Published : 07 Jan 2017 10:20 AM
Last Updated : 07 Jan 2017 10:20 AM

புத்துயிர் ஊட்டட்டும் 2017 புத்தகக் காட்சி!

சென்னை புத்தகக் காட்சி-2017 நேற்று தொடங்கியிருக்கிறது. தென்னிந்தியாவிலேயே பெரிய புத்தகக் கொண்டாட்டம் இது. பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், ஊடகங்கள் என்று ஒருசேரக் கொண்டாடும் பெருநிகழ்வு! பல ஆண்டுகள் சிறிய அளவில் நடந்துகொண்டிருந்த இந்த விழா கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பிரம்மாண்டமாக உருவெடுத்திருப்பது மிகவும் ஆரோக்கியமான சமூக மாற்றம் என்றே கருத வேண்டும்.

வலைப்பூக்கள், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களின் வருகையும் கூட இந்த மாற்றத்துக்கு முக்கியமான காரணம். ஊடகங்களில் எல்லோருக்கும் வாய்ப்பு கிடைப்பது சாத்தியமில்லை என்னும் நிலையில், சமூக ஊடகங்கள் பெரிய வரப்பிரசாதமாகவே அமைந்தன. எழுத்தாளர்கள் குறித்தும் படைப்புகள் குறித்தும் புத்தகக் காட்சி குறித்தும் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது அந்தப் பரப்பிலிருந்து நீண்டு ஊடகங்களின் எல்லையைத் தொட்டது. புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் புத்தகக் காட்சிகளையும் ஊடகங்கள் பொருட்படுத்தி, முக்கிய இடம் அளிக்க ஆரம்பித்தன. இவையெல்லாம் சேர்ந்து புத்தகக் காட்சிகளைப் பெருவெற்றியடைய வைத்தன.

எனினும் 2016 ஜனவரியில் நடக்கவிருந்த 'சென்னை புத்தகக் காட்சி', 2015 இறுதியில் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தால் தள்ளிப்போனதால் பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் என்று அனைத்துத் தரப்புக்கும் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. ஏற்கெனவே, மழை வெள்ளத்தில் புத்தகங்களைப் பறிகொடுத்திருந்த பதிப்பாளர்களுக்கும் விற்பனை யாளர்களுக்கும் புத்தகக் காட்சி தள்ளிப்போனதால் ஏற்பட்ட பாதிப்பு சொல்லில் அடங்காது.

இந்நிலையில், 2016 ஜூன் மாதம் புத்தகக் காட்சி நடைபெற்றது. அப்போதும் இடையிடையே மழை பெய்ய புத்தகக் காட்சியில் சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டது. என்றாலும், பெரும்பாலான பதிப்பாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் ஓரளவு ஆசுவாசத்தை அந்தப் புத்தகக் காட்சி தந்தது.

இதையடுத்து 2016 இறுதியில் பணமதிப்பு நீக்கம், வார்தா புயல் போன்றவற்றால் புத்தக உலகினர் பெரிதும் கலங்கிப்போயிருந்தார்கள். பதிப்பாளர்கள், விற்பனையாளர்களின் கலக்கத்தை நீக்கும் வகையில் தற்போது புத்தகக் காட்சி தொடங்கியிருக்கிறது. பணமதிப்பு நீக்கத்தால் புத்தகங்கள் வாங்குவதில் எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதற்காகச் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

புத்தக உலகினரின் கலக்கத்தை நீக்குவது மட்டுமல்ல, இடையறாத அறிவு மரபை முன்னெடுத்துச் செல்வதும் வாசகர்களின் கையில்தான் இருக்கிறது. அந்த நம்பிக்கையை வாசகர்கள் நிச்சயம் காப்பாற்ற வேண்டுமென்றால் தங்கள் குழந்தைகள், குடும்பம், நண்பர்கள் புடைசூழ புத்தகக் காட்சியை நோக்கிப் படையெடுக்க வேண்டும். முன்னுதாரணமில்லாத ஒரு அறிவு நிகழ்வாக இந்தப் புத்தகக் காட்சியை மாற்ற வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x