Published : 17 Feb 2017 09:30 AM
Last Updated : 17 Feb 2017 09:30 AM

உத்தராகண்ட் தேர்தல் போக்கு தேசத்துக்குச் சொல்லும் செய்தி!

உத்தராகண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு புதன்கிழமை நடந்தது. அம்மாநிலத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. 2000-ல் உத்தர பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்ட மாநிலமான உத்தராகண்ட் சந்திக்கும் நான்காவது சட்டப்பேரவைத் தேர்தல் இது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையிலான போட்டியாகவே தேர்தல் களம் இருந்துவந்தது. இந்த முறை இரண்டு கட்சிகளிலும் அதிருப்தியாளர்கள் உருவாகியிருக்கும் சூழலில், தேர்தல் களம் மேலும் பரபரப்படைந்திருந்தது. இரு கட்சிகளும் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தைப் பார்க்கும்போது, இந்தத் தேர்தல் காங்கிரஸ் முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான போட்டியாகவே பார்க்கப்படுகிறது.

முதல்வராக ஹரீஷ் ராவத்தின் செயல்பாடுகளையும், அவர் மீதான பிம்பத்தையும் பிரதிபலிக்கும் வாக்கெடுப்பாகவே இந்தத் தேர்தலைக் கருதுகிறது காங்கிரஸ். கடந்த ஆண்டு முதல்வர் பதவியை அவர் தற்காலிகமாக இழக்க நேரிட்டது. மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியும் அமல்படுத்தப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு முதல்வர் பதவி அவருக்கு மீண்டும் கிடைத்தது. இங்கும் இந்தத் தேர்தலில் பாஜகவின் முகமாக இருப்பது பிரதமர் மோடிதான். பிரச்சாரத்தின்போது ஹரீஷ் ராவத் மீதான தாக்குதலில் பாஜக முழு மூச்சுடன் ஈடுபட்டது. உச்சகட்டமாக வாக்குப்பதிவு அன்று தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒரு செய்தியை வெளியிட்டது. முன்னாள் பாஜக சட்டப்பேரவை உறுப்பினரோடு முதல்வர் ஹரிஷ் ராவத் லஞ்ச பேரம் நடத்தினார் என்று சொல்லும் செய்தி அது. காங்கிரஸ் உடனடியாக இதை மறுத்தது. பாஜகவோ கடுமையாக காங்கிரஸைச் சாடியது. முன்னதாக, வெவ்வேறு மாநிலத் தேர்தல்களிலும் இதே போன்ற விஷயங்கள் வாக்குப்பதிவு நெருங்கும் நிலையில் நிகழ்ந்ததை இங்கு நினைவுகூரலாம்.

பொதுவில் இப்போது என்னவாகிவிட்டது என்றால், தேர்தல்கள் அரசியல் தலைவர்களுக்கு இடையிலான தனிப்பட்ட போட்டிகள், ஆளுமைகளை மையமாகக் கொண்டு நடத்தப்படும் சண்டைகளாக மாற்றப்பட்டுவருகின்றன. பாஜக பெரும்பாலான மாநிலங்களில் தன்னுடைய தேர்தல் முகமாக பிரதமர் மோடியையே முன்னிறுத்தும் உத்தியைக் கையாளும் நிலையில், எதிர்த்தரப்பும் மோடிக்கு இணையாக அவர்கள் தரப்பு போட்டியாளரை வலுவாக முன்னிறுத்தும் சூழல் உருவாவதால், இது ஒரு கலாச்சாரமாகவே உருவெடுத்துவருகிறது.

விளைவாக தனிப்பட்ட துதிபாடல், துவேஷத் தாக்குதல் சத்தமாக ஒலிக்க மாநிலத்தின் ஆதாரப் பிரச்சினைகள் பின்னுக்குப் போகின்றன. உத்தராகண்டை எடுத்துக்கொண்டால், வெள்ளம் உள்ளிட்ட பேரழிவுகளுக்கான நிவாரணம், மறுகட்டமைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குன்றுப் பகுதிகளில் ஏற்பட்டுவரும் விவசாய வீழ்ச்சி போன்ற பிரச்சினைகள் எல்லாம் இத்தேர்தல் சமயத்திலும்கூடப் போதிய கவனம் பெறவில்லை. எல்லாவற்றுக்கும் மேல் ‘பிரதமர் எதிர் முதல்வர்’ எனும் போட்டி நிலை தேர்தலோடு முடியாமல், தேர்தலுக்குப் பின்னும் உள்ளூர் அரசியலில் தொடர்வது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல. உத்தராகண்ட் தேர்தல் சொல்லும் நாட்டுக்கான முக்கியமான செய்தி இது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x