Published : 28 Jun 2016 08:57 AM
Last Updated : 28 Jun 2016 08:57 AM

ஜவுளித் துறையினர் பொறுப்பேற்க வேண்டிய இரு விஷயங்கள்!

ஜவுளித் தொழிலுக்கு உத்வேகம் அளிக்கும் அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு. துணிகள் உற்பத்தி, ஆயத்த ஆடைகள் தயாரிப்பு உள்ளிட்ட ஜவுளித் தொழிலின் எல்லாப் பிரிவுகளிலும் புதிய முதலீடுகளுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் எனும் அத்துறையினரின் கோரிக்கையைக் கொஞ்சமேனும் இந்த அறிவிப்புகள் உள்வாங்கிக்கொண்டிருக்கின்றன.

சீனாவில் தொழிலாளர்களின் சம்பள விகிதம் அதிகரித்தவண்ணம் இருக்கிறது. இதன் விளைவாக, சீன உற்பத்தித் துறையில் நடக்கும் மாறுதல்கள் முதலீட்டாளர்களின் கவனத்தை வேறு பக்கங்களை நோக்கியும் திருப்புகிறது. சீன உற்பத்தித் துறையிலும் ஏற்றுமதித் துறையிலும் ஏற்பட்டுவரும் தேக்கமானது ஏனைய ஆசிய நாடுகளுக்கு - குறிப்பாக தெற்காசிய நாடுகளுக்குப் பெரிய வாய்ப்பாக உருமாறியிருக்கிறது. இதற்கேற்ப வங்கதேசம், வியட்நாம் என்று ஜவுளித் தொழிலில் புதிய வாய்ப்புகளை ஈர்க்கும் ஆர்வத்திலுள்ள நாடுகளின் உற்பத்தியாளர்கள், சூழலைத் தமதாக்கிக்கொள்ளத் தேவையான வேலைகளில் இறங்கிவிட்டனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தைகளில் ஏற்கெனவே இதற்கான போட்டி தொடங்கிவிட்டது.

இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்து அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் ஜவுளித் தொழிலுக்கு முக்கியமான இடம் உண்டு. ஆனால், ஏகப்பட்ட சிக்கல்களுக்கு இடையில், மூச்சுத்திணறும் சூழலிலேயே அது இயங்கிக்கொண்டிருக்கிறது. மன்மோகன் சிங் ஆட்சிக் காலகட்டத்தில் சில உத்வேக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், அது முழு உற்சாகத்துக்கு வழிவகுக்கவில்லை. இப்படியான சூழலில், மத்திய அரசு எடுத்திருக்கும் சமீபத்திய நடவடிக்கைகள் சர்வதேச அளவில் உருவாகியுள்ள வாய்ப்பை இந்திய ஜவுளித் துறையினர் எதிர்கொள்ள உதவியாக அமையும். ஆடைத் தயாரிப்புத் தொழிலகங்களுக்குக் கிடைக்கும் மானியத்தின் வீதம் 15% ஆக இருந்தது 25% ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. ரூ.5,500 கோடி அளவுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் அவர்களுக்கு உற்சாகம் அளிக்கக் கூடியது; அவர்களுடைய நீண்ட நாள் கோரிக்கை இது.

ஜவுளித் துறை பீடுநடை போடக் கூடிய சூழல் உருவாகும் இந்த நேரத்தில், இரு விஷயங்களைச் சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது. 1.இத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் நலன், 2. சுற்றுச்சூழல் அக்கறை. ஆடைகள் உற்பத்தி அதிகரிக்கும் காலத்தில், தொழிலாளர்களின் வேலைநேரத்தைக் கையாளுதல் ஒரு சவால். 8 மணி நேரத்துக்கு மிகாமல் தொழிலாளர்களை வேலைவாங்கும்போது, கூடுதல் பணிக்கான ஆள் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள ‘குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமான வேலைவாய்ப்பு’ எனும் முறையை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. அதேசமயம், இத்தகைய முறையில் பணியமர்த்தப்படுபவர்களும் அக்காலக்கட்டத்தில் நிரந்தரத் தொழிலாளர்களாகவே கருதப்படுவர். இவர்களுக்கு சட்டரீதியான அனைத்து உரிமைகளையும் கிடைக்கச் செய்ய வேண்டும். ஏற்கெனவே இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் தொழிலாளர்கள் நலன்களும் உயர்த்தப்பட வேண்டும். இதேபோல, அந்நியச் செலாவணியின் பெயரால், சுற்றுச்சூழலை நாம் பலி கொடுத்துவிடக் கூடாது. ஏற்கெனவே ஜவுளித் துறை சார்ந்து நாம் நிறைய விலை கொடுத்திருக்கிறோம். இனியும் அப்படி நடக்காமல் உண்மையான வளர்ச்சியை நோக்கி நகர்வதற்கான வழிமுறைகள் கையாளப்பட வேண்டும்.

இந்த இரு விஷயங்களுக்குமான பொறுப்பு ஜவுளித் துறைக்கானது. அதை உறுதிசெய்ய வேண்டிய கடமை அரசுக்கானது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x