Published : 01 Dec 2016 11:27 AM
Last Updated : 01 Dec 2016 11:27 AM

இப்படிக்கு இவர்கள்: சட்ட தினமும், கல்வெட்டு வாசகமும்!

மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு எழுதிய, “சட்ட தினம் உணர்த்தும் கடமைகள்” கட்டுரை கண்டேன். “அரசமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் நடைமுறைபடுத்தப்பட வேண்டும். நெறிகாட்டு வழிமுறைகள் சட்ட உரிமைகளாக மாற்றப்பட வேண்டும் என்ற நீதிபதியின் கருத்து வரவேற்கக்கூடியது என்றாலும் நெறிகாட்டு வழிமுறைகளில் (Directive Principles of State Policy) உள்ள பிரிவுகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி நீதிமன்றத்தை அணுக முடியாது என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உள்ளது.

அத்தீர்ப்பு பற்றிய விமர்சனம் கட்டுரையில் இல்லை. “சில நீதிபதிகளின் தனிப்பட்ட கருத்துக்களும், சோஷலிச அணுகுமுறையைக் கேலிக்கூத்தாக்கி விட்டன” என்ற நீதிபதியின் வாசகம் கல்வெட்டாகப் பதிக்கப்பட வேண்டிய ஒன்று. கட்டுரைக்கான புகைப்படத்தின் கீழ், “அரசியல் அமைப்புச்சட்ட வரைவுக்குழுவுடன் அதன் தலைவர் அம்பேத்கர்” என்று குறிப்பிட்டிருக்கிறது. தலைவர் அம்பேத்கர், உறுப்பினர்கள் சதயத்துல்லா, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், கே. எம். முன்ஷி, டி.டி.கிருஷ்ணமாச்சாரி மற்றும் கோபாலசாமி அய்யங்கார் ஆக மொத்தம் 6 பேர் அடங்கியதுதான் அரசியல் அமைப்புச்சட்ட வரைவுக்குழு. ஆனால் புகைப்படத்தில் 8 நபர்கள் இருப்பதால், அவர்களின் பெயர்களையும் வெளியிட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

-பொ.நடராசன், மேனாள் நீதிபதி, மதுரை.



மகத்தான பணி

பஞ்சாயத்தில் நடக்கும் வேலைகளில் காசு பார்க்கும் முனைப்போடு இருக்கிற பஞ்சாயத்துத் தலைவர்கள் மத்தியில், “கிராமத்துக் குழந்தைகளின் படிப்புக்காக என் சொத்தே அழிந்தாலும் பரவாயில்லை” எனச் சொன்ன முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் சுந்தர்ராஜைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. உயிர்ச்சூழல் சங்கிலி குறித்த விழிப்புணர்வைப் பள்ளிக் குழந்தைகளிடம் ஏற்படுத்துவதோடு, சிறப்பாகப் படிக்கும் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது என்பது உள்ளத்தைத் தொட்டது. நஞ்சுண்டாபுரம் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்குப் பாராட்டுக்கள். சிறப்பாக இயங்குகிற பஞ்சாயத்து அமைப்புகளைத் தேடி வெளிக்கொணருகிற டி.எல்.சஞ்சீவிகுமாரின் பணியும் மகத்தானது.

-பி.சரவணகணேசன், உறையூர், திருச்சி.



எளியவனின் நண்பன்

ஃபிடல் எலியனின் நண்பர் மட்டு மல்ல, கியூபாவின் எல்லா எளியவர்களின் நண்பராகவும் இருந் திருக்கிறார் (எலியனின் நண்பர் ஃபிடல் இறந்துவிட்டார்: நவ.29) இறுதி வரை. ஃபிடலின் கியூபா மீதான அளவு கடந்த நேசத்தையும், கியூபாவின் இன்றைய சாதனைகளையும் சுருக்க மாய் விளக்கிய நீதிராஜனுக்கு நன்றி.

-பாரதி, சித்தாலப்பாக்கம்.



அதிசய மனிதர் பாபா!

காந்தியைப் பற்றி அறிந்து கொள்ள இந்த ஒரு ஜென்மம் போதாது போலும். புதிது புதிதாகப் பல ரகசியங்களும், உண்மைகளும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அந்த வகையில், இதுவரை கேட்டிராத ஒரு அற்புதமான தகவல் தான், “காந்தியைப் பொறாமைப்பட வைத்த பாபா” எனும் (நவ.29) கட்டுரை. இந்தியாவுக்காகத் தன்னை அர்ப்பணித்தவர் மகாத்மா என்றால், தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக பாபா என்ற தலைவரும் இருந்தார் என்பது சந்தோஷமாக இருக்கிறது. ஊர்ப்பஞ்சாயத்தில் அவமானப்படுத்தியதையும் பொருட்படுத்தாமல், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பணியாற்றிய பாபாவைப் பார்த்து காந்தி பொறாமைப்படாமல் இருந்திருந்தால்தானே அதிசயம்?

-வெ.சென்னப்பன், அரூர், தருமபுரி.



துன்பம் வரும் நேரத்திலும்...

ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த வெளிநாட்டினர் இந்தப் பண நீக்கப் பிரச்சினையால் ராஜஸ்தான் மாநிலத்தில் உணவு கூட வாங்க முடியாமல் அவதிப்பட்டிருக்கிறார்கள் (நவ.28). தங்களுக்குத் தெரிந்த இசை நிகழ்ச்சி மூலம் பணம் வசூல் செய்து உடனடி தேவைகளை, சமாளித்தவிதம்-- பாராட்டுக்குரியது. இலவசமாகக் கேட்பதற்குப் பதில் அவர்கள் நடந்துகொண்ட விதம் மற்றவர்களும் பின்பற்றக்கூடியதும் கூட.

-அ.பட்டவராயன், திருச்செந்தூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x