Published : 16 May 2018 08:51 AM
Last Updated : 16 May 2018 08:51 AM

அப்பாவிகள் படுகொலைக்கு முடிவுகட்டப்பட வேண்டும்!

த மிழகத்துக்கு வெளியே இதுவரை கேள்விப்பட்டுவந்த ‘கும்பல் கொலைகள்’ தமிழகத்திலும் ஒரு கலாச்சாரமாக உருவெடுத்துவருகிறதோ என்று தோன்றுகிறது. குழந்தைகளைக் கடத்துகிறவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில், தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் மூன்று பேர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தான போக்கு.

பழவேற்காட்டில் பாலத்தில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த 45 வயதுக்காரரை அப்பகுதி மக்கள் அடித்துக்கொன்று, அங்கேயே பிணமாகத் தொங்கவிட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மூதாதையர் கோயிலைத் தேடிச் சென்ற 55 வயதுப் பெண்ணை இதேபோல ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. வேலூர் மாவட்டத்தில் வட இந்தியர் ஒருவரும் இப்படி அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். குழந்தைத் திருட்டோடு வட இந்தியர்களை இணைத்து ‘வாட்ஸப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியே இந்தப் படுபாதகச் செயலுக்கான எரிபொருளாக இருந்திருக்கிறது.

குழந்தைகள் கடத்தல் உள்ளபடியே தமிழ்நாட்டில் அதிகம் பேசப்படாத ஒரு முக்கியமான பிரச்சினை. மாநிலக் குற்ற ஆவணக் காப்பகம் தரும் அதிகாரபூர்வக் கணக்குகள்படியே தமிழ்நாட்டில் அன்றாடம் ஐந்து குழந்தைகள் காணாமல் போகின்றனர் எனும்போது, பெற்றோரிடமும் பொதுத் தளத்திலும் இது எவ்வளவு பதற்றத்தை உண்டாக் கக் கூடிய விஷயம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இவர்களில் கணிசமானோர் மீட்கப்படுகின்றனர் என்றாலும், ஒரு பகுதியினர் கிடைக்காமலும் போகின்றனர். பொது இடங்களில் பிச்சை எடுக்க வைக்கப்படும் குழந்தைகளில் கணிசமானோர் கடத்தல் வழி சாலைகளில் இறக்கப்படுபவர்கள் என்கிற உண்மையோடு பொருத்திப் பார்க்க வேண்டிய விஷயம் இது. குழந்தைகளை எப்படிப் பாதுகாப்பது என்று பெற்றோருக்குப் பயிற்சி அளிப்பதில் தொடங்கி பொது இடங்களில் குழந்தைகளை எப்படிக் கண்காணிப்பது என்று காவல் துறையினருக்குப் பயிற்சி அளிப்பது வரை இதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஏராளம். சமூகத்தின் எல்லாத் தரப்புகளையும் ஒருங்கிணைத்துப் பணியாற்ற வேண்டியது இதில் உள்ள முக்கியமான சவால்.

இதுபற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாதவர்கள் தன்னை வந்தடையும் தகவல்களை அதன் பின்னணி, உண்மைத்தன்மை குறித்து எதுவும் ஆராயாமல் பிழைப்புக்காக இங்கு வரும் அபலைகளைக் குற்றவாளிகள் என்று கருதித் தாக்குவது கொடூரமானது. செய்தி வியாபாரத்துக்காக நாள் முழுவதும் மக்களிடம் பரபரப்பைப் பரப்பிவரும் ஊடகங்களுக்கும் இதில் முக்கியமான பங்கு இருக் கிறது. ஊடகங்கள் பழக்கும் பசிக்கே சமூக வலைதளங்கள் தீனி தயாரிக்கின்றன. தன்னுடைய பன்மைத்துவக் குணத்தால் உலகின் பல்வேறு திசைகளிலும் பரவியிருக்கும் தமிழ்ச் சமூகத்தை இன்று கொஞ்சம் கொஞ்சமாக இனவெறி நோய்க்கிருமிகள் பீடிக்கத் தொடங்குவது மிக அபாயகரமானது. உடனடியாக முடிவுகட்டப்பட வேண்டியது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x