Published : 23 Feb 2016 08:29 AM
Last Updated : 23 Feb 2016 08:29 AM

மாணவர்கள் தேச விரோதிகளா?

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் தொடங்கி டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யு.) வரை நடந்துவரும் சம்பவங்களை கவனமாக ஆராயும் போது, அவற்றினூடே பாஜகவின் அரசியல் செயல்திட்டம் மறைந்திருப்பதைப் புரிந்துகொள்ள முடியும். இந்தச் சம்பவங்களின் பின்னணியில் இந்தியப் பல்கலைக்கழகங்களைத் தங்களுடைய சித்தாந்தங்களுக்கு ஏற்ற இடங்களாக மாற்றுவதற்குத்தான் பாஜக தீவிரமாக முயற்சி செய்கிறது என்பதும் எளிதாக விளங்கும். இது முற்றிலும் கண்டிக்கத்தக்க விஷயம்.

பாகிஸ்தானில் வசிக்கும் பயங்கரவாதி ஒருவர் ஜே.என்.யு. மாணவர்களுக்குப் பக்கபலமாகச் செயல்படுகிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கே அறிவித்தார். அதற்கு ஆதாரமாக சற்றும் உறுதிப்படுத்தப்படாத ஒரு ட்விட்டர் நிலைத்தகவலை மேற்கோள் காட்டினார். தேசவிரோதச் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதியப்பட்ட கன்னையா குமார், நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது தாக்கப்பட்டார். அவரைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. டெல்லி பிரதேச சட்டப் பேரவை பாஜக உறுப்பினர் ஒருவர் மாணவர்களை நீதிமன்ற வளாகத்தில் தாக்கியதைப் புகைப்படங்களும் ஒளிப்படங்களும் தெளிவாகக் காட்டியும் நடவடிக்கை எடுக்காமல் டெல்லி மாநகரக் காவல்துறை உயர் அதிகாரி தாமதப்படுத்திக் கொண்டே வந்தார். இறுதியாக அவர் கைது செய்யப்பட்டு, உடனடியாக பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

2001-ல் நாடாளுமன்றம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட அஃப்சல் குரு 2013-ல் தூக்கிலிடப்பட்டது தொடர்பாக ஜே.என்.யு. பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ச்சி நடத்தியதை பாஜக தலைவர்கள் வெகுவாகக் கண்டிக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியே தேச விரோதமானது என்றும் அதில் கலந்துகொண்டவர்களில் சிலர் எழுப்பிய கோஷங்கள் தேச விரோதமானவை என்றும் சொல்லும் அவர்கள், அவற்றுக்கு எதிராக நடத்தப்பட்டவை அனைத்துமே நியாயமானவைதான் என்றும் வாதிடுகிறார்கள்.

சுதந்திர இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன் நிகழ்ந்த தில்லை. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது மாநில அரசுகளின் கடமை. அப்படியிருக்க மத்திய பல்கலைக்கழகங்களில் நடைபெறும் சம்பவங்களில் மூக்கை நுழைத்து, மாநிலங்களுக்குள்ள அதிகாரத்தையும் பொறுப்பையும் பாதிக்கும் வகையில் அதைப் பெரிதாக்கி, மாணவர்கள் மீதும் அவர்களை ஆதரிப்பவர்கள் மீதும் வழக்குகளைப் பதிவு செய்து, விசாரிப்பது, காவலில் வைப்பது என்று அச்சுறுத்தும் செயல்களிலேயே தொடர்ந்து ஈடுபடுகிறது மத்திய அரசு. ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் தேச பக்தர்கள், மற்றவர்கள் தேச விரோதிகள் என்ற கருத்தைப் பரப்ப முயற்சிப்பது ஆபத்தான போக்கு.

இடதுசாரி மாணவர் இயக்கங்களின் செல்வாக்கு மிகுந்த பல்கலைக் கழகங்களில் வேண்டுமென்றே அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. தேசியவாதம் எது, தேசியவாதிகள் யார் என்பதற்குப் புதிய வரையறைகளை வகுக்க பாஜக முற்படுகிறது. இந்திய தண்டனையியல் சட்டத்தின் 124-ஏ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுவது விமர்சனத்துக்கு உள்ளாவதற்கு இதுபோன்ற சம்பவங்கள்தான் காரணம். சட்டப்படியான ஆட்சி என்பது வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு விதமானது; குறிப்பிட்ட சிலர் மீது மட்டும்தான் சட்டம் பாயும் என்பதை ஜே.என்.யு. தொடர்பான சமீபத்திய சம்பவங்கள் தெளிவாக உணர்த்துகின்றன.

உலகம் முழுவதுமிருந்து கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் பலர் ஜே.என்.யு. மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். கருத்துச் சுதந்திரம், ஆரோக்கியமான விவாதம் ஆகியவை இல்லாமல் ஒரு தேசம் வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்ல முடியாது என்பதை பாஜகவும் அதன் ஆதரவாளர்களும் உணர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x