Published : 20 Jan 2017 10:37 AM
Last Updated : 20 Jan 2017 10:37 AM

தோனி விட்டுச் செல்லும் தடங்கள்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், 20 ஓவர் போட்டிகள் ஆகியவற்றுக்கான அணிகளின் தலைமைப் பொறுப்பிலிருந்து மகேந்திர சிங் தோனி விலகியிருக்கிறார். மட்டைவீச்சில் மட்டுமின்றி, தலைமைப் பொறுப்பிலும் அலாதியான திறமைகள் கொண்ட விராட் கோலியிடம் தலைமைப் பொறுப்பு போய்ச் சேர்ந்திருப்பதால், தோனியின் விலகலால் அதிர்ச்சியோ கவலையோ ஏற்படவில்லை. எனினும், தோனி ஏற்படுத்தும் வெற்றிடம் அவ்வளவு எளிதில் நிரப்ப முடியாதது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 20 ஓவர் போட்டி, சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய மூன்று சர்வதேசப் போட்டிகளிலும் கோப்பையை வென்ற அணியின் தலைவர் தோனி. இந்த வெற்றிகளில் ஆட்டக்காரர் என்னும் முறையிலும் தலைவன் என்ற முறையிலும் அவரது பங்களிப்பு கணிசமானது. ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் அவருடைய உள்ளுணர்வு மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, வெற்றிகளைத் தேடித் தந்திருக்கிறது.

நெருக்கடியின்போது தோனி ஆழ்ந்து யோசித்துச் செயல்படுவார். தான் மட்டும் அமைதியாக இல்லாமல் அணியையும் அதே மனநிலையில் வைத்திருப்பார். ஆட்டத்தின் முடிவுக்கு நான்தான் பொறுப்பு என்பதால், கவலையின்றி விளையாடுங்கள் என்று ஊக்குவிப்பார். பொறுப்பின் சுமையைத் தான் எடுத்துக்கொண்டு, சுதந்திரமான ஆட்டம் என்னும் சலுகையை மற்றவர்களுக்கு வழங்குவது தோனியின் பண்பு.

தோனியைத் தலைவர் பதவியிலிருந்து விலக்குவதோ, விலகும்படி கேட்பதோ கிரிக்கெட் வாரியத்துக்கு மிகுந்த தர்மசங்கடமான நிலைமையாகும். இதைப் புரிந்துகொண்டு தானாகவே விலகியிருக்கிறார் தோனி. இந்திய கிரிக்கெட் இப்போதுள்ள நிலையில் தன்னலம் கருதாது, துணிச்சலாக இந்தத் தெளிவான முடிவை எடுத்திருக்கிறார்.

கோலியின் தலைமையில் அணி டெஸ்ட் பந்தயங்களில் வெற்றிகளைக் குவித்துவருகிறது. ஒருநாள் போட்டிகளிலும் அணியைக் கரைசேர்க்கும் பொறுப்பைக் கோலி செவ்வனே செய்துவருகிறார். அவருடைய தலைமைப் பாணி தோனியிடமிருந்து வேறானது. இந்நிலையில் டெஸ்ட் அணிக்கும் இதர போட்டிகளுக்கான அணிகளுக்கும் வெவ்வேறு தலைவர்கள் இருப்பது அணியின் ஒட்டுமொத்த அணுகுமுறையில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். இந்தியச் சூழலில் இரட்டைத் தலைமை என்பது சரிப்பட்டு வராது என தோனி கூறியிருப்பதிலிருந்து அவர் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டிருப்பவர் என்பது தெளிவாகிறது.

இந்த ஜூலையில், 36 வயதை எட்டும் தோனியின் இன்னிங்ஸ் ஆட்டக்காரர் என்னும் முறையிலும் ஓரிரு ஆண்டுகளில் முடிவுக்கு வந்துவிடலாம். எனினும், தலைவன் என்ற முறையிலும் ஆட்டக்காரர் என்ற முறையிலும் களத்தில் அவர் விட்டுச் சென்ற தடங்கள் அழியாது. நெருக்கடியில் அசராமல் நிற்பது, வெற்றி- தோல்விகளில் தடுமாறாமல் இருப்பது, சிக்கல் வரும்போது முன்னணியில் நின்று போராடுவது, தோல்விக்குப் பொறுப்பேற்பது, ஆட்டக்காரர்களின் ஆகச் சிறந்த திறமையை வெளிப்படுத்த உதவுவது ஆகியவை தோனியின் தனிப்பெரும் குணங்கள். இவை இந்திய கிரிக்கெட்டுக்கு அளப்பரிய பங்களிப்பைச் செலுத்தியுள்ளன. இந்தப் பங்களிப்புக்காக தோனி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் என்றென்றும் நினைவுகூரப்படுவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x