Published : 02 May 2016 08:46 AM
Last Updated : 02 May 2016 08:46 AM

பொது நுழைவுத் தேர்வு மறுபரிசீலனை தேவை

மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவது அரசியல் சாசனத்துக்கு மாறானது என்றும் கிராமப்புறத்து மாணவர்களைவிட, நகரத்து மாணவர்கள் சலுகையடைவார்கள் என்றும் கூறி 2013-ல் அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பு ‘அவசரகதியாக’ வழங்கப்பட்டுவிட்டதாக கடந்த ஏப்ரல் 28 அன்று உயர் நீதிமன்றமே திரும்பப்பெற்றுள்ளது. அதன்விளைவாக, ஞாயிறு அன்று தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டிருக்கிறது. பொது நுழைவுத் தேர்வு நடத்துவதிலிருந்து விலக்கு வேண்டும் என்று கோரித் தமிழகம் தாக்கல் செய்த மனுவை வியாழன் அன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆந்திரம், தெலங்கானா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களும், கர்நாடகா மருத்துவக் கல்லூரிகள் சங்கம், சி.எம்.சி. வேலூர் ஆகியவையும் பொது நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

டாக்டர் அனந்தகிருஷ்ணன் கமிட்டியின் அறிக்கையை ஏற்று, ஏழை மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில், தமிழகத்தில் 2007-ல் இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதற்கான சட்டம் இயற்றப்பட்டதுடன், குடியரசுத் தலைவரின் அனுமதியும் கிடைத்தது. தமிழகத்தின் இந்தச் சட்டம் அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளது. அப்போது முதல் தமிழகத்தில் பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இது அடிப்படையில், மாநில அரசு தனக்குள்ள உரிமைகளின் பேரில் எடுத்துக்கொண்ட நடவடிக்கை.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர ஆண்டுதோறும் ஏறத்தாழ 35 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். தமிழகத்தில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் எம்பிபிஎஸ் படிப்புக்கான 2,655 இடங்கள் இருக்கின்றன. இதில் 398 இடங்கள் (15%) அகில இந்திய ஒதுக்கீட்டுக்குச் சென்றுவிடும். எஞ்சிய 2,257 இடங்கள், தமிழக அரசின் ஒதுக்கீட்டுக்குக் கிடைக்கும்.

இந்தப் பின்னணியில், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்வி இடங்களுக்கும், தேசியத் தகுதி காண் மற்றும் நுழைவுத் தேர்வை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பது மாணவர்களிடம் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது.அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு என்பது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் இருக்கும். இதனால், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் வெற்றி பெறுவது கடினம்.

பல்வேறு மொழிகள், பாடத்திட்டங்கள், பல்வேறு கல்வி முறைகள் உள்ள ஒரு நாட்டில், பொதுப்பள்ளி முறை இல்லாத ஒரு சூழலில், மாநில அரசுகளின் மருத்துவக் கல்வி இடங்களுக்கும் அகில இந்திய அளவில் தகுதிகாண் - நுழைவுத் தேர்வைத் திணிப்பது நாட்டின் ஒற்றுமைக்கு நல்லதல்ல. இந்திய மருத்துவம் படிக்க சம்ஸ்கிருதம் கட்டாயம் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. நுழைவுத் தேர்வுகளே இல்லாத காலமும் இருந்தது. அத்தகைய நிலையைத் தாண்டி முன்னேறிச் செல்வதற்காகச் செய்யப்படும் எந்தவொரு நடவடிக்கையும் அனைத்துப் பிரிவு மக்களும் மருத்துவப் படிப்பில் நுழைவதைத் தடுத்துவிடாத அளவுக்கு அக்கறையுடன் கூடியதாக இருக்க வேண்டும்.

இந்திய அரசியல் சாசனம் வெளிப்படுத்துகிற ஜனநாயகத்தின் ஆன்மாவே சமூக நீதிதான். அப்படிப்பட்ட சூழலில், சமநிலையில் இல்லாத மாணவர்களுக்கு இடையே ஒரே விதமான போட்டியை வைப்பது சரியல்ல. சமூக நீதிக்கு எதிரான எதுவும் ஜனநாயகத்தை முடக்குவதாகவே முடியும். கடைக்கோடி இந்தியனுக்கு எது பயனுள்ளது என்பதைக் கூர்மையான முறையில் மனதில்கொண்டே தனது அடுத்த காலடிகளை இந்திய ஜனநாயகம் எடுத்துவைக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x