Published : 02 Sep 2015 10:38 AM
Last Updated : 02 Sep 2015 10:38 AM

இரு விளக்கங்கள்

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ‘வீடில்லா புத்தகங்கள்’ பகுதியில் ‘உருமாறும் கிராமங்கள்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் சில தகவல்கள் பிழையானவை.

1. ‘ஓர் இந்திய கிராமத்தின் கதை’ (Life in an Indian Village by T. Ramakrishna) என்ற தலைப்பில் வெளியான புத்தகத்தில் மகாபாரதத்தைத் தமிழில் எழுதிய நல்லாப்பிள்ளையின் பாரதம் வாசிக்கும் நிகழ்வு குறித்து இடம்பெற்றுள்ளது. எஸ். ராமகிருஷ் ணன் இதுபற்றி எழுதும்போது, நல்லாப்பிள்ளையின் கொள்ளுப்பேரன் தோட்டக்காடு ராமகிருஷ்ணபிள்ளை என்று குறிப்பிடுகிறார். இது தவறு. தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை யாதவர் வகுப்பைச் சார்ந்த வைணவ மரபினர். அவருடைய பரம்பரை, சந்திரகிரி வீழ்ச்சிக்குப் பிறகு சென்னைக்கு இடம்பெயர்ந்தது. டைரி புகழ் ஆனந்தரங்கப் பிள்ளையும் இவரது உறவினரே. நல்லாப்பிள்ளையோ 18-ம் நூற்றாண்டில், தமிழகத்தில் வாழ்ந்த சீர்கருணிகர் சைவ மரபைச் சார்ந்தவர். சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டி வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கீழ்முதலம்பேடு என்ற ஊரைச் சார்ந்தவர் நல்லாப்பிள்ளை. ஆகையால், அவர்கள் இருவருக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை.

2. இக்கட்டுரையில், ‘சென்னையை அடுத்த கேளம்பாக்கம்’ என்று குறிப்பிடுகிறார் ராமகிருஷ்ணன். தோட்டக்காடு ராமகிருஷ்ணபிள்ளை குறிப்பிடும் புத்தகம் பொதுவாக தொண்டை மண்டலப் பகுதியின் கிராம சமூக நிலையைக் குறிப்பிடும் ஆவணப் புத்தகம். அப்புத்தகத்தில் கேளம்பாக்கம் என்ற ஊர்ப் பெயரைப் புனைவுக்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளார் தோட்டக்காடு ராமகிருஷ்ணபிள்ளை.

மேற்கூறிய கருத்துகளை ‘ஓர் இந்திய கிராமத்தின் கதை’ நூலின் பதிப்பாசிரியராகத் தங்களது பார்வைக்குக் கொண்டுவருகிறேன்.

- ரெங்கையா முருகன்,சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x