Published : 24 Aug 2017 09:37 AM
Last Updated : 24 Aug 2017 09:37 AM

சகாரா முதலீட்டாளர்கள் விவகாரம்: தீவிர விசாரணை தேவை!

சு

ப்ரதா ராய் தலைமையிலான சகாரா குழுமம், முதலீட்டாளர்களிடம் வாங்கியிருந்த பணத்தை அவர்களுக்குத் திருப்பித் தருமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அந்நிறுவனம் சில முதலீட்டாளர்களுக்கு மட்டுமே பணம் திருப்பித் தந்திருப்பது, மற்ற முதலீட்டாளர்கள் பணத்தைத் திரும்பப் பெற முயற்சி செய்யாதது போன்றவை பலத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கின்றன.

சகாரா குழுமம் உரிய கட்டுப்பாட்டு அமைப்புகளிடம் ஒப்புதல் பெறாமல் நிதி திரட்டியதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் அந்த உத்தரவைப் பிறப்பித்தது. சகாரா குழுமம் திரட்டிய கடன் தொகை உரிய முதலீட்டாளர்களுக்குத் திருப்பிச் செலுத்தப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய பொறுப்பும் இந்திய பங்குகள்-பரிவர்த்தனை வாரியத்திடம் (‘செபி’) ஒப்படைக்கப்பட்டது. இவ்வளவுக்குப் பிறகும் சகாரா குழுமத்தின் முதலீட்டாளர்கள் யார் யார் என்பதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

முதலீட்டாளர்கள் அந்த நிறுவனத்துக்கு முதலில் கொடுத்த அசல் (டெபாசிட்), அதற்குச் சேர வேண்டிய வட்டி என்று எல்லாம் சேர்ந்து ரூ.40,000 கோடியாகப் பெருத்துவிட்டது. உச்ச நீதிமன்ற ஆணைக்குப் பிறகு அசல், வட்டி எல்லாமும் சேர்த்து ரூ.14,487 கோடியை ‘செபி’ அமைப்பிடம் சகாரா வழங்கியது. ஆனால், ‘செபி’யின் ஆண்டு அறிக்கைப்படி 2017 மார்ச் 31 வரையில், ரூ.38.05 கோடி வட்டி உட்பட, வெறும் ரூ.85.02 கோடி மட்டுமே முதலீட்டாளர்களுக்குத் திருப்பித் தரப்பட்டது.

இத்தனைக்கும் சகாரா குழுமத்தில் முதலீடு செய்த உண்மையான முதலீட்டாளர்கள் முன்வந்து தாங்கள் செலுத்திய தொகையை வட்டியுடன் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ‘செபி’ அமைப்பு 2013 மே முதல் வேண்டு கோள் விடுத்துவருகிறது. முதலீட்டாளர்களின் நலனைப் பாதுகாக்கத்தான் உச்ச நீதிமன்றமும் ‘செபி’யும் இதில் அக்கறை காட்டுகின்றன. ஆனால், முதலீட்டில் பெரும் பகுதி கருப்பை வெள்ளையாக்கும் உத்திதான் என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.

2012-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு முன்னதாகவே, தன்னிடம் முதலீடு செய்தவர்களின் பணத்தில் 95% திருப்பித் தந்துவிட்டதாக சகாரா குழுமம் கூறியிருந்தது. இதனால்தான் மிகச் சிறிய தொகையை மட்டுமே இப்போது முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுள்ளனர் என்கிறது. ஆனால், இது நம்பத்தகுந்த வாதமல்ல!

மத்திய அரசின் வருவாய்ப் புலனாய்வுத் துறை அமல் பிரிவு இயக்குநரகம் சகாரா குழுமத்துக்கு எதிராக விசாரணை நடத்தியும் ஆதாரங்களைக் கைப்பற்ற முடியவில்லை. இந்த விசாரணையை வேறு விதத்தில் தீவிரப்படுத்த வேண்டும். இது தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்வது யார், எப்படி என்ற கேள்விகளுக்கு விடை காண உதவும். அத்துடன் சகாரா குழுமம் இப்படி நிதி திரட்ட கம்பெனிகள் துறை அமைச்சகம் அனுமதி அளித்ததையே விசாரிக்காமல் விடக் கூடாது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x