Published : 18 Dec 2015 09:26 AM
Last Updated : 18 Dec 2015 09:26 AM

உரிமைகளைக் கட்டுப்படுத்தும் சட்டம் கூடாது!

மாநிலத்தில், தேர்தலில் போட்டியிடுவதற்குச் சில அடிப்படைத் தகுதிகள் வேண்டும் என்று வலியுறுத்தும் ‘ஹரியாணா பஞ்சாயத்து ராஜ் சட்டம்’ தொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்திருக்கும் உத்தரவு ஆச்சரியம் தருகிறது.

பொதுவாகப் பள்ளியிறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆடவர்களும், 8-வது வகுப்பில் தேர்ச்சி அடையாத பெண்களும் உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிட முடியாது. ஒருவேளை பட்டியல் இனத்தவராக இருந்தால் ஆடவர்கள் 8-வது வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மகளிர் 5-வது வகுப்பு தேறியிருக்க வேண்டும். அது மட்டுமின்றி மாநில அரசிடம் வாங்கிய விவசாயக் கடனை அடைத்திருக்க வேண்டும், மின் கட்டணத்தில் நிலுவை ஏதும் வைத்திருக்கக்கூடாது. பயன்படுத்தும் விதத்தில் வீட்டில் கழிப்பறைகள் இருந்தாக வேண்டும் என்றெல்லாம் இச்சட்டம் சொல்கிறது. இந்தச் சட்டத்தை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

பணக்காரப் பெருவிவசாயிகளும், நகர்ப்புறங்களில் இணையதள வசதிகளும் அதிகமாகக் காணப்படும் அம்மாநிலத்தில் பட்டியல் இனத்தவரில் 41% ஆடவர் 8-வது வகுப்பைத் தாண்டவில்லை; 68% பெண்கள் 5-வது வகுப்பையே எட்டவில்லை. கிராமங்களில் ஒட்டுமொத்தமாக 45% வீடுகளில் பயன்படுத்தும் நிலையில் கழிப்பறைகள் இல்லை. பட்டியல் இனத்தவர் வீடுகளை மட்டும் கணக்கில் கொண்டால் 55% வீடுகளில் அவ்வசதி இல்லை. இதன் முழுப் பொறுப்பும் மாநில அரசையே சாரும். அப்படியிருக்க, இத்தகைய குறைபாடுகளுக்காகத் தேர்தலில் போட்டியிடும் உரிமையை இம்மக்களிடமிருந்து பறிப்பது நியாயமாகுமா?

ஹரியாணாவிலும் மத்தியிலும் பாஜக ஆட்சி செய்வதால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்படும் என்று தோன்றவில்லை. எனவே, இந்தச் சட்டத்துக்கு எதிராக அரசியல்ரீதியாக மக்களிடையே ஆதரவு திரட்டப்பட வேண்டும். இந்தச் சட்டம் நன்றாக இருப்பதாலோ, இது அவசியம் என்று கருதுவதாலோ உச்ச நீதிமன்றம் இதற்கு எதிரான மனுவைத் தள்ளுபடி செய்துவிடவில்லை. இப்படிச் சட்டம் இயற்ற மாநிலங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதற்காகவே ரத்து செய்யவில்லை. இதே போன்ற சட்டங்கள் பிற மாநிலங்களிலும் இயற்றப்படாமல் தடுக்கும் முயற்சியை மக்கள்தான் முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்தையே நீதிமன்றம் மறைமுகமாக உணர்த்தியிருக்கிறது.

ஜனநாயக நாட்டில் ஒரு தேர்தலில் யார் போட்டியிட வேண்டும், யார் போட்டியிடக் கூடாது என்று நிபந்தனைகளை விதித்துக்கொண்டே போகக் கூடாது. உள்ளாட்சி அமைப்புகளிலும் சட்டமன்றங்களிலும் இந்த கல்வித்தகுதிகள் இல்லாமலேயே தங்களால் கடமைகளைச் சரிவரச் செய்ய முடியும் என்ற நிலை மக்களுக்கு இருக்கும்போது, புதிய நிபந்தனைகளை விதிப்பது ஆபத்தான குறுக்கீடாகும். குற்றச் செயல்புரிந்தோர், சமூக விரோதிகள் போன்றோர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று தடுப்பதில் அர்த்தமிருக்கிறது. அதிகம் படிக்காதவர்கள் போட்டியிடக் கூடாது, கடனை அடைக்காதவர்கள் போட்டியிடக் கூடாது என்பதெல்லாம் சர்வாதிகாரத்தின் சாயல்.

இப்படிப்பட்ட நிபந்தனைகள் ராணுவ ஆட்சிகளில்தான் விதிக்கப்படும். பர்வேஸ் முஷாரஃப் பாகிஸ்தான் அதிபராக இருந்தபோது கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர்கள் மட்டும்தான் வேட்பாளராக முடியும் என்று சட்டம் இயற்றப்பட்டது. மியான்மர் நாட்டில் வெளிநாட்டுக் குடிமக்களான வாழ்க்கைத் துணைவர்களையும் குழந்தைகளையும் கொண்டவர்கள் பதவி வகிக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த வரிசையில் இந்தியாவைச் சேர்ந்த இன்னொரு மாநிலமும் சேர்ந்திருப்பது உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று மார்தட்டிக்கொள்ளும் இந்தியாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் செயல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x