Published : 23 Nov 2017 10:39 AM
Last Updated : 23 Nov 2017 10:39 AM

ஜெர்மனியின் அரசியல் குழப்பம் ஏற்படுத்தியிருக்கும் புதிய சவால்கள்!

ஜெ

ர்மனியில் புதிய அரசை அமைப்பது தொடர்பாக அதிபர் ஏஞ்சலா மெர்கலின் ‘கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன்’ (சி.டி.யூ.) கட்சிக்கும் பிற கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால், மீண்டும் தேர்தல் நடத்தப்படும் சூழல் உருவாகியிருக்கிறது. இதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியத் தில் ஸ்திரத்தன்மையின்மை ஏற்படும் அபாயமும் உருவாகியிருக்கிறது. ஜெர்மனியில் தஞ்சமடைந்திருக்கும் ஆயிரக்கணக்கான சிரியா அகதிகள் தங்கள் குடும்பத்தினரையும் ஜெர்மனிக்கு அழைத்துக்கொள்ள அனுமதிக்கலாமா, கூடாதா எனும் விவாதம் தான் இந்தப் பேச்சுவார்த்தையில் மிக முக்கியமான அம்சம். வெவ்வேறு சித்தாந்தக் கொள்கை கொண்ட மத்திய வலதுசாரிக் கட்சியான சி.டி.யூ., இடதுசாரிக் கட்சியான கிரீன்ஸ் கட்சி, சந்தைக்கு ஆதரவான ‘ஃப்ரீ டெமாக்ரடிக் பார்ட்டி’ (எஃப்.டி.பி.) ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையிலான இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில்தான் முடிவடைந்திருக்கிறது.

சி.டி.யூ.வின் துணை அமைப்பான ‘கிறிஸ்டியன் சோஷியல் யூனியன்’ கட்சி வலியுறுத்தியதன்பேரில், அகதிகளின் குடும்பத்தினரை அனுமதிப்பதற்குத் தற்போது இருக்கும் கட்டுப்பாட்டை நீட்டிப்பது எனும் நிலைப்பாட்டை சி.டி.யூ. எடுத்திருக்கிறது. 2015-ல், சிரியா போன்ற நாடுகளிலிருந்து தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஐரோப்பியாவுக்கு வந்த அகதிகளை அனுமதிப்பது என்று ஜெர்மனி அரசு எடுத்த முடிவுக்கு கிறிஸ்டியன் சோஷியல் யூனியன் கட்சி ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. கிரீன்ஸ் கட்சிக்கும் இதில் உடன்பாடுதான்.

ஆனால், ஜெர்மனியின் கிழக்குப் பகுதிகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று பிடிவாதம் காட்டும் எஃப்.டி.பி. கட்சி யால் இந்தப் பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. கூட்டணியில் இடம்பெற மத்திய இடதுசாரிக் கட்சியான சோஷியல் டெமாக்ரடிக் கட்சி மறுத்துவரும் நிலையில், இன்னொரு தேர்தலுக்கு வாய்ப்பு அதிகம். செப்டம்பரில் நடந்த தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்த இந்தக் கட்சி, சி.டி.யூ.வுக்கு ஆதரவு தர விரும்பவில்லை. அப்படியே ஆதரவு தர முன்வந்தாலும் மெர்கலுக்குப் பதிலாக வேறு தலைவரைத்தான் அதிபராக்க வேண்டும் என்பது அக்கட்சியின் நிலைப்பாடு.

சி.டி.யூ. தலைமையில் சிறுபான்மை அரசு அமையலாம் என்றாலும், பழைமைவாதிகள் அதற்குப் பெரிய ஆர்வம் காட்டவில்லை. கூட்டணி அரசு அமைய வாய்ப்பில்லாத இந்தச் சூழலில் மீண்டும் தேர்தல் நடந்தால், அதைப் பயன்படுத்தி அதிக இடங்களில் வெல்ல வேண்டும் என்று தீர்மானத்துடன் இருக்கிறது வலதுசாரிக் கட்சியான ஏ.எஃப்.டி. கட்சி (ஜெர்மனிக்கான மாற்றுக் கட்சி). செப்டம்பரில் நடந்த தேர்தலில் ஏ.எஃப்.டி. கட்சிக்கு 12.6% வாக்குகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இத்தனை ஆண்டுகளில் நடுநிலையான ஆட்சிக்கு வழிவகுத்த சமரச பாணி ஆட்சி முறையை மீண்டும் வலுப்படுத்துவதுதான் ஜெர்மனியின் இன்றைய முக்கியத் தேவை. இந்த ஆண்டு நெதர்லாந்திலும் பிரான்ஸிலும் நடந்த தேர்தல்களின் முடிவுகள் வெகுஜன ஈர்ப்பு அலைக்கு எதிரான போக்கைத்தான் வெளிப்படுத்தின. இந்தச் சூழலில் ஜெர்மனி எப்படி தனது நடுநிலையான, சமரச பாணி அரசியல் சூழலைத் தக்கவைத்துக்கொள்ளும் என்பது மிக முக்கியமான கேள்வி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x