Published : 17 Apr 2018 09:23 AM
Last Updated : 17 Apr 2018 09:23 AM

காமன்வெல்த் போட்டியில் பிரகாசித்த இந்திய தங்கங்கள்!

ஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என்று மொத்தம் 66 பதக்கங்களை வென்றதுடன், பதக்கப் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பெற்றிருக்கிறது இந்தியா. இந்திய விளையாட்டுத் துறைக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கும் செய்தி இது.

மல்யுத்தம், பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், குத்துச்சண்டை, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் ஆகிய பிரிவுகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. குத்துச் சண்டையில் மேரி கோம், மல்யுத்த வீரர் சுசீல் குமார், பளுதூக்குதலில் மீராபாய் சாணு, 2016 ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா, துப்பாக்கி சுடுதலில் புதிய நட்சத்திரம் மனு பேக்கர், அனிஷ் பன்வாலா ஆகியோர் தங்கம் பெற்றனர். பேட்மிண்டனின் கலப்புப் பிரிவிலும் தங்கம் கிடைத்தது. மகளிர் ஒற்றையர் சாம்பியன் பட்ட இறுதியில் பி.வி. சிந்துவும் சாய்னா நெய்வாலும் மோதியது சிறப்பு. இரட்டையர் போட்டிக்கான ஜோடிகள் சிறப்பாக விளையாடியது கூடுதல் சாதகமாகிவிட்டது. டேபிள் டென்னிஸ் பிரிவில் ஏழு வகைப் போட்டிகளிலும் இந்தியா சேம்பியன் பட்டம் வென்றிருக்கிறது. மகளிர் ஒற்றையர் சேம்பியன் பட்டத்தை மானிகா பத்ரா (22) பெற்றார்.

இந்திய அணியின் வெற்றிக்கு வீரர்களுடைய விடாமுயற்சி, கடும் பயிற்சி முக்கியக் காரணங்கள். மேலும், பயிற்சியாளர்கள், மருத்துவர்கள், ஆலோசகர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட இதர பிரிவினரின் ஈடுபாடும் பாராட்டத்தக்கது. வீரர்கள் ஏ.வி. ராகேஷ் பாபு, கே.டி. இர்ஃபான் தங்கிய அறைகளிலிருந்து ஊசிபோடும் குழல் கண்டுபிடிக்கப்பட்டதால் அவர்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டது கசப்பான நிகழ்வுதான். இதுபோன்ற நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசுகள் அளிப்பதுடன் அரசுகள் நின்றுவிடக் கூடாது. ஆடுகளம், பயிற்சிக் களம், சாதனங்கள், உரம் சேர்க்கும் உணவு ஆகியவற்றை அனைத்து வீரர்களுக்கும் வழங்குவதில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்.

வரும் ஆகஸ்ட் மாதம் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. காமன்வெல்த் நாடுகளைவிட ஆசிய நாடுகள் விளையாட்டில் மேலும் தரம் வாய்ந்தவை. சவால்கள் அதிகம். எனினும், காமன்வெல்த் வெற்றிகளால் உற்சாகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் இருக்கும் வீரர்களுக்கு சிறப்பான பயிற்சிகளை அளித்து, இந்தப் போட்டியிலும் அதிகப் பதக்கங்களைப் பெற ஊக்குவிக்க வேண்டும். ஆசியக் கோப்பைப் போட்டியில் வென்றால் டோக்கியோவில் 2020-ல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் விளையாட நேரடித் தகுதி கிடைக்கும். நமது வீரர்கள் முழுத் திறமையையும் காட்டி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x