Published : 16 Sep 2013 02:47 AM
Last Updated : 16 Sep 2013 02:47 AM

நனவாகும் நூறாண்டுக் கனவு!

நூறு ஆண்டு காலக் கனவு நனவாகிறது. இதோ, ‘தி இந்து’ குழுமத்திலிருந்து அதே பெயருடன் தமிழ் நாளிதழ் மலர்கிறது. கதிரோன் காட்டும் புது விடியல், பறவைகள் கூட்டத்தின் புதுப் பயணம், எங்கும் நிறையும் இனிய இசை, நுரைக்கும் காபியின் புதிய மணம்... இவற்றுடன் இனி தினந்தோறும் உங்கள் அதிகாலையை அலங்கரிக்கப்போகிறது ‘தி இந்து’ நாளிதழின் தமிழ்க் கோலம்.

இந்து குடும்பத்தின் கனவு மட்டும் அல்ல இது; தமிழ்ச் சமூகத்தின் நெடுநாள் கனவு என்பதை நாங்கள் அறிவோம். இன்று அதை நனவாக்கியுள்ளோம்.

தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஓர் ஆண்டு 1878.

சுதேசிகளின் அரசியல் எழுச்சியை ஒடுக்கும் நடவடிக்கைகள் அரங்கேறிய காலகட்டம் அது. ஆங்கிலேய அரசுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் உள்நாட்டுப் பத்திரிகைகளை மொத்தமாக முடக்கிப்போடும் வகையில் அடக்குமுறைச் சட்டம் கொண்டுவந்தார் வைஸ்ராய் லிட்டன்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி நாற்காலியில் ஒரு தமிழர் - டி. முத்துசுவாமி ஐயர் - அமரும் வாய்ப்புக்கு எதிராகப் பெரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டன ஆங்கிலேயர் ஆதரவுப் பத்திரிகைகள். மோசமான இந்தச் சூழலை எதிர்த்து, ஆறு இளம் தமிழர்கள் ஏகப்பட்ட நெருக்கடிகளுக்கு நடுவே ஓர் ஆங்கிலப் பத்திரிகையைத் தொடங்கினர். இப்படித்தான் பிறந்தது ‘தி இந்து’.

‘‘பத்திரிகை என்பது மக்களின் கருத்தை வெளிப்படுத்தும் சாதனம் மட்டும் அல்ல. சூழலுக்கு ஏற்ப மக்களின் கருத்துகளைச் செழுமைப்படுத்தி உருவாக்குவதும் ஆகும். அந்தத் தேவையைப் பூர்த்திசெய்யவே நாங்கள் களம் இறங்குகிறோம்.’’

‘‘நியாயமும் நீதியுமே எங்களை வழிநடத்துவதற்காக நாங்கள் நிர்ணயித்துக்கொண்டிருக்கும் எளிய கோட்பாடுகள்.’’

‘‘நம் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வளர்க்க வேண்டும். மதச்சார்பின்மையை உறுதியாகப் பின்பற்ற வேண்டும். விவேகமான எல்லாக் கருத்துகளுக்கும், நியாயமான அனைத்துத் தரப்பு விமர்சனங்களுக்கும் பாரபட்சமின்றி இடம் அளிக்க வேண்டும். ஆள்பவர்களுக்கும் ஆளப்படுபவர்களுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையை உருவாக்க வேண்டும். இவையே எங்கள் லட்சியம்.’’

-‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் முதல் நாள் தலையங்கத்தில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் இவை. ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்கும் இந்த வாசகங்கள் பொருந்தும்.

உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழில், எம் சொந்த மொழியில், கால் பதிக்கும்போது, எம் முன்னே நிற்கும் பெரிய எதிர்பார்ப்புகளையும் சவால்களையும் நாங்கள் உணர்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுக் கலாச்சார வளம் மிக்க ஒரு சமூகம் மொழி, இனம் சார்ந்து எதிர்கொள்ளும் சவால்களையும் தமிழ் ஊடகங்கள் முன் இருக்கும் பெரும் பொறுப்புகளையும் நாங்கள் முழுமையாக உணர்கிறோம்.

இன்றைக்குப் பூமிப் பந்தின் எந்த மூலைக்குப் போனாலும், அங்கே தமிழர்களின் கம்பீரக் குரலைக் கேட்க முடிகிறது. தம் அசாத்திய அறிவாலும் உழைப்பாலும் முன்னேறிக்கொண்டேயிருக்கும் தமிழர்கள் பதிக்கும் சாதனைச் சுவடுகளைப் பார்க்க முடிகிறது.

காலத்துக்கு ஏற்ப ரசனைகளும் மாறுகின்றன. வாசிப்பின் தரம் இன்னும் மேலே செல்கிறது. உங்கள் தேவைகளை நாங்கள் நன்கு அறிந்திருக்கிறோம். ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் அத்தனை சிறப்பியல்புகளையும் நீங்கள் தமிழிலும் எதிர்பார்க்கலாம். அதேசமயம், ஒரு தேசிய நாளிதழாக ஆங்கில நாளேடு செயல்படும் களத்திலிருந்து இந்தத் தமிழ் நாளிதழின் முகமும் களமும் மாறுபடும். இந்தப் புதிய நாளிதழ், உலகைத் தமிழ் மண்ணின் கண் கொண்டே பார்க்கும்.

உள்ளூர்ச் செய்திகளில் தொடங்கி உலகச் செய்திகள்வரை தருவதோடு இலக்கியம் முதல் சினிமாவரை தமிழ் மக்களின் ருசி அறிந்து இந்த நாளிதழ் விருந்து படைக்கும். நவீன வாழ்வை எதிர்கொள்ள வாழ்வியல் வழிகாட்டுவதோடு மன அமைதிக்கு ஆன்மிக ஆறுதலும் தரும். பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்களுக்கு எனப் பிரத்தியேக இணைப்புகளும் உடன் வரும். அதேசமயம், எவை எல்லாம் உங்கள் குடும்பத்துக்குத் தேவை என்பதோடு, எவை எல்லாம் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதையும் