Published : 04 Jul 2018 09:26 AM
Last Updated : 04 Jul 2018 09:26 AM

நிலத்தடி நீரில் யுரேனியக் கலப்படம்: உடனடி நடவடிக்கை தேவை!

ந்தியாவின் வடமேற்கு, தெற்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் ஒரு லிட்டர் நிலத்தடி நீரில் 30 மைக்ரோ கிராமுக்கும் அதிகமான அளவில் யுரேனியம் கலந் திருப்பதாக ‘சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கடிதங்கள்’ இதழ் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இத்தகைய நீரைக் குடிக்கும் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படக்கூடும். நாட்டின் பெரும்பாலான பகுதி மக்கள் நிலத்தடி நீரை மட்டுமே நம்பியிருக்கும் நிலையில், இது சுகாதார அளவில் மிகப் பெரிய பிரச்சினைக்கு இட்டுச்செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

ஆய்வு நடத்தப்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீரைத் தவிர, மக்களுக்கு வேறு குடிநீர் ஆதாரங்கள் இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. ஒரு லிட்டரில் 30 மைக்ரோ கிராம் யுரேனியம் என்பது அதிகபட்ச அளவு என்கிறது உலக சுகாதார நிறுவனம். நீரில் யுரேனியத்தின் அளவுகுறித்த விதிமுறைகளை இந்தியத் தர நிர்ணயக் கழகம் கொண்டிருக்கவில்லை. எனவே, ஆய்வு கள் மேற்கொள்ளும்போதுகூட நீரில் யுரேனிய அளவு குறித்த சோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. கடந்த 10 ஆண்டு களில், யுரேனியக் கலப்படத்தால் நிலத்தடி நீர் அதிகம் பாதிப்புக்குள்ளானதற்கு இதுதான் மிக முக்கியக் காரணம்.

பெங்களூருவின் தெற்குப் பகுதியில், நிலத்தடி நீரில் ஒரு லிட்டருக்கு 2,000 மைக்ரோ கிராம் வரை யுரேனியம் இருப்பதாக 2015-ல் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. ஆந்திர பிரதேசம், தெலங்கானா பகுதிகளில் ஒரு லிட்டருக்கு 500 மைக்ரோ கிராம் வரை யுரேனியம் இருக்கிறது. ராஜஸ்தான் மற்றும் குஜராத்திலுள்ள கிணறுகளும் பாதிப்புக்குள்ளாகியிருப்பது தெரியவந்திருக்கிறது. யுரேனியத்தை உட்கொள்வதால் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், எதிர்காலத்தில் உடல் எதிர்கொள்ளவிருக்கும் பின்விளைவுகள் குறித்து சரிவரத் தெரியவில்லை. இந்தியாவில் பெரும்பாலா னோர் சிறுநீரகக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு யுரேனியம்கூடக் காரணமாக இருக்கலாம். 2005-லிருந்து 2010 வரை மேற்கொண்ட ஆய்வுகளின்படி, சிறுநீரக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களில் 8,385 பேருக்கு எதனால் பாதிப்பு ஏற்பட்டது என்பதைக் கண்டறிய முடியவில்லை.

நீரில் கலந்திருக்கும் யுரேனியம் குறித்து ஆய்வாளர்கள் தொடர்ந்து சோதனைகள் நடத்த வேண்டியது அவசியம். ராஜஸ்தான் மற்றும் பிற வடமேற்குப் பகுதிகளில் நீர்த்தேக்கமுள்ள வண்டல் மண்ணும், தெலங்கானா போன்ற தென் பகுதிகளில் கிரானைட் போன்ற படிகப் பாறைகளும் யுரேனியத்துக் கான ஆதாரமாக இருக்கின்றன. இது மாதிரியான நிலப் பகுதி களிலிருந்து அதிக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் போது யுரேனியம் வெளிப்படுகிறது.

தொடர்ந்து முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் பாதுகாப்பான குடிநீர் எங்கே கிடைக்கும் என்பதைக் கண்டறியலாம். யுரேனியக் கலப்படம் குறித்த ஆய்வுகள் இந்தியா முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான், யாரெல்லாம் ஆபத்தில் இருக்கிறார்கள் என்பதையும், அவர்களை எப்படிக் காப்பாற்றப்போகிறோம் என்பதையும் அறிய முடியும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x