Published : 28 Oct 2016 08:57 AM
Last Updated : 28 Oct 2016 08:57 AM

ரஸவாதி லா.ச.ரா.வுக்கு வணக்கங்கள்!

தமிழில் தலைசிறந்த கதைசொல்லிகளில் ஒருவரான லா.ச.ரா. என்றழைக்கப்படும் லால்குடி சப்தரிஷி ராமாமிர்தத்தின் நூற்றாண்டு இது.

உலகத் தரத்திலான கதைகளை எழுதியிருக்கும் தமிழ்ப் படைப்பாளிகளில் லா.ச.ரா.வுக்குத் தனி இடம் உண்டு. அந்தத் தனி இடத்தை உருவாக்குவதில் முதன்மையான பங்கு வகிப்பது அவருடைய மொழி.

லா.ச.ரா.வின் தமிழ் யாருடனும் ஒப்பிட முடியாதது. ‘இது இருளின் நரம்பு, எண்ணத்தின் மணிக்கயிறு, வானத்தின் நீளத்தினின்று உரித்த பொற்சரடு’என்று அவர் தொடும் கவித்துவமான படிமங்களே ஒரு உலகை சிருஷ்டித்துவிடும். கதை தரும் ஒட்டுமொத்த அனுபவம் ஒருபுறம் இருக்க, இத்தகைய மொழி தரும் அனுபவம் வேறு ஒரு உலகுக்கு வாசகரைத் தூக்கிச் சென்றுவிடும். கதை, கதாமாந்தர்கள், கதையினூடே வெளிப்படும் வாழ்க்கைப் பார்வை, படைப்பின் வழியே வாசகருக்குக் கிடைக்கக்கூடிய தரிசனம் ஆகியவை நம்மைத் தொடுவதற்கு முன்பே லா.ச.ரா.வின் பிரத்யேகமான மொழி நம்மை வசீகரித்து ஆட்படுத்திக்கொள்ளும். அவரது மொழியே அவரது தரிசனத்தின் ஊடகம். ஒரு விதத்தில் அதுவே அதன் ஆதாரம்.

இத்தகைய வசீகரமான மொழி என்னும் அடித்தளத்தின் மேல் அவர் கட்டமைக்கும் புனைவுலகமும் முன்மாதிரிகள் எதுவுமற்ற தனி உலகம்தான். மொழி, சம்பவக் கோவைகள், சம்பவங்கள் காட்டப்படும் விதம், எண்ணங்களும் நிகழ்வுகளும் மாறிமாறிப் பின்னப்படும் விதம், உரையாடல்களின் தனி மொழி, தற்கணத்துடன் மோதும் உணர்வுகளில் தெறிக்கும் பழைய நினைவுகளின் கனம், கதையை விஸ்தாரமாக வளர்த்துக்கொண்டு போனாலும் சட்டென்று முடித்துவிடும் சூட்சுமம் ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனித்தால் லா.ச.ரா.வின் படைப்புலகை ஒருவாறு அறியலாம். புறச் சலனங்களைக் காட்டிலும் அகச் சலனங்களுக்கு லா.ச.ரா. அதிக முக்கியத்துவம் கொடுத்தார். புறக் காட்சிகளையும் நிகழ்வுகளையும் அகப் பயணத்துக்கான தூண்டுதலாகவே அவர் பார்த்தார். அக உலகின் ரகசியங்களை, மறைபொருட்களை ஆராயவே அவர் புற உலகைத் தொட்டுக்கொண்டார். கண்ணுக்குத் தெரியாத அக உலகை மிகத் தெளிவாகத் துலங்கச்செய்தார் அந்த ரஸவாதி. மந்திரம் போன்ற மொழியும் தத்துவப் பார்வையும் கலந்து அவர் தரும் பயணம் நாம் அறிந்த உலகில், நாம் அறியாத பரிமாணங்களை உணர்த்துவதாகும்.

நவீன தமிழின் பெருமைமிகு பொக்கிஷங்களில் ஒன்றாக லா.ச.ரா.வின் எழுத்தை நாம் கொண்டாடலாம். தன்னுடைய தனித்துவமான மொழி, கதையாடல், அனுபவத்தைத் தரிசனமாக்கும் ரசவாதம் ஆகியவற்றால் தமிழ்ப் புனைவுலகைச் செழுமைப்படுத்திவிட்டுச் சென்றிருக்கும் நவீனத் தமிழின் மாமணிகளுள் ஒருவர் லா.ச.ரா. அவரது நூற்றாண்டில் அவரை நினைவுகூர்வதிலும் அடுத்த தலைமுறைக்கு அவரைக் கடத்தும் முயற்சிகளிலும் ‘தி இந்து’உவகை அடைகிறது. ரஸவாதிக்கு வணக்கங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x