Published : 01 Sep 2014 08:39 AM
Last Updated : 01 Sep 2014 08:39 AM

குற்றப் பின்னணிதான் தகுதியா?

மத்திய, மாநில அரசுகளின் மனசாட்சியை நோக்கி உச்ச நீதிமன்றம் ஒரு பரிந்துரையை வைத்திருக்கிறது. குற்றப் பின்னணி உள்ளவர்கள் அல்லது கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, வழக்கு விசாரணைகளில் சிக்கியவர்களை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளாதீர்கள் என்று பிரதமர் மற்றும் மாநில முதலமைச்சர்களை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

நாட்டின் அல்லது மாநிலத்தின் அரசு நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பை வகிக்கத் தேர்வு செய்யப்படுபவர் நேர்மையாளராக, நடுநிலை தவறாதவராக, நாட்டின் சட்டங்களையும் விதிமுறைகளையும் மதித்து நடப்பவராக, நாட்டு நலனை மட்டுமே கருத்தில்கொண்டு செயல்படுபவராக இருக்க வேண்டும். இது அரசியல் சட்டம் இயற்றியவர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, நாட்டு மக்களின் விருப்பமும் அதுதான். ஆனால், சமீப காலமாகக் குற்றம்சாட்டப்பட்டவர்களில் பலர் மத்திய, மாநில அரசுகளில் அமைச்சர்களாக நியமிக்கப்படுவதைப் பார்க்கும்போது இதுதான் இப்போதைய தகுதி என்று ஆட்சியாளர்கள் கருதத் தொடங்கிவிட்டார்களோ என்கிற அச்சம் ஏற்படுகிறது.

படித்தவர்கள், பண்பானவர்கள், நாட்டுக்காக உழைத்தவர்கள், சமூகநலப் பணிகளில் ஆர்வம் உள்ளவர்கள் என்று பலதரப்பட்டவர்களும் அரசியலுக்கு வர முற்பட வேண்டும். அதற்கேற்ப சூழல் நிலவ வேண்டும். அதற்கு முதல்படியாகக் குற்றப் பின்னணி உள்ளவர்கள் ஒதுக்கப்பட வேண்டும். நல்லவர்களை அமைச்சர்களாக நியமியுங்கள் என்று நீதித் துறை கூறியது அரசு நிர்வாகத்தில் தலையிட்டதாக ஆகாது. நாட்டு மக்களின் ஆதங்கத்தைத்தான் உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்தியிருக்கிறது.

“வழக்குதான் பதிவாகியிருக்கிறது, விசாரணை நடந்து அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுவிடவில்லை, குற்றம் நிரூபிக்கப்படும்வரை அவர் நிரபராதிதான்” என்று எல்லா அரசியல் கட்சிகளுமே தங்கள் கட்சியைச் சேர்ந்தவர் குறித்துப் பேசும்போது விளக்கம் அளிக்கின்றன. எதிர்க் கட்சிக்காரர்களாக இருந்தால், ஆளும் கட்சியினர் அரசியல் நோக்கோடு தங்களுடைய கட்சிக்காரர்கள் மீது வழக்குப் பதிவுசெய்துவிட்டதாகக் கூறுகின்றனர். முதலில் சொன்ன சமாதானம் சட்டப்படி சரியாக இருந்தாலும், தார்மீக நெறிப்படி தவறுதான். அரசியல்ரீதியான போராட்டங்கள், ஊர்வலங் கள், வேலைநிறுத்தங்கள், மேடைப் பேச்சு போன்றவற்றுக்காக வழக்கு தொடுத்தால், அதை உள்நோக்கத்துடன் தொடுத்த வழக்குகளாகக் கருதுவதை நியாயம் என்றுகூட ஏற்கலாம். ஆனால், கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வல்லுறவு, பொதுச் சொத்தை நாசம் செய்வது, அரசின் சொத்துகளைக் கொள்ளையடிப்பது, அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருவாயைக் குலைப்பது போன்ற குற்றங்களைச் சாதாரணமாக விட்டு விட முடியுமா?

தீர்ப்பு வரும்வரை அரசியல் பதவிகளிலிருந்தும் பொறுப்புகளிலிருந்தும் அவர்கள் விலக்கி வைக்கப்பட வேண்டும். இதனால், அப்பாவிகள் சில சமயம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நியாயமானதுதான். ஆனால், பத்தாண்டுகள் அமைச்சர் பதவி வகித்த பிறகு, ஒருவர் குற்றவாளிதான் என்று தீர்ப்பு வந்தால், பத்தாண்டுகள் ஒரு குற்றவாளியை அமைச்சராக வைத்திருந்தது எப்பேர்ப்பட்ட தவறு? இந்திய நீதித் துறை நடைமுறைகளில் காணப்படும் கோளாறுகள் காரணமாக வழக்கு நடந்து முடிந்து, தீர்ப்பு வெளிவரத் தாமதமாவது உண்மை. எனவே, இந்த விவகாரங்களில் ஒருவர் தன்னை அப்பழுக்கற்றவர் என்று நிரூபித்துக்கொண்ட பிறகே அவருக்குத் தேர்தலிலும் அமைச்சரவையிலும் வாய்ப்புகள் தரப்பட வேண்டும்.

ஒட்டுமொத்த நாட்டின் நலனோடு நேரடியாகத் தொடர்புடையது இந்த விவகாரம். எனவே, சந்தேகத்தின் பலனைக் குற்றம்சாட்டப்பட்டவருக்குத் தருவதைவிட மக்களுக்குத் தருவதே நல்லது. ‘தூய்மையான நிர்வாகம்’ என்பதைத் தொடர்ந்து மந்திரம்போல் உச்சரிக்கும் மோடி என்ன செய்யப்போகிறார்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x