Published : 27 Oct 2016 09:05 AM
Last Updated : 27 Oct 2016 09:05 AM

இலங்கை அதிபருக்கு தேவை அரசியல் துணிச்சல்!

இலங்கையில் காவலர்களால் தமிழ் மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களான பவுன்ராஜ் சுலக்ஷன், நடராஜா கஜன் இருவரும் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அவர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள் காவலர்கள். குண்டு பாய்ந்ததில் பவுன்ராஜ் பலியானார். துப்பாக்கிச் சூட்டின் காரணமாக ஏற்பட்ட விபத்தில் நடராஜா கஜனும் உயிரிழந்தார்.

முதலில், “மாணவர்கள் சாவுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; வண்டியில் வேகமாகச் சென்றவர்கள் விபத்தில் சிக்கி இறந்துவிட்டார்கள்” என்றது காவல் துறை. மக்களின் எதிர்ப்பும் பிரேதப் பரிசோதனை முடிவு வெளிக்கொணர்ந்த உண்மையும் காவல் துறையினரின் குரூர முகத்தை அம்பலப்படுத்தியதால், “மாணவர்களை நிற்கச் சொல்லி சைகை காட்டினோம்; நிற்காததால் அவர்களைச் சுட வேண்டியதாகிவிட்டது” என்றிருக்கிறார்கள் காவலர்கள். இச்சம்பவம் தமிழ் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. இந்தச் சம்பவமானது மனித உரிமை மீறல் மட்டும் அல்ல; கனன்றுகொண்டிருக்கும் இனவெறியின் அப்பட்டமான வெளிப்பாடும்கூட.

தமிழ் மக்களின் போராட்டம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நெருக்குதல்களைத் தொடர்ந்து, உரிய விசாரணை நடத்துமாறு காவல் துறைத் தலைவருக்கு இலங்கை அதிபர் சிறிசேனா உத்தரவிட்டிருக்கிறார். ஐந்து காவலர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். தமிழர் பகுதிகளில் ராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களைத் திரும்ப வழங்க வேண்டும் என்றும், வட மாகாணத்தில் ராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்றும் ஐநா சபையின் சிறுபான்மை விவகாரங்கள் நிபுணர் கேட்டுக்கொண்டதற்கு அடுத்த நாள் நடந்திருக்கும் சம்பவம் இது. இலங்கை அரசு தமிழ் மக்கள் விவகாரத்தில் இன்னமும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்காததே முக்கியமான காரணம். போரின் தொடர்ச்சியாகச் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு மெல்லக் கொல்லும் விஷ ஊசி செலுத்தப்பட்டதாகச் சில வாரங்களுக்கு முன் ஒரு விவகாரம் பெரிதாக எழுந்தது. ஆனால், அது தொடர்பான விசாரணையின் நிலைமை என்ன? வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டவர்களின் கதி என்ன? அவ்வப்போது தமிழர்கள் மீது வன்முறையை நிகழ்த்தும் இன வெறியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?

இலங்கை அதிபர் சிறிசேனா, இலங்கைத் தீவு அனைத்துத் தரப்பினருக்குமானது எனும் சூழலை அங்கு உருவாக்க அரசியல் துணிச்சல் மிக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது போன்ற இனவெறித் தாக்குதலில் ஈடுபடுவோர் மீதான கடும் நடவடிக்கைகளில் தொடங்கி இலங்கையின் அரசியல் சட்டம் வரை அந்தத் துணிச்சல் தொடர வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x