Published : 06 May 2015 08:10 AM
Last Updated : 06 May 2015 08:10 AM

மருந்து மருந்துதானா?

நிறைய முக்கியமான விவாதங்கள் வெறும் பரபரப்பாகவும் சர்ச்சையாகவும் மாறிப்போகின்றன நம் நாட்டில். யோகா குரு பாபா ராம்தேவ் நிறுவனத்தின் ஆயுர்வேதத் தயாரிப்பான ‘திவ்ய புத்ரஜீவக் பீஜ்’ விவகாரம் சமீபத்திய உதாரணங்களில் ஒன்று. ஆண் குழந்தைப்பேறுக்கான மருந்தாக இதை விற்கிறார்கள் என்று கூறி, மாநிலங்களவை உறுப்பினர் கே.சி. தியாகி இதை நாடாளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

இந்த மருந்து உண்மையிலேயே குழந்தை இல்லாத தம்பதியருக்குக் குழந்தைப்பேறை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் நிலவுகிறது. “ஆண், பெண் என்ற இருபாலருக்கு இடையில் எந்தவித வேறுபாடும் காட்டப்படக் கூடாது என்பதை அரசு தொடர்ந்து வலியுறுத்திவரும் சூழலில், நம் சமூகத்தில் நிலவும் ஆண் குழந்தை மோகத்தை ஊக்குவிப்பதாக இந்த மருந்தின் விளம்பரம் இருக்கிறது. பெண் சிசுக்களுக்கு மறைமுக விரோத காரியமான இது சட்ட விரோதமும்கூட” என்று சுட்டிக்காட்டினார் தியாகி. தொடர்ந்து ராம்தேவின் தயாரிப்புக்குத் தடையும் இது தொடர்பாக மத்திய அரசின் விளக்கத்தையும் கோரினார்கள் உறுப்பினர்கள். சமகால இந்தியாவின் பெண் சிசுக்களுக்கு எதிரான மனநிலையை விளக்க பெரிய ஆதாரங்கள் ஏதும் தேவை இல்லை. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விவரம் போதுமானது. 0 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளில் 1,000-க்கு 914 பேர் என்ற விகிதத்திலேயே பெண் குழந்தைகள் உள்ளனர். சட்ட விரோதக் கருக்கலைப்புக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று ஆண் குழந்தைகள்தான் வேண்டும் எனும் விருப்பமும் சிசுவின் பாலினத்தைக் காட்டிக்கொடுக்கும் பரிசோதனை மையங்களும் என்பது நாம் அறியாதது அல்ல. இப்படிப்பட்ட சூழலில், ‘புத்ரன் பிறக்க எங்கள் ஆயுர்வேத மருந்தைச் சாப்பிடுங்கள்’ எனும் ஒரு விளம்பரத்தை விவகாரமாக்குவதை வெறும் அரசியல் நோக்கம் என்று கூற முடியாது. பாபா ராம்தேவ் இதை மறுத்தார். ‘புத்ரஜீவக்’ என்பது குழந்தைப்பேறைக் குறிக்கும் சம்ஸ்கிருதச் சொல்; அது ஆண் பாலையோ பெண் பாலையோ குறிப்பிட்டுச் சொல்வது அல்ல” என்பது அவருடைய வாதம்.

இந்த இரு வாதங்களையும் தாண்டி நாம் உள்ளே கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இந்த விவகாரத்தில் இருக்கிறது. முதலில், இத்தகைய தயாரிப்புகள் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தவை என்பதே அது.

ஆங்கில மருத்துவத்தின் மீது ஏற்படும் அதிருப்தியாலேயே மாற்று மருத்துவ முறைகளை நோக்கிப் பலரும் செல்கிறார்கள். மாற்று மருத்துவ முறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான நோய்களைக் குணப்படுத்துவதில் அற்புதமாகப் பலன் அளிக்கின்றன. ஆனால், எல்லா மாற்று மருத்துவ முறைகளுமே எல்லாவற்றுக்குமான தீர்வுகளைக் கொண்டிருக்கின்றனவா? உண்மை என்னவென்றால், இங்குள்ள பெரும்பாலான மாற்று மருத்துவ மருத்துவர்கள் தரும் மருந்துகளுக்கு அவர்களுடைய வார்த்தைகளே சான்றிதழ்கள். ‘‘உலகில் குணப்படுத்த முடியாத நோய்கள் என்று எங்களிடம் எதுவும் கிடையாது’’ என்று வாய்ஜாலத்தாலேயே தொழில் நடத்தும் எவ்வளவோ பேரைப் பார்த்துக்கொண்டேதானே கடக்கிறோம்? மாற்று மருத்துவத்தையும் மருந்துகளையும் நம்பகமான வட்டத்துக்குள் கொண்டுவருவதில் அரசின் பங்குதான் என்ன? ஆயுர்வேதம், யோகாசனம், நேச்சுரோபதி, யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய மாற்று மருத்துவ சிகிச்சை முறைகளை ‘ஆயுஷ்’ என்ற பெயரில் ஒரே குடையின் கீழ் 2014-ல் கொண்டுவந்தது மத்திய அரசு. ஏன் ‘ஆயுஷ்’ நிறுவனத்தை இதற்கான அமைப்பாக மாற்றக் கூடாது?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x