Published : 17 Mar 2018 08:56 AM
Last Updated : 17 Mar 2018 08:56 AM

அறிவியல் ஆராய்ச்சிக்கட்டுரைகளின் தரம் பாதுகாக்கப்பட வேண்டும்!

ந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. ஆனால், இது உண்மையில் மகிழ்ச்சிதரும் விஷய மாக அல்லாமல், ஆழ்ந்த கவலையையும் ஏமாற்றத்தையும் அளிக்கும் விஷயமாக இருப்பதுதான் விநோதம். காரணம், இவற்றில் பெரும்பாலானவை ‘திருடப்பட்ட’ கட்டுரைகள். முறையான ஆய்வுகள் செய்யப்படாமல் மேம்போக்காக எழுதப்பட்டவை. பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு (யுஜிசி) விதித்த விசித்திர நிபந்தனைதான் இதற்கு முக்கியக் காரணம்.

அறிவியல் ஆராய்ச்சி செய்வோர், தங்களுடைய ஆய்வு தொடர்பாகக் குறைந்தது இரண்டு கட்டுரைகளையாவது முன்கூட்டியே பிரசுரித்து, ஆய்வுத்திறனை வெளிப்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்த யுஜிசி, ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் பிரசுரிக்கும் ஆய்விதழ்களையும் பரிந்துரைத்திருந்தது. உற்சா கம் அடைந்த ஆராய்ச்சி மாணவர்கள் பலர், போதுமான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் மேம்போக்கான ஆய்வுக் கட்டுரைகளை ஆய்விதழ்களுக்கு அனுப்பிவைக்கத் தொடங்கிவிட்டார்கள். யுஜிசி பரிந்துரைத்த ஆய்விதழ்களில் சுமார் 200 இதழ்கள் போலியானவை என்பது குறிப்பிடத்தக்கது.

2010-ல் மட்டும் வெளியான ஆய்வுக் கட்டுரைகள் 53,000. 2014-ல் 4,20,000. இதையும் ‘பிஎம்சி மெடிசின்' இதழ் 2015-ல் சுட்டிக்காட்டியிருக்கிறது. போலிக் கட்டுரைகளைத் தேடித்தேடிப் பிரசுரிக்கும் ஆய்வேடுகளில் 27% இந்தியாவில்தான் பிரசுரமாகின்றன. போலிக் கட்டுரைகளை எழுதும் ஆராய்ச்சி யாளர்களில் 35% பேர் இந்தியர்கள்தான்.

‘ஆப்பிள்' நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஸ்டீவ் சோஸ் இந்தியர்களைப் பற்றிக் கூறும்போது, ‘சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகள்' என்று கேலியாகக் குறிப்பிட்டிருக் கிறார். தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்வார்களே தவிர, புதிதாக உருவாக்கும் திறனற்றவர்கள்; சொந்த ஆராய்ச்சிகள் அதிகமில்லை என்கிறார். அவரது இந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் விதத்தில் இந்தத் தகவல்கள் இருக்கின்றன. மிகுந்த சங்கடம் தரும் விஷயம் இது. ஜகதீஸ் சந்திர போஸ், சந்திரசேகர், சர் சி.வி. ராமன் போன்றோர் அவர்களுடைய காலத்தில் எத்தனை ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதிய பிறகு, கண்டுபிடிப்புகளை வெளியிட்டனர் அல்லது புகழ்பெற்றனர்?

லட்சக்கணக்கான பொறியாளர்கள், மருத்துவர்கள், கணக்குத் தணிக்கையாளர்கள் உருவாகியும் அறிவு நாணயக் குறைவின் காரணமாகப் பல்வேறு துறைகளில் பின்னடைவு ஏற்படுவதைக் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அறிவு என்பது புதியதை அறிவது மட்டுமல்ல, அறிந்ததை பலர் அறிய வெளிப்படுத்துவதுமாகும். அதில் நிச்சயம் நேர்மை இருக்க வேண்டும். நாணயமற்ற அறிவு, பட்டங்களைப் பெற உதவலாம் படைப்புக்கு உதவாது. ஒரு துறையில் வல்லுநராவதற்கு நீண்ட ஆராய்ச்சியும், நிறைந்த மதியும், கடுமையான உழைப்பும், கற்றுக்கொள்ளும் ஆர்வமும் அவசியம். பல்கலைக்கழகங்கள் பட்டதாரிகளையும் ஆராய்ச்சியாளர்களையும் உற்பத்திசெய்யும் கேந்திரங்கள் அல்ல.

அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மனிதகுலத்துக்குப் பல்வேறு நன்மைகளை விளைவிக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுப்பவை. எனவே, இந்த விஷயத்தில் மிகுந்த கவனமும் எச்சரிக்கையும் அவசியம். தான் வெளியிட்ட பட்டியலை யுஜிசி மறு ஆய்வுசெய்ய வேண்டும். ஆய்வுக் கட்டுரைகளின் தரத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x