Published : 27 Apr 2018 09:24 AM
Last Updated : 27 Apr 2018 09:24 AM

ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் திருத்தப்பட வேண்டும்!

மே

காலய மாநிலத்தில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்ததை முற்றாக விலக்கிக்கொள்ளவும், அருணாசல பிரதேசத்தில் அதன் பயன்பாட்டுப் பரப்பைக் குறைத்துக்கொள்ளவும் மத்திய அரசு முடிவெடுத் திருப்பது வரவேற்கத்தக்கது. மேகாலயத்தில் அசாம் எல்லையையொட்டிய 20 கிலோ மீட்டர் பரப்பை பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்திருந்தார்கள். அருணாசல பிரதேசத்தில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் முன்னர் 16 காவல் நிலைய அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகள் இருந்தன. இப்போது அவை பாதியாகக் குறைக்கப்பட்டுவிட்டன.

நாகாலாந்தின் முழுப் பரப்பளவு, அசாமின் பெரும் பகுதி, மணிப்பூரின் ஏழு சட்ட மன்றத் தொகுதிகளைத் தவிர்த்த ஏனைய பகுதிகள் இன்னமும் பாதிக்கப்பட்ட பகுதிகளாகவே கருதப்பட்டு, ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் அங்கே அமலில் இருக்கிறது. திரிபுராவில் மட்டும் இச்சட்டம் 2015-ல் முற்றாக விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்று ராணுவம் கருதுவதால், இதன் நடைமுறையை மத்திய அரசு நீட்டித்துக்கொண்டே வருகிறது. இப்படி அறிவிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவப் படைகள் எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது. மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் என்று அரசியல் சட்டம் அளிக்கும் உரிமைகளை இப்பகுதிகளில் வசிப்போர் கோர முடியாது.

ராணுவத்தின் அத்துமீறிய செயல்களை அதிகம் சந்தித்த மாநிலம் மணிப்பூர். 2016-ல் உச்ச நீதிமன்றம் வெகு அபூர்வமாக இதில் தலையிட்டு, கலகங்களால் பாதிக்கப்பட்ட பகுதி என்று கூறி, சிறப்பு அதிகாரத்தின் கீழ் மக்களுடைய அடிப்படை உரிமைகளை மீறும் செயலை ராணுவம் மேற்கொள்ள முடியாது, அத்துமீறிய செயல்களை விசாரிக்காமல் இருக்க முடியாது என்று கூறியிருந்தது. சில குறிப்பிட்ட புகார்களை விசாரிக்குமாறும் ஆணையிட்டது. ராணுவத்துக்கு விருப்பப்படி எதை வேண்டுமானாலும் செய்ய இச்சட்டம் அதிகாரம் தந்துவிடவில்லை என்றும் சுட்டிக்காட்டியது.

ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு உரிய திருத்தங்களைக் கூறுமாறு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.பி.ஜீவன் ரெட்டி தலைமையிலான குழுவைக் கேட்டிருந்தது. அச்சட்டத்தை முழுக்க ரத்துசெய்துவிட்டு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தை உரிய வகையில் திருத்தினாலே ஆயுதங்களுடன் ஊடுருவுவதையும் அரசுப் படைகளுடன் மோதுவதையும் தடுத்துவிட முடியும் என்று ஜீவன் ரெட்டி குழு பரிந்துரைத்தது. அக்குழுவின் அறிக்கையை மத்திய அரசு மறுபரிசீலனைசெய்து உரிய திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x