Published : 27 May 2015 08:33 AM
Last Updated : 27 May 2015 08:33 AM

நல்ல நாட்களுக்காகக் காத்திருக்கும் தேசம்

தன்னுடைய ஆட்சியின் முதலாண்டை முடித்து இரண்டாமாண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது நரேந்திர மோடியின் பாஜக தலைமையிலான தேஜகூ அரசு.

பொதுவாக, ஆட்சியாளர்கள்தான் தங்களுடைய ஆட்சிப் பொறுப்பேற்பின் ஆண்டு நிறைவை மக்களுக்கு நினைவூட்டுவார்கள். இந்த ஆட்சியைப் பொறுத்த அளவில், அரசாங்கத்தை முந்திக்கொண்டு ஏனையோர் - முக்கியமாக எதிர்க் கட்சிகளும் ஊடகங்களும் - முன்னிற்பதைப் பார்க்க முடிகிறது. இதற்கு நியாயமான காரணமும் இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு மட்டும் அல்லாமல், தேர்தல் முடிந்தும் தொடர்ந்துகொண்டிருக்கும் அரசின் பிரச்சாரம் அப்படி. ஒருவர் மேடையில் நின்று பார்வையாளர்களைப் பார்த்து, சதா தன் புஜபலத்தைத் தட்டிக்காட்டிக்கொண்டே இருக்கும்போது, பார்வையாளர்களும் அவருக்கான நியாயத்தைச் செய்யத் தருணம் பார்த்துக்கொண்டிருப்பார்கள்தானே? இதோ, ஓராண்டு முடிந்துவிட்டது, தருணம் வந்துவிட்டது. மக்கள் தம் எதிர்வினையாற்றத் தொடங்கிவிட்டார்கள்.

மோடி அரசின் முதலாண்டு எப்படி?

ஆதரவாளர்களின் விமர்சனம் இது: “ஓராண்டுக்கு முன்பிருந்ததைவிடப் பொருளாதாரம் இப்போது நல்ல நிலையில் இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு அதிகரித்திருக்கிறது. மூலதன வருகை அதிகபட்ச அளவை எட்டியிருக்கிறது. மனு செய்வதும் அரசு அங்கீகரிப்பதும் இணையத்தின் வழி நடைமுறையாக்கப்பட்டிருக்கிறது. நிலக்கரி வயல்கள், அலைக்கற்றை அலைவரிசை ஏலங்கள் வெளிப்படையாக நடைபெற்றன. கடந்த 23 ஆண்டுகளில் முதல் முறையாக 8.3% அளவுக்கு நிலக்கரி உற்பத்தி அதிகரித்திருக்கிறது. இதனால் பல மின்னுற்பத்தி நிலையங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. விளிம்புநிலை மக்களை முறைசார் நிதியாள்கைக்குள் கொண்டுவரும் ‘ஜன் தன்’ திட்டத்தின் மூலம் ஆறே மாதங்களில் 15 கோடிப் பேருக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டிருக்கிறது. மிகக் குறுகிய நாட்களில் ரூ. 12 ஆண்டு சந்தாவுக்கு ரூ. 2 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கும் ‘சுரக்‌ஷா பீம யோஜனா’ திட்டத்தில் 5.57 கோடிப் பேர் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். ரூ.330 ஆண்டு சந்தாவுக்கு, ரூ. 2 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கும் ‘ஜீவன் ஜோதி யோஜனா’ திட்டத்தில் 1.7 கோடிப் பேர் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேல் கடந்த 12 மாதங்களில் அரசின் மீது ஊழல் புகார் ஏதும் இல்லை.”

