Published : 27 Jun 2017 09:05 AM
Last Updated : 27 Jun 2017 09:05 AM

விவசாயிகளோடு கைகோப்போம்!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் கிளர்ந்தெழத் தொடங்கியிருக்கிறார்கள். ஒப்பீட்டளவில் வேளாண்மைக்குக் கவனம் கொடுக்கக் கூடிய, பாசனக் கட்டமைப்புகள் உருவாக் கத்தில், குறிப்பிடத்தக்க பங்காற்றியிருக்கும் மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்திலேயே விஸ்வரூபம் எடுத்துவரும் விவசாயிகளின் போராட்டம், இந்த விவகாரம் ஒரு பெரு நெருப்பாகக் கூடியது என்பதையே சுட்டிக்காட்டுகிறது. நெடு நாட்களுக்குப் பிறகு, எல்லா மாநிலங்களிலுமே விவசாயிகள் தங்கள் அரசியல் சார்பு நிலைகளைத் தாண்டி ஒன்றாக இணைந்து போராட்டக் களத்துக்கு வந்துகொண்டிருக் கிறார்கள் என்பதில் உள்ள கவனிக்க வேண்டிய விஷயம், இன்றைய அரசியல் களத்தின் மைய கவன வட்டத்தி லிருந்து விவசாயம் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதுதான்.

வயிற்றுக்குச் சோறிடும் துறை என்பதோடு, நாட்டிலேயே அதிகமானோருக்கு வேலை அளிக்கும் களமும் அது. நவீனத் தொழில், வேலைவாய்ப்புகள் காணாமல் போய்க்கொண்டிருக்கும் நாட்களில், விவசாயத்தின் மீதான கவனம் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால், தலைகீழாக விவசாயிகளை ஏதோ மோசடிக்காரர்கள்போலக் கட்டமைக்கும் வேலையை அரசாங்கம் செய்துகொண்டிருக்கிறது. சொந்தக் காரணங்களின் காரணமாகவே விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று சொல்வதன் மூலம், கொலைப் பழியிலிருந்து அரசு நழுவ முடியாது. வேளாண் கடன் தள்ளுபடி தொடர்பாக மத்திய அமைச்சர்களும் நிதியாளுமைகள் - வங்கியாளர்களும் பேசிவரும் பேச்சுகள் விவசாயிகள் மீதான துளி கரிசனத்தை வெளிப்படுத்தவில்லை.

பருவ மழை பொய்த்து, பாசன நீருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது மட்டும் கடன் சுமைக்கான காரணமல்ல. விவசாயத்துக்கான இடுபொருட்கள் தொடங்கி, விளை பொருட்களைச் சந்தைப்படுத்துதல் வரைக்கும் ஒவ்வொரு நிலையிலும் விவசாயிகள் பிரச்சினைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நெருக்கடியையே காரண மாக்கி, பாரம்பரியமான வேளாண் முறையிலிருந்து மரபணு அறிவியலின் அடிப்படையில் விவசாயத்தை நிறுவன மயமாக்கும் செயல்திட்டங்களும் அரங்கேறத் தொடங்கி யிருக்கின்றன. உணவுப் பொருட்களில் மரபணு மாற்றப் பயிர்கள் அனுமதிக்கப்படாது என்று உறுதியளித்த மத்திய அரசு, தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்கிறது. ஆய்வகத்திலிருந்து விளைநிலத்துக்கு என்று புதிய வேளாண் கொள்கைக்குத் திட்டமிடுகிறது மத்திய அரசு. உணவு வேண்டும், ஆனால் அதை உருவாக்கித் தரும் விவசாயிகள் வேண்டாம் என்ற நிலை நோக்கி அரசு நகர்கிறதோ என்ற கேள்வி எழுகிறது.

விவசாயிகள் பிரச்சினைகளில் தொடர்ந்து கவனம் செலுத்திவரும் ‘தி இந்து’ அடுத்து வரும் வாரங்களில், விவசாயிகள் பிரச்சினையை மீண்டும் ஒரு தொடர் விவாதமாக்க முனைகிறது. இம்முறை ‘விவசாயம் - நேற்று, இன்று, நாளை!’ என்பதாக இந்த விவாதம் அமையும். விவசாயிகள் பிரச்சினை தேசத்தின் பிரச்சினை. விவசாயிகளைக் காப்பதன் மூலமாகவே விவசாயத்தைக் காக்க முடியும். தேசத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்திட முடியும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x