Published : 31 Aug 2016 09:21 AM
Last Updated : 31 Aug 2016 09:21 AM

வாடகைத் தாய் முறையை சிக்கலாக்கியிருக்கும் மசோதா

வாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்திருக்கிறது. வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக ஐரோப்பியர்கள் தங்களுடைய குழந்தைகளைப் பெற்றுத் தர இந்தியப் பெண்களையே பெரிதும் நாடினர். பிழைப்புக்காக, அவர்களுடைய கருவைச் சுமந்து பெற்றுத் தரும் இந்திய வாடகைத் தாய்களுக்கு உரிய பணம் தரப்படாமல் இடைத்தரகர்கள் ஏமாற்றிய சம்பவங்கள் ஏராளம். சிறுநீரக தானம் போல இதுவும் ஒரு மோசடியாக மாறிவிட்ட சூழலில், இந்த மசோதா கொண்டுவரப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கது. ஆனால், பிரச்சினைகள் ஏற்படுத்தும் அம்சங்கள் இம்மசோதாவில் இருப்பதுதான் கவலை தருகிறது.

வணிகரீதியாக, அதாவது வெறும் பணத்துக்காக மட்டுமே அடுத்தவர் கருவைச் சுமந்து பிள்ளையைப் பெற்றுத் தருவதைத் தடை செய்கிறது இம்மசோதா. குழந்தை வேண்டும் என்று ஏங்கும் தம்பதியருக்காக, சுயநலம் ஏதுமில்லாமல் கருவைச் சுமக்க அனுமதிக்கலாம் என்கிறது. மேலும், இந்திய வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற நினைக்கும் கணவன்-மனைவி இருவரும் இந்தியர்களாக இருக்க வேண்டும்; திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆன பிறகும் குழந்தைப் பேறு இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகள் இம்மசோதாவில் உள்ளன. குழந்தை இல்லாத இணையருக்கு நெருக்கமான உறவினரான பெண் மட்டுமே வாடகைத் தாயாக இருக்க முடியும். வெளிநாட்டவர்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள், திருமணம் ஆகாத இணையர், வாழ்க்கைத் துணை இல்லாத தனி ஆண் அல்லது பெண் ஆகியோர் இப்படி குழந்தை பெற அனுமதி இல்லை என்றும் இம்மசோதா குறிப்பிடுகிறது.

வாடகைத் தாயாகச் செயல்படுவது 2002 முதலே சட்டப்பூர்வமானதாக்கப் பட்டுவிட்டது. எனினும், பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்குக் குழந்தையைப் பெற்றுத்தரும் ‘மருத்துவ வணிகச் சந்தை’ எந்தக் கட்டுப்பாட்டுக்கும் எளிதில் உட்படாமல் இருந்தது. வாடகைத் தாயாகச் செயல்படும் பெண்ணின் உரிமைகள், அவரது உடல் நலம் சார்ந்த அக்கறை போன்றவற்றில் எந்த கவனமும் செலுத்தப்படவில்லை. வாடகைத் தாய்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் அந்தத் தாய்க்கும் என்ன உறவு, அந்தக் குழந்தையிடம் தாய்க்கு என்ன உரிமை என்பதெல்லாம் வரையறுக்கப்படவில்லை.

ஜப்பானைச் சேர்ந்த கணவன் மனைவிக்கு வாடகைத் தாய் மூலம் இந்தியாவில் பிறந்த மாஞ்சி யமடா குழந்தை தொடர்பாக எழுந்த சிக்கலை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். கருவை வளர்க்கத் தொடங்கியபோது இணைந்திருந்த ஜப்பானிய கணவனும் மனைவியும், இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மணவிலக்கு பெற்றுக்கொண்டனர். இதையடுத்து அந்தக் குழந்தை இனி யாரை அம்மா என்று அழைப்பது என்ற கேள்வி எழுந்தது. வாடகைத் தாய்க்குப் பிறக்கும் குழந்தை சட்டப்பூர்வமாக யாருடைய குழந்தை என்ற கேள்வியும் விசுவரூபம் எடுத்தது. இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கவே இம்மசோதா கொண்டுவரப்படுகிறது என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இம்மசோதாவால் சிக்கல்கள் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.

கருவைச் சுமப்பவர் உறவினராக இருந்தாலோ, பணம் வாங்கிக் கொள்ளாமல் பெற்றுக் கொடுத்தாலோ அனுமதிக்கலாம் என்று இம்மசோதா சொல்வது ஏற்கத் தக்கதாக இல்லை. பணம் வாங்காமல் அதே சமயம் குடும்பத்தவர்களின் நெருக்குதல் காரணமாகக் கருவைச் சுமக்க நேரும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு? உறுப்பு தானத்தைக் கட்டுப்படுத்தவும், கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை ஸ்கேன் செய்து கூறாமல் இருக்கவும் இயற்றப்பட்ட சட்டங்கள் வலிமையுடன் அமல்படுத்தப்படாத நிலையில் புதிய மசோதா சட்டமானாலும் அதே கதிதான் ஏற்படும் என்ற அச்சமே மிஞ்சுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x