Published : 17 Aug 2016 09:31 AM
Last Updated : 17 Aug 2016 09:31 AM

நோக்கத்தைப் போலவே வழிமுறையும் முக்கியம்!

மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்பது வெற்று வசனம் அல்ல.மதுவைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்துடன் பிஹார் முதல்வர் நிதீஷ் குமார் முன்னெடுத்துவரும் நடவடிக்கை களும் முக்கியமாக அவற்றுக்குப் பின்னிருக்கும் நல்ல நோக்கமும் மெச்சப்பட வேண்டியவை. அதேசமயம், சட்டரீதியாக இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது பரந்துப்பட்ட பார்வையும் கள யதார்த்தச் சூழலைப் புரிந்துகொள்ளும் அணுகுமுறையும் அவசியம்.

பிஹாரில் ஏப்ரல் 1 முதல் நாட்டு மது வகைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.அடுத்த கட்டமாக இந்தியாவில் தயாராகும் விஸ்கி, பிராந்தி, ஒயின், பீர் போன்ற அன்னிய வகை மதுவுக்கும் தடை விதிக்கப் பட்டது. அந்தத் தடையும் அரசு செய்த ஏற்பாடுகளும் மதுப் பழக்கத்தை நிறுத்தவோ ஒழிக்கவோ போதுமானதல்ல என்ற விமர்சனத்தை அடுத்து, அச்சட்டத்தின் பிரிவுகளை மிகவும் கடுமையானதாக்கிப் புதிய மசோதாவை சட்டப்பேரவையில் கொண்டுவந்து நிறைவேற்றி யிருக்கிறார் நிதீஷ் குமார். இதைக் கொடூரம் என்று எதிர்க்கட்சிகள் சாடியிருப்பது கூடுதலான வார்த்தை என்றாலும், இதன் சில பிரிவுகள் மிகவும் எதேச்சாதிகாரமானவையாக இருக்கின்றன என்பதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

ஒரு வீட்டில் அல்லது குடும்பத்தில் யாராவது ஒருவர் குடித்திருப் பதோ, மதுவை மறைத்து வைத்திருப்பதோ தெரியவந்தால் அந்த வீட்டில் உள்ள வயதுவந்த அனைவரையும் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று ஒரு பிரிவு கூறுகிறது. அந்த வீட்டில் ஒருவர் குடித்தது தங்களுக்குத் தெரியவில்லை என்று அவர்கள் நிரூபிக்கும் வரை, அவர்களும் உடந்தையாக இருந்ததாகவே கருதப்பட்டுக் கைது செய்யப்படுவர். மது புட்டி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டாலும் இதே கைது நடவடிக்கைதான்.மதுவைக் குடித்தாலோ, வைத்திருந்தாலோ, மதுவைத் தயாரிப்பதற்கு உதவும் சரக்குகளைச் சேகரித்து வைத்திருந்தாலோ நடவடிக்கை பாயும்; பார்த்த மாத்திரத்தில் காவல் துறையினர் அந்த வீட்டில் இருப்பவர்களைக் கைது செய்துவிடலாம்.

அந்த வீட்டைச் சேர்ந்தவர் மட்டுமல்ல, குடித்தனக்காரர், வீட்டுக்கு வரும் விருந்தாளி அல்லது நண்பர் என்று யாராவது ஒருவர் மது புட்டியைக் கொண்டுவந்திருந்தாலோ, மறைத்து வைத்திருந்தாலோ வீட்டாரும் அதற்குப் பொறுப்பேற்கும் வகையில் கைது செய்யப்படுவார்கள். அடிக்கடி இப்படி ஒரு தெருவில் அல்லது கிராமத்தில் மது புட்டிகள் கைப்பற்றப்பட்டால் அந்த வீதியில் அல்லது கிராமத்தில் உள்ள அனைவருக்கும் கூட்டு அபராதம் விதிக்கப்படும். சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும். இப்படியெல்லாம் சொல்கிறது நிதீஷ் முன்மொழியும் சட்டம்.

மதுவிலக்குச் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்கவும் தவறு செய்யும் அதிகாரிகளைத் தண்டிக்கவும்தான் இப்படியான கடுமையான பிரிவுகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்கிறார் நிதீஷ். மதுவிலக்குதான் எங்களுடைய முக்கிய கொள்கை என்பதால் அதை அமல்படுத்தியே தீருவோம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். சர்ச்சைக்கிடமான சில பிரிவுகளால் இந்த மசோதா, சட்டமானாலும் அமல்படுத்துவது எளிதாக இருக்காது. நிறைய வழக்குகள் இந்தச் சட்டத்தை எதிர்த்தே போடப்பட வாய்ப்பு இருக்கிறது. ஒரு குற்றத்தை ஒழிப்பதற்கான சட்டம் பழுது இல்லாமல், அப்பாவிகள் அலைக்கழிக்கப்படாமல், சட்டங்களுக்கான இலக்கணங்களுக்கு உள்பட்டு இருக்க வேண்டும். நோக்கம் நல்லதாக இருந்தாலும் வழிமுறை சட்டத்தையே மீறும் வகையில் இருந்தால் அதை எப்படி ஏற்பது? பிஹார் இந்த விஷயத்தில் நாட்டுக்கே முன்னுதாரணமாக இருக்க முடியும். அதற்கு நிதீஷ் இன்னும் யோசித்துச் செயல்பட வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x