Published : 02 Sep 2015 08:45 AM
Last Updated : 02 Sep 2015 08:45 AM

கட்சி அனுதாபிகளை கட்சிக்குள்ளேயே ஆராதியுங்கள்!

புணே திரைப்பட, தொலைக்காட்சித் தொழில்நுட்பப் பயிற்சிக் கல்லூரியில் (எஃப்.டி.ஐ.ஐ.) மாணவர்கள் வேலைநிறுத்தம் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் ஆகிவிட்டன. மத்திய அரசின் செய்தி, ஒலிபரப்புத் துறையைச் சேர்ந்த 3 அதிகாரிகள் சமீபத்தில் புணே நகருக்கு வந்து, வேலைநிறுத்தம் செய்துவரும் மாணவர்களுடனும் நிர்வாகிகளுடனும் பணியாளர்களுடனும் பேச்சு நடத்திவிட்டுச் சென்றிருக்கின்றனர். இதனால் பிரச்சினை தீரும் என்ற நம்பிக்கை துளிர்விட்டிருக்கிறது.

சுயாட்சி அதிகாரம் கொண்ட இந்தத் திரைப்படக் கல்லூரியின் தலைவர் பதவிக்கு நடிகர் கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டார். இவர் பி.ஆர். சோப்டா தயாரித்த ‘மகாபாரதம்’ நெடுந்தொடரில் தருமபுத்திரனாக நடித்தவர் என்றாலும், திரைப்படத் துறையின் எல்லாத் துறைகளிலும் அனுபவம் பெற்றவர் என்றோ நிபுணர் என்றோ பெயரெடுத்தவர் அல்ல. மத்திய அரசை ஆளும் பாஜகவின் உறுப்பினர். சுயாட்சி அதிகாரம் உள்ள பதவிகளுக்குத் தலைவர்களை நியமிக்கும்போது, அத்துறையின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் அவர்கள் எந்த அளவுக்கு உதவுவார்கள் என்று பரிசீலித்து, பொருத்தமானவர்களை நியமிப்பதுதான் முறை. இதற்கு முன்னர் இந்தத் திரைப்படக் கல்லூரியின் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர்கள் திரைப்பட, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பில் சிறந்து விளங்கியவர்கள். அரசியல் சார்பு இருப்பது ஒரு குறையல்ல; ஆனால், அது மட்டுமே தகுதியாகிவிடக் கூடாது. இதைச் சொல்லித்தான் போராட்டம் வெடித்தது.

பிரச்சினை பெரிதானபோது இத்திரைப்படக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள், போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஊடகங்களும் பெரிதும் ஆர்வம் காட்டின. இந்தப் பிரச்சினை இப்படித் தொடரும்போது நாட்டின் முக்கிய எதிர்க் கட்சியான காங்கிரஸால் சும்மா இருக்க முடியுமா? போராடும் மாணவர்களை நேரில் சந்தித்து தங்களுடைய தார்மிக ஆதரவைத் தெரிவிக்க கட்சியின் தேசியத் துணைத் தலைவர் ராகுல் காந்தி வந்தார். இது பிரச்சினையை அரசியல் திசை நோக்கித் திருப்பிவிட்டுவிட்டது. ஆரம்பத்திலேயே தலையிடுவதற்குப் பதிலாக, இப்போது கடைசிக் கட்டத்தில், 3 அதிகாரிகளை அனுப்பி, சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்தைக் கேட்டறிந்திருக்கிறது அரசு.

பெயரை நிலைநாட்டிக்கொள்வதற்கான காரியங்களைவிடவும் கெடுத்துக் கொள்வதற்கான காரியங்களே ஆட்சியில் அதிகம் நடக்கின்றன. கட்சி விசுவாசிகளுக்குப் பதவி தருவதற்குக் கட்சியிலேயே எத்தனையோ பதவிகள் இருக்கின்றன. கலை, இலக்கிய, சித்தாந்த அமைப்புகளை ஏன் அரசு கையில் எடுக்கிறது? அரசின் நேரடிச் செலவிலும் மானியங்களிலும் செயல்படும் அமைப்புகளில் எல்லாம் தங்களுடைய சித்தாந்தத்துக்கு இணக்கமானவர்களை நுழைத்தே தீர வேண்டும் என்று அரசு முயற்சிசெய்வது தவறு. நாளை இதையே மற்ற கட்சிகளும் இன்னமும் தீவிரமாக அமல்படுத்தத் தொடங்கினால் இந்த நிறுவனங்கள் பாழாகிவிடும். இனி, இம்மாதிரியான அமைப்புகளுக்குத் தலைவர்கள், இயக்குநர்கள் போன்றவர்களை நியமிப்பதற்கு அனைத்துத் தரப்பும் ஏற்கும்படியான விதிமுறைகளை உருவாக்கலாம். இதற்காக இத்துறையைச் சேர்ந்த பிரபலங்களைக் கொண்ட குழுவை நியமித்து விதிமுறைகளை வகுக்கலாம்.

தேர்வுக் குழுவில் அனைத்துத் தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கலாம். இறுதி முடிவை அமைச்சகத்தின் செயலரோ வேறு யாரோ எடுக்க அனுமதிக்கலாம். நியமிக்கப்படப்போகிறவரின் தகுதி, திறமை, சாதனைகள் குறித்து குழுவில் வெளிப்படையாகப் பேசிய பிறகு முடிவுசெய்யலாம். இதெல்லாம்தான் நல்ல நிர்வாகத்துக்கான அடையாளங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x