Published : 01 Dec 2017 10:46 AM
Last Updated : 01 Dec 2017 10:46 AM

பாமகவின் முயற்சி வரவேற்புக்குரியது!

திர்க்கட்சிகளின் வேலை அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டு வது மட்டுமல்ல; அரசு முன்னெடுக்கும் ஆக்கபூர்வமான முயற்சிகளுக்குத் தம்மாலான ஆக்கபூர்வமான பங்களிப் பைக் கொடுப்பதும்தான். தமிழகப் பள்ளிக்கல்வித் துறையின் பாடத்திட்ட வரைவு வெளியிடப்படுவதில் ஏற்படும் கால தாமதத்தைக் கடுமையாகக் கண்டித்தது பாமக. இப்போது, பள்ளிக்கல்வித் துறை புதிய பாடத் திட்டத்துக்கான வரைவை வெளியிட்டிருக்கும் நிலையில், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, பள்ளிக் கல்வித் துறைச் செயலர் உதயசந்திரனை நேரில் சந்திருப்பதும் தம் கருத்துகளைத் தெரிவித்திருப்பதும் வரவேற்புக்குரியது.

கல்வி, சுகாதாரம் போன்ற மக்களுக்கான அடிப்படைப் பணிகளை மேற்கொள்ளும் துறைகளில் ஒவ்வொரு கட்சியும் தனக்கெனச் சில பார்வைகளைக் கொண்டிருப்பது இயல்பானது. நீண்ட கால அளவில், தாக்கத்தை உண்டாக்கக்கூடிய பாடத்திட்டம் போன்ற விஷயங்களில் எல்லாருடைய பார்வைகளுக்கும் கருத்துகளுக்கும் அரசு செவிசாய்ப்பது முக்கியம். தமிழகத்தில் எல்லா விஷயங்களிலும் இப்படி நடப்பதில்லை.

விதிவிலக்காக, இந்த முறை பாடத்திட்ட மாற்றப் பணியின்போது பல்வேறு தரப்புகளில் இருந்தும் கருத்துகளைக் கேட்டறிந்தது பள்ளிக்கல்வித் துறை. இதற்காக அத்துறையின் அமைச்சர் செங்கோட்டையன், செயலர் உதயசந்திரன் இருவரையும் பாராட்ட வேண்டும். கூடவே, தற்போதைய அரசும் அதிகாரிகளும் மாற்றுக் கட்சியினர் முன்வைக்கும் குரல்களுக்குச் செவிசாய்ப்பது நல்ல தொடக்கம்.

கல்வித் துறையானது மாநிலங்களின் அதிகாரப் பட்டியலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசின் அதிகாரப் பட்டியலுக்குக் கொண்டுசெல்லப்படும் நிலையில், மாநில அரசானது கல்வித் துறை சார்ந்த விஷயங்களில் அனைத்துக் கட்சிகளின் கருத்துகளையும் கேட்டறிந்து கை கோத்துச் செல்வது காலத்தின் தேவை. ஆனால், அரசு அப்படி நடந்துகொள்ளாத நிலையில், பாமக தாமாகவே முன்சென்று தன்னுடைய ஆலோசனையை அளித்திருப்பது ஒரு நல்ல முன்னெடுப்பு. ஆண்டுதோறும் விவசாயத்துக்கென அது நிழல் நிதியறிக்கை சமர்ப்பிக்கும் வழக்கத்தின் தொடர்ச்சியாக இதைப் பார்க்கலாம்.

புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கையை மிகச் சிறந்த முயற்சி என்று அன்புமணி பாராட்டியிருக்கிறார். கூடவே, பள்ளிக் கல்வித் துறைச் செயலரிடம் பாமக சார்பில் அளிக்கப்பட்ட ஆலோசனைகளில் ‘தமிழ்மொழிப் பாடத்தை இன்னும் எளிமையாக்க வேண்டும், எல்லா நாட்களிலும் விளையாட்டு வகுப்புகள் இடம் பெற வேண்டும், யோகா கற்றுக்கொடுக்கப்பட வேண்டும்’ என்பனஉள்ளிட்ட யோசனைகளைத் தெரிவித்திருக்கிறார்.

கல்வித் துறை சார்ந்த சில முக்கிய கோரிக்கைகளையும் அன்புமணி முன்வைத்திருக்கிறார். ‘தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்வி வாரியங்களையும் ஒன்றாக இணைக்க வேண்டும், தமிழ் வழிக் கல்வி யைக் கட்டாயமாக்க வேண்டும், மெய்நிகர் (virtual) வகுப்புகளை உருவாக்க வேண்டும், மாணவர்களுக்கு நோட் பேட் கருவிகளை இலவசமாக வழங்க வேண்டும், கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அவற்றில் அரசு கட்டாயம் பரிசீலிக்க வேண்டியவை.

இப்படியான பங்கேற்பை ஏனைய கட்சிகளும் பின்பற்ற வேண்டும். இனிமேலேனும் அனைத்துக் கட்சிகளோடும் கலந்தாலோசிப்பதை ஒரு வழக்கமாக அரசு கொள்ள வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x