Published : 21 Jun 2018 10:29 AM
Last Updated : 21 Jun 2018 10:29 AM

காஷ்மீர்: அரசியல் குழப்பம் தீர வழி என்ன?

கா

ஷ்மீர் மாநிலத்தில், மக்கள் ஜனநாயகக் கட்சியுட னான கூட்டணி அரசிலிருந்து பாஜக விலகியதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருக்கிறது. தேர்தலுக்குப் பின்பாகக் கூட்டணி அமைத்த, எதிரெதிர் நிலைப்பாட்டைக் கொண்ட இந்த இரு கட்சிகளின் கூட்டணி தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. 2020-ல் நடக்கவிருக்கும் சட்ட மன்றத் தேர்தல் வரை கூட்டணி முறிந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் மஜக இருந்தது. பாஜகவுக்கோ 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக விலக வேண்டிய கட்டாயம். ஜம்முவில் இந்துக்களின் வாக்குகளை நம்பி பாஜகவும், காஷ்மீரில் முஸ்லிம்களின் வாக்குகளை நம்பி மஜகவும் இருக்கின்றன. இரண்டு கட்சிகளுமே தேர்தலின்போது எதிரெதிர் முகாந்திரங்களைத்தான் கொண்டிருந்தன என்பது மட்டுமல்ல, இரு கட்சிகளும் தேர்தலுக்கு முன்பாகக் கூட்டணி அமைப்பது குறித்து ஒருபோதும் யோசித்ததில்லை.

கதுவா சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் பாஜக அமைச்சர்கள் இருவர் குற்றவாளிக்கு ஆதரவாகப் பேசியதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சை, இந்தக் கூட்டணி அதிக நாள் நிலைக்க முடியாது என்பதைக் காட்டியது. காஷ்மீர் அமைச்சரவையிலிருந்து இரண்டு அமைச்சர்கள் நீக்கப்பட்ட பிறகும்கூட பாஜகவுக்கு நன்மதிப்பு உருவாகவில்லை. மேலும், மக்களிடம் மஜகவுக்கு ஆதரவு அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்ற எண்ணமும் பாஜகவிடம் எழத் தொடங்கிவிட்டது. ஆனால், கதுவா பிரச்சினையின்போது கூட்டணியிலிருந்து விலகினால் தேசத்தின் பிற பகுதிகளிலும் பாஜக குறித்த எதிர்மறையான எண்ணம் உருவாகிவிடும் என்பதால் பாஜக காத்திருக்க முடிவெடுத்தது.

ரம்ஜான் மாதத்துக்குப் பின்பாகவும் போர் நிறுத்தத்தைத் தொடர வேண்டுமா என்பதில் இரு கட்சிகளுக்கும் இருந்த கருத்துவேறுபாடு, கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவை எடுக்க பாஜகவுக்குச் சாதகமாக அமைந்தது. பிரிவினைவாதிகளுடன் அரசியல் தீர்வு குறித்து விவாதிக்கும் பொருட்டு போர் நிறுத்தத் தைத் தொடர வேண்டுமென மஜக விரும்பியது. பேச்சுவார்த்தைக்கு ஹூரியத் தயாராக இல்லை. மேலும், தீவிரவாதிகளும் குடிமக்களைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். இந்த நிலையில் போர்நிறுத்தத்தைத் தொடர்வதில் எவ்வித அர்த்தமும் இல்லை.

பாஜக அல்லாத மாற்று அரசு உருவாக வேண்டுமென்றால் மஜகவும், காங்கிரஸும் கூட்டணி வைக்க வேண்டும். ஆனால், கூட்டணி வைப்பதென்பது இரு கட்சிகளுக்குமே அரசியல் அபாயங்கள் நிறைந்ததாகவே இருக்கும். 2014-ல் நடந்த காஷ்மீர் சட்ட மன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் துண்டுதுண்டாக்கப்பட்ட அரசியலால் வன்முறை யில் சீரழிந்து கிடக்கிறது காஷ்மீர். இன்னொரு தேர்தலும்கூட அரசியல் ஸ்திரத்தன்மைக்கு உத்தரவாதம் தரப்போவதில்லை என்றாலும், வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களின் விருப்பங்களை அறிவதற்குத் தேர்தல்தான் ஒரே வழி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x