Published : 28 Feb 2015 08:53 AM
Last Updated : 28 Feb 2015 08:53 AM

செயல்தான் முக்கியம்

மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்துள்ள ரயில்வே நிதிநிலை அறிக்கையில் ஆர்ப்பாட்டமான அறிவிப்புகள் ஏதும் இல்லை. புதிய எக்ஸ்பிரஸ், மெயில் ரயில்கள் பற்றிய அறிவிப்புகள் கிடையாது. புதிய ரயில்வே தடங்கள்குறித்த அறிவிப்புகளும் இல்லை. இது வழக்கமாகத் தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையாகவும் இல்லை.

கடந்த சில ஆண்டுகளாக ரயில்வே துறை சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் சூழலில், இந்த நிதிநிலை அறிக்கை வெளியாகியிருக்கிறது. சூழலில் சற்றே நம்பிக்கை வெளிச்சத்தை இந்த நிதிநிலை அறிக்கை பாய்ச்சுகிறது. இப்போது ரயில் பயண அடர்த்தி மிகுந்த மார்க்கங்களில் காணப்படும் நெரிசல்களைக் குறைக்கவும், குறைந்த செலவில், கூடுதலாக லட்சக் கணக்கான பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையிலும் அமைச்சர் திட்டங்களைத் தீட்டியிருக்கிறார். ரயில்களை உபயோகிக்கும் பயணிகள், சரக்கு அனுப்புவோர் ஆகியோரின் நிரந்தரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறார். ரயில்வே துறைக்கான நிதியைத் திரட்டும் ஆற்றல் அதனிடம் குறைவு என்பதுடன் மத்திய அரசாலும் அதிகம் உதவ முடியாத நிலை இருப்பதைக் கருத்தில் கொண்டு, திட்டங்களுக்கான நிதியைச் சுயமாகத் திரட்ட மாற்று வழிகளையும் யோசித்திருக்கிறார். ரயில் பயணிகளுக்கான வசதிகளை அதிகப்படுத்தாமல் கட்டண உயர்வை மேற்கொள்வது சரியல்ல என்பதால், கட்டணத்தை உயர்த்தவில்லை என்று அமைச்சர் கூறியிருக்கிறார். அதே வேளையில், சரக்குகளில் சிலவற்றின் மீதான கட்டணங்களைச் சிறிதளவுக்கு உயர்த்தியிருக்கிறார்.

நிதிநிலை அறிக்கை பாராட்டுதலுக்குரிய அம்சங்களைக் கொண்டிருக்கிறது. ஆனால், இதை நிறைவேற்றத் தேவைப்படும் நிதி, தொழில்நுட்ப நிபுணத்துவம் போன்றவற்றைத் திரட்டுவது மிகப் பெரிய சவாலாகத்தான் இருக்கப்போகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.8.56 லட்சம் கோடியைத் திரட்ட உத்தேசித்திருக்கிறார். இவ்வளவு பெருந்தொகை எப்படிக் கிடைக்கப்போகிறது என்று மலைப்பாக இருக்கிறது. இந்தியக் கடலோரப் பகுதிகளையும் வட-கிழக்கு மாநிலங்களையும் ரயில் பாதைகள் மூலம் இணைக்கத் திட்டமிட்டிருக்கிறார். அத்துடன் இரட்டைப் பாதை, மூவரிசைப் பாதை, நான்கு வரிசைப் பாதை ஆகியவற்றையும் ஏற்படுத்த முடிவு செய்திருக்கிறார். புதிய திட்டங்களை அறிவிப்பதைவிட, ஏற்கெனவே அறிவித்து, தொடங்கி முற்றுப் பெறாத பணிகளை முடிக்க முனைப்பு காட்டப்படும் என்ற உறுதி வரவேற்கத் தக்கது. ரயில்வேக்கு வரும் வருவாயில் 90 சதவீதத்துக்கும் மேல் இயக்கச் செலவுகளுக்கே செலவாகிவிடுகிறது என்பது ஆரோக்கியமான நிலை அல்ல. இதைப் படிப்படியாகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

ரயில்வே துறைக்கான திட்டங்களுக்கு நிதி திரட்ட உலக வங்கி போன்ற பன்னாட்டு நிறுவனங்களிடம் கடன் பெறுவது, ஓய்வூதிய நிதியைக் கேட்டுப் பெறுவது, பத்திரங்களை வெளியிடுவது என்று பல யோசனைகளை வைத்திருக்கிறார். 2014-15 நிதியாண்டில் 462 கி.மீ. பாதைதான் மின்மயப்படுத்தப்பட்டது. 2015-16ல் 6,608 கி.மீ. பாதை மின்மயமாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 9,400 கி.மீ. பாதையை மின்மயப்படுத்தவும் பாதையை இரட்டிப்பாக்க, மூவரிசைகளாக்க, நால்வரிசைகளாக்க மொத்தம் 96,182 கோடி ரூபாய் செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எல்லாம் சரிதான். ஆனால், திட்டங்கள் செயல்வடிவம் பெறும்போது தடுமாறிவிடுவதையே காலம்காலமாக நாம் பார்த்துவந்திருக்கிறோம். இந்த முறையும் அப்படி ஆகிவிடக் கூடாது. எனவே, செயல்தான் நிரூபிக்க வேண்டும், இந்த நிதிநிலை அறிக்கையின் சிறப்பை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x