பரத்தில் திளைப்பது மனித சமூகமே வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம்.

- க.துள்ளுக்குட்டி, நூர்சாகிபுரம்.



பள்ளியில் வைக்க வேண்டிய வாசகம்

ஏப்ரல்19 அன்று வெளியான, ஆழி.செந்தில்நாதனின் கட்டுரையைப் படித்தேன். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, அவரவர் தாய்மொழியில் தொடங்க வேண்டும் என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது. தாய்மொழி - கற்றறியும் திறன் - தொடக்கக் கல்வி - உயர்தரக் கல்வி - அறிவுத் திறன் - மனித மூலதனம் - நாட்டின் பொருளாதார வளர்ச்சி இவை அனைத்தும் சங்கிலித் தொடரின் அடுத்தடுத்த கண்ணிகள். இந்த வரிகள் ஒவ்வொரு பள்ளியிலும், பணியிடத்திலும் வாசகமாக வைக்கப்பட வேண்டியவை.

- வின்சென்ட் அரசு, மின்னஞ்சல் வழியாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x