Published : 14 Nov 2013 12:00 AM
Last Updated : 14 Nov 2013 12:00 AM

நேரு என்ற ஆக்க சக்தி

சுதந்திரத்துக்கு முன்பு இந்தியாவை ஒன்றுசேர்த்துப் போராட வைப்பதற்கான, ஒன்றிணைக்கும் சக்தி தேவைப்பட்டது. மிகச் சரியாக அந்த இடத்தில் காந்தி வந்து அமர்ந்தார். சுதந்திரத்துக்குப் பிறகும் அதேபோல் ஒன்றிணைக்கும் சக்தி தேவைப்பட்டது. சுதந்திரமடைந்த சில மாதங்களில் காந்தி கொல்லப்படவே, அவருடைய இடத்தில் இயல்பாகவே நேரு வந்து அமர்ந்தார். ஒருங்கிணைக்கும் சக்தியாக ஆற்ற வேண்டிய பணிகள் நேருவுக்கு முன் குவிந்துகிடந்தன, காந்திக்கு இருந்த கடமைகளைவிட அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆங்கிலேயர் நேருவிடம் கொடுத்துவிட்டுப் போன இந்தியாவை ‘சிதிலம்’ என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவுக்கே உரித்தான பிரச்சினைகளான தீண்டாமை, மதப்பிரிவினைகள், பெண்ணடிமைத்தனம், ஏழ்மை, பிற்போக்குத்தனம் போன்றவற்றுடன் ஆங்கிலேயர் ஆட்சியினால் ஏற்பட்டிருந்த அலங்கோலமும் அடக்கம். தன்னுடைய தாய்நாட்டைப் பற்றிய பெருமிதம் இருக்கும் அதே வேளையில், அதன் அடிப்படைப் பிரச்சினைகளையும் நன்கு அறிந்தவர் நேரு. எல்லாவற்றையும் அடிப்படையிலிருந்தே ஆரம்பிக்க வேண்டிய நிலை. நேரு தனது வாழ்வில் இரண்டாவது பயணத்தைத் தொடங்க வேண்டிய கட்டம். அவருக்கு மலைப்பாகத்தான் இருந்தது. சுதந்திரப் போராட்டத்தில் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழிக்க நேரிட்ட களைப்பு, இந்தியப் பிரிவினை உருவாக்கியிருந்த துயர உணர்வு எல்லாம் அவரிடம் இருக்கத்தான் செய்தன. என்றாலும், நேரு அப்படியே செயலற்று நின்றுவிடவில்லை. யாரோ வந்து செய்வார்கள் என்று எதிர்பார்க்காமல் தானே எடுத்துப்போட்டுச் செய்ய ஆரம்பித்தார்.

இந்தியா என்பது எல்லோருக்குமானது என்பதுதான் அவருடைய முதல் செய்தி. இதன் அடிப்படையில்தான் தன் செயல்திட்டங்களை வகுத்தார். பிற நாடுகளுடன் கொள்ள வேண்டிய நட்புறவுகுறித்து அவருக்கு இருந்த கருத்துகளை இப்போது பார்க்கும்போது லட்சியவாதமாகத்தான் தோன்றும். ‘‘எந்த மனிதரையும் அவரது நற்குணங்கள் வழியே அணுகிவிட முடியும்’’ என்பார் காந்தி. இதையே நாடுகளுக்குப் பொருத்திப்பார்த்தவர்தான் நேரு. ‘‘செழிப்பான, பாதுகாப்பான பாகிஸ்தான் என்பதுதான் இந்தியாவின் நலனுக்கு அவசியம்’’ என்று அவர் சொன்ன கருத்தை இன்று நாம் எல்லோரும் எள்ளி நகையாடலாம். ஆனால், ‘ஒரே உலகம்’ என்ற அவரது மகத்தான கனவைப் பொருத்தவரை இந்தியா, பாகிஸ்தான் உட்பட எந்த நாடுமே ஒன்றுதான். இந்தக் கனவு சாத்தியமே இல்லாத ஒன்றாகத் தோன்றினாலும், இவ்வளவு போர்கள், பிரிவினைகள் நிரம்பிய உலகத்துக்கு மிகமிக அவசியமான கனவாக இருக்கிறது. தோற்றாலும் அந்தக் கனவை நம்பி ஓடினால்தான் குறைந்தபட்ச அமைதியாவது இந்த உலகத்துக்குச் சாத்தியமாகும்.

நேரு அடைந்த வெற்றிகள் எல்லாம் நம்முடையதாகவும் அவர் அடைந்த தோல்விகளெல்லாம் அவருடையதாகவும் மட்டும் பார்க்கப்படுகின்றன. இந்தப் பார்வையே தவறு. எல்லோருக்குமான இந்தியா, ஒரே உலகத்தை நோக்கிய பயணம் ஆகிய அவருடைய முக்கியமான இலக்குகளில் அவர் அடைந்திருக்கும் வெற்றி, தோல்வி இரண்டுமே நம் எல்லோருடையதும்தான். தொடர் ஓட்டத்தை காந்தி தொடங்கினார், தீபத்தைக் கைகளில் வாங்கிக்கொண்டு நேரு பயணத்தைத் தொடர்ந்தார். தொடர்ந்து அவர் கையிலிருந்த தீபத்தை வாங்கிக்கொள்ள சரியான தலைவர் இல்லாமல் போனதுதான் சுதந்திர இந்தியாவின் மாபெரும் துயரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x