Published : 19 Jan 2018 10:31 AM
Last Updated : 19 Jan 2018 10:31 AM

அனைத்துச் சிறார்களுக்கும் கல்வியளிப்பது அரசின் கடமை!

ட்டாய இலவசக் கல்வி தொடர்பான மிக முக்கியமான பரிந்துரையை முன்வைத்திருக்கிறது, ஜனவரி 16 அன்று வெளியாகியிருக்கும் ‘கிராமப்புறப் பகுதிகளில் கல்வியின் நிலை தொடர்பான ஆண்டறிக்கை – 2017’. 18 வயது வரையிலான எல்லா சிறார்களுக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்க வேண்டும் என்று இந்த அறிக்கை வலியுறுத்தியிருக்கிறது. குழந்தைகளுக்கான கட்டாய, இலவசக் கல்வி உரிமைச் சட்டமானது, 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு மட்டும் இலவசக் கல்வி வழங்குவது என்பதிலிருந்து 18 வயது சிறார்கள் வரை விரிவாக்க வேண்டும் என்று இந்த அறிக்கை கோரியிருக்கிறது. ‘பிரதம்’ எனும் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் நாடு முழுவதும் நடத்தப்பட்டிருக்கும் ஆய்வின் முடிவு இந்த அறிக்கை.

14 முதல் 18 வயது வரையிலானோரில் 14% பேர் பள்ளிகளில் படிக்காதவர்கள் என்று இந்த அறிக்கை கணக்கிட்டிருக்கிறது. இவர்கள் அனைவருக்கும் தொழில் சார்ந்த திறன்களை அளிக்கும் கல்வி வழங்கப்படுவது அவசியம் என்கிறது. துரதிர்ஷ்டவசமாக, கிராமப்புறத் தொடக்கக் கல்வியின் நிலையும் திருப்தியளிக்கும் வகையில் இல்லை. மேல்நிலைக் கல்வி பயின்றிருக்கும் சிறார்களின் கற்றல் திறன் மிக மோசமான நிலையில் இருக்கிறது. இவர்களில் 43% பேரால்தான் வகுத்தல் கணக்குகளைச் சரியாகச் செய்ய முடிகிறது. பள்ளியில் பயின்றிராதவர்களின் நிலைமை இன்னும் மோசம்.

குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்ப்பதில் முன்னேற்றம் இருந்தாலும், அவர்களது கற்றல் திறனைப் பொறுத்தவரை நிலைமை படுமோசமாக இருக்கிறது. அதேபோல், பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருக்கும் குழந்தைகள் வகுப்புகளுக்குத் தொடர்ந்து வருவது தொடர்பான தரவுகளும் கவலையளிக்கின்றன. மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர், தங்களைவிட வயது குறைந்த குழந்தைகளின் பாடப் புத்தகங்களை வாசிக்கவே சிரமப்படுகிறார்கள் என்றும் தெரியவந்திருக்கிறது.

சத்தீஸ்கரில் 17 முதல் 18 வயது வரையிலான சிறார்களில் பள்ளிகளில் படிக்காத சிறுவர்கள், சிறுமியர்கள் 29.4% பேர். ஆனால், கேரளத்தில் இதே வயதுடைய சிறுவர்கள், சிறுமியர்களில் பள்ளிகளில் படிக்காதவர்கள் முறையே 4.5% மற்றும் 3.9%தான். இந்த ஆய்வில் பங்கேற்ற சிறார்களில் 61% பேர் தாங்கள் இணையத்தைப் பயன்படுத்தியதே இல்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். 56% பேர் கணினியைப் பயன்படுத்தியதில்லை. எனினும், 73% பேர் செல்பேசியைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள்.

அனைத்துச் சிறார்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி மையங்களில் அவர்களுக்குக் கல்வி வழங்குவதன் மூலம், இந்நிலையை மாற்ற முடியும். நல்ல கல்விக்குச் செலவிடப்படும் தொகையானது, குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க வழிசெய்யும் என்பதுடன் நாட்டின் உற்பத்தித் திறனில் குறிப்பிடத்தக்க மேம்பாட்டுக்கும் வழிவகுக்கும். இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் இலக்குகளை, கல்வியின் அனைத்து நிலைகளுக்குமானவையாக விரிவுபடுத்தும் பார்வையே தற்போதைய முக்கியத் தேவை. நாடு விடுதலையடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும் கல்விக் கொள்கைகளில் நிலவும் இடைவெளியைப் போக்க இது உதவும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x