Published : 26 Apr 2017 10:07 AM
Last Updated : 26 Apr 2017 10:07 AM

விவசாயிகள் பிரச்சினையை தமிழக அரசு டெல்லியிடம் பேச வேண்டும்!

மோசமான வறட்சியில் தமிழகம் சிக்கியிருக்கும் நிலையில், விவசாயிகளுக்காகத் திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டமைப்பு முன்னெடுத்த மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்குக் கிடைத்திருக்கும் வெற்றி மத்திய – மாநில அரசுகளுக்கு மக்கள் கொடுத்திருக்கும் எச்சரிக்கை என்று அவை உணர வேண்டும். பிரதான எதிர்க்கட்சியான திமுகவுடன் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி எனப் பல்வேறு கட்சிகளும் இணைந்து நடத்திய இந்தப் போராட்டத்தில் வணிக அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகளும் தார்மிக அடிப்படையிலான ஆதரவை அளித்திருந்தன. மக்களிடத்திலும் அமைதியான, அதேசமயம் அழுத்தமான ஆதரவு இருந்தது. தமிழக விவசாயிகளின் மோசமான நிலை மட்டுமின்றி, மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழலும் மக்களைக் கடும் கோபத்துக்கும் எரிச்சலுக்கும் ஆளாக்கியிருப்பதன் வெளிப்பாடாகவுமே இந்த மாநிலம் தழுவிய போராட்டத்தையும் அதற்கான மக்கள் ஆதரவையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

டெல்லி ஜந்தர்மந்தரில், ‘வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை ஆணையம் வழங்கப்பட வேண்டும்’ ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில், தமிழக விவசாயிகள் 41 நாட்கள் தொடர்ந்து போராடிவந்தனர். பிரதமர் மோடியை எப்படியேனும் சந்தித்துவிட முடியாதா; இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் பேசிவிட முடியாதா எனும் எதிர்பார்ப்பில் தேசிய ஊடகங்களையும் தலைவர்களின் கவனத்தையும் ஈர்க்க ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான போராட்ட முறைகளைக் கையாண்டனர். அயராத இந்தப் போராட்டங்களால் நாடு தழுவிய அளவில் அவர்களால் கவனத்தை ஈர்க்க முடிந்தாலும், கடைசி வரைக்கும் பிரதமர் மோடி விவசாயிகளைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கவில்லை. இந்நிலையில்தான், தமிழக முதல்வர் பழனிசாமி டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்தபோது, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைச் சந்தித்துப் பேசினார். அவர்களது கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்துவதாக உறுதியளித்தார். அதன் தொடர்ச்சியாகப் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டனர். 30 நாட்களுக்குள் தங்களது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், மே 25 முதல் மீண்டும் டெல்லியில் போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் அது தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் தமிழக அரசும் ஏனைய கட்சிகளும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டிய நேரமிது. இத்தனை காலமாக யாராலும் பொருட் படுத்தப்படாமல் இருந்த தமிழக விவசாயிகளின் துயரங்களைப் போக்க இந்தப் போராட்டம் ஒரு துருப்புச்சீட்டு. தமிழக மக்களின் உணர்வுகளையும் ஒற்றுமையையும் டெல்லிக்கு எடுத்துச் சொல்வதற்கான ஒரு வாய்ப்பு. தமிழக அரசு இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், மாநில அளவில் புதிய விவசாயக் கொள்கையை வகுப்பதற்கான முயற்சிகளிலும் உடனடியாகக் களமிறங்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x