எதிரிகளின் விமர்சனம் இது: “தன்னுடைய நிர்வாகக் கொள்கை யாக, ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்’ என்பதை அறிவித்து ஆட்சிக்கு வந்த அரசு, இன்றைக்குக் கிட்டத்தட்ட ஒரு நபர் அரசாகி விட்டது. பிரதமர் அலுவலகம் சர்வ அதிகாரங்களின் பீடமாகக் காட்சி யளிக்கும் நிலையில், பிரதமரோ நாடாளுமன்றத்துக்கு அந்நியராக, விவாதங்களிலிருந்து விலகியவராக இருக்கிறார். வளர்ச்சியின் பெயரால், பெருநிறுவனங்கள் / பெருமுதலாளிகளுக்கான பிரதிநிதியாக அரச நிர்வாகத்தை மாற்றியமைத்திருப்பதோடு, சீர்திருத்தத்தின் பெயரால் விளிம்புநிலை மக்களின் ஆதாரங்களை அழிக்கிறது. சமூக நலத் திட்டங்களில் தன்னுடைய பொறுப்புகளை அரசு கைகழுவுகிறது. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், மொத்த மானியச் செலவின் பங்கு 2.1%-லிருந்து 1.7% ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. கல்வித் துறைக்கான ஒதுக்கீடு ரூ.82,771 கோடியிலிருந்து ரூ.69,074 கோடியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலனுக்கான ஒதுக்கீடு ரூ.35,163 கோடியிலிருந்து ரூ.29,653 கோடியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டில் ரூ.5,000 கோடி; பட்டியல் இனத்தவருக்கான ஒதுக்கீட்டில் ரூ.12,000 கோடி; மகளிருக்கான ஒதுக்கீட்டில் ரூ. 20,000 கோடி; ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட ஒதுக்கீட்டில் ரூ. 8,000 கோடி குறைக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல் எங்கும் காவிமயமாக்கல் சூழ்கிறது; அரசு கொண்டுவரத் துடிக்கும் நிலம் கையகப்படுத்தும் சட்டம் காலாகாலத்துக்கும் இந்திய வேளாண்மையையும் விளிம்புநிலை மக்களையும் வஞ்சிக்கும் கொடூரமான தாக்குதல்.”

இந்த இரு விமர்சனங்களிலுமே உண்மை இருக்கிறது. இரு விமர்சனங்களையும் உற்றுநோக்குபவர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரியும். இந்த அரசாங்கம் செயல்படுகிறது; ஆனால், யாருக்காகச் செயல்படுகிறது என்பதில் சிக்கல் இருக்கிறது. வளர்ச்சி, வளர்ச்சி என்று மூச்சுக்கு முன்னூறு முறை கூறுகிறார்கள் பிரதமரும் அவருடைய சகாக்களும். அதற்காகக் கடுமையாக உழைக்கவும் செய்கிறார்கள். ஆனால், எதை அவர்கள் வளர்ச்சியாகக் கருதி உழைக்கிறார்கள் என்பதில் பெரும் சிக்கல் இருக்கிறது.

பிரதமர் மோடி தன்னுடைய முதல் ஆறு மாதங்களில், ‘இந்த அரசாங்கம் பெருநிறுவனங்களுக்கேற்ற அரசாங்கமாகச் செயல்படுகிறது’ எனும் குற்றச்சாட்டைப் பொருட்படுத்தவில்லை. இன்னும் சொல்லப்போனால், தன்னைத் தொழில் துறையின் பிரதிநிதியாகக் காட்டிக்கொள்வதில் அவரே பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், ஓராண்டு முடியும்போது, அந்த விமர்சனத்தின் சூடு அரசாங்கத்தைப் பொசுக்க ஆரம்பிப்பதை உணர முடிகிறது. முதலாண்டு நிறைவையொட்டி, நாட்டு மக்களுக்கு மோடி எழுதியிருக்கும் கடிதத்தில் இடம்பெற்றிருக்கும், ‘அடித்தட்டு மக்கள் நலனே எங்கள் தாரக மந்திரம்’ எனும் வாக்கியம் அந்தச் சூட்டின் வெம்மையை நன்றாகவே வெளிப்படுத்துகிறது. பிரதமர் மோடியும் அவருடைய சகாக்களும் ஒரு விஷயத்தை உணர வேண்டும். ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது வெறும் நிதி சம்பந்தபட்ட விஷயம் மட்டும் அல்ல. சகலருக்குமான, சகலத்திலுமான வளர்ச்சியைத் தொழில் துறை மட்டுமே தந்துவிட முடியாது. மன்மோகன் சிங் ஆட்சியின் மோசமான காலகட்டத்தின் விளைவாக மோடியைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதாலேயே இந்த ஆட்சியை என்றென்றைக்கும் அந்த ஆட்சியுடன் ஒப்பிட்டு அரசாங்கம் ஆறுதலடைந்துகொள்ள முடியாது. மக்கள் நீங்கள் சொன்ன வார்த்தைகளுக்கும் முன்னெடுக்கும் செயல்பாடுகளுக்கும் இடைப்பட்ட இடைவெளியைக் கொண்டே உங்களை மதிப்பிடுவார்கள். தொழில் துறை மட்டும் அல்ல; ஒட்டுமொத்த தேசமும் நீங்கள் சொன்ன நல்ல நாட்களுக்காகக் காத்திருக்கிறது. அது வெற்று முழக்கங்களை அல்ல; ஆக்கபூர்வமான செயல்பாடுகளையே உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x