Published : 22 Feb 2018 09:09 AM
Last Updated : 22 Feb 2018 09:09 AM

இனியேனும் சரிபார்க்கப்படுமா வேட்பாளர்களின் சொத்துக் கணக்கு?

வே

ட்பாளர்கள் தங்கள் சொத்துக் கணக்குகளை அளிப்பதுடன், தங்களுடைய குடும்பத்தவர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களின் சொத்து விவரங்களையும் அறிவிக்கும் வகையில் விதிகளைத் திருத்த வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக்கொண்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். முந்தைய தேர்தலுக்குப் பிறகு வேட்பாளரின் சொத்து மதிப்பு அதிகரித்திருந்தால் அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறது. வேட்பாளர்களின் சொத்துக் கணக்கு என்பது விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் ஒரு தகவல் மட்டுமே அல்ல, மக்கள் பிரதிநிதிகளைக் கண்காணிப்பதற்கான ஒரு கருவி என்ற நம்பிக்கையை இந்தத் தீர்ப்பு அளித்துள்ளது.

‘லோக் பிரஹரி’ என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே. செலமேஸ்வர் தலைமையிலான அமர்வு பிறப்பித்துள்ள இந்த ஆணைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவிவகிக்கும் காலத்தில் தங்களுடைய வருவாய்க்குப் பொருந்தாத வகையில் சொத்துகளைச் சேர்த்திருந்தால் அதை விசாரிக்க வேண்டியது அரசின் கடமை என்று அமர்வு சுட்டிக்காட்டியிருக்கிறது. சொத்து அதிகரித்ததாக வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் தகவல்கள்கூட எந்தவித கேள்வியும் இல்லாமல் அப்படியே ஏற்கப்படுவது குறித்தும் கேள்வி எழுப்பியிருக்கிறது.

தேர்தல் நடைமுறைகள் தூய்மையாக இருக்க வேண்டும், அனைவருக்கும் போட்டியிடும் களம் சம வாய்ப்புகளுடன் இருக்க வேண்டும் என்பதற்காகப் பொது நல வழக்குகளைத் தொடுத்து வருகிறது லோக் பிரஹரி. வாக்குப் பதிவு இயந்திரங்களில் நோட்டா என்ற தனிப் பொத்தானைப் பொருத்தியது, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டால் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி உடனடியாக ரத்துசெய்யப்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது எல்லாம் இந்தத் தன்னார்வத் தொண்டு அமைப்பின் முயற்சியால்தான். சில வேட்பாளர்களின் சொத்து மதிப்பு தேர்தலுக்குத் தேர்தல் பல மடங்காக உயர்ந்துகொண்டே செல்கிறது. விண்ணப்பப் படிவத்தில் தகவல் தரப்பட்டிருக்கிறதா என்று மட்டுமே பார்க்கப்படுகிறதே தவிர, ஆராயப்படுவதில்லை. எனவே வருவாய்க்குப் பொருந்தாத வகையில் சொத்து குவிக்கும் வேட்பாளர்கூட எந்தத் தடையும் இல்லாமல் தொடர்ந்து போட்டியிடுகிறார்.

சொத்துகளைச் சேர்த்த அரசியல் தலைவர்கள் அதை மறைப்பதும்கூட 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123-வது பிரிவின்படி ஊழல் நடவடிக்கையாகும். அப்படி சட்டவிரோதமாகச் சேர்க்கப்படும் சொத்து குறித்து இதுவரை கேள்விகள் எழுப்பப்பட்டதே இல்லை. இனி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்துக் கணக்குகளைத் தொடர்ந்து சேகரித்து, ஆராய்ந்து அதில் வழக்கத்துக்கு மாறான வளர்ச்சி இருந்தால் அது தொடர்பாக விளக்கம் பெறுவதற்கு நிர்வாக நடைமுறைகள் வகுக்கப்படும் என்பது உறுதியாகியிருக்கிறது. ஆனால் இந்தப் பணியை எந்தத் துறை அல்லது அமைப்பு செய்யப்போகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் இணைந்து இதை இறுதி செய்ய வேண்டும். அதற்காக புதிய விதிமுறைகளை உருவாக்குவதோடு ஏற்கெனவே உள்ள விதிமுறைகளில் தேவையான திருத்தங்களையும் செய்யவேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x