Published : 26 Dec 2016 10:03 AM
Last Updated : 26 Dec 2016 10:03 AM

பொருளாதாரத் தேக்கத்திலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும்!

ஊழல் மற்றும் கறுப்புப் பணத்தின் பிடியிலிருந்து நாட்டைக் காப்பதற்காகவே பணமதிப்பு நீக்கம் என்று சொல்லி, ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கையின் துணை விளைவுகளில் ஒன்றாக ஏற்பட்டுள்ள பொருளாதார நடவடிக்கைகள் முடக்கம், நாட்டைப் பெரிய அளவில் பாதித்திருக்கிறது.

இது தொடர்பாக இனியும் வாய்ப்பந்தல் போட்டு நாட்களை மோடி அரசு கடத்த முடியாது. 2016 மார்ச் 31 வரை புழக்கத்தில் இருந்த பணத்தில் 86% ரொக்கத்தைத் திடீரென நிறுத்திவிட்டதால் பணப் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. இதன் வெளிப்படையான பாதிப்பை நாடு அனுபவித்துக்கொண்டிருக்கிறது. மக்களின் வாங்கும் சக்தியைக் குறைத்து நுகர்வை முடக்கியுள்ளது பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்கிறது, உற்பத்தித் துறையின் செயல்பாடுகள் தொடர்பான டிசம்பர் 1 நாளைய ஆய்வறிக்கை.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையும் என்று பொருளாதார ஆய்வு நிறுவனங்கள் மதிப்பிடுவதால், இந்த நிதியாண்டின் காலாண்டு காலகட்டத்தைத் தாண்டியும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் தாக்கம் நீடிக்கும் என்று உறுதியாகிறது. பொருளாதார வளர்ச்சியை முன்னறிவிக்கும் 13 விதமான குறியீடுகளை வைத்து, இந்த ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு மொத்த உற்பத்தியை மிதமான அளவில் மதிப்பிட்டாலும் வளர்ச்சியின் வேகம் அரை சதவீதத்திலிருந்து ஒரு சதவீதம் வரை குறையும் என்று தெரிகிறது.

அரசாங்கம் நவம்பர் 30-ல் பொருளாதாரத் தரவுகளை வெளியிட்டது. இந்தத் தென்மேற்கு பருவ காலத்தில் நமது விவசாயத் துறையின் செயல்பாடு காரணமாக உள்நாட்டு மொத்த உற்பத்தியின் வளர்ச்சி ஜூலை - ஆகஸ்ட் காலகட்டத்தில் 7.3% இருக்கும் என்றன அவை. அடுத்தடுத்து, இரண்டு வருடங்களாக வறட்சி நிலவியது. இந்தப் பருவ காலம்தான் விதைக்கப்பட்ட நிலப்பரப்புக்கு ஒரு உற்சாகத்தைத் தந்தது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள பணப் பற்றாக்குறை கிராமப்புறங்களில் மக்கள் பொருட்களை வாங்குவதையும் விவசாயச் செயல்பாடுகளில் ஈடுபடுவதையும் பாதித்துள்ளது.

வங்கித் துறையின் சேவை போதுமான அளவுக்கு விரிவடைந்திராத இந்நாட்டின் பெரும்பான்மை சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் பொருளாதாரச் செயல்பாடுகள் ஆகப்பெருமளவில் ரொக்கப் பரிவர்த்தனையை அடிப்படையாகக் கொண்டே நடக்கின்றன. இன்றைய பணப் பற்றாக்குறை கிராமப்புறப் பொருளாதாரத்தைப் பெருமளவில் முடக்கியுள்ளது. குறிப்பாக, விவசாயப் பொருளாதாரம் மீள எவ்வளவு காலம் பிடிக்கும் என்ற கேள்வி பெரும் கவலையை உண்டாக்குகிறது. இதேபோல, நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு வாழ்வளிக்கும் அமைப்புசாராத் துறையிலும் பெரும் தேக்கம் உருவாகியிருக்கிறது.

இப்படியான நிலையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கையை நியாயப்படுத்தி, நிலைமை சீக்கிரமே சீரடைந்துவிடும் என்று சொல்லிக்கொண்டிருப்பதாலும், எதிர்க்கட்சிகளைச் சாடிக்கொண்டிருப்பதாலும் மட்டுமே மக்களை இன்னல்களிலிருந்து மீட்டுவிட முடியாது. நாட்டின் பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளுக்காக மிகத் தீவிர மான நடவடிக்கைகளில் அரசும் ரிசர்வ் வங்கியும் இறங்க வேண்டும். பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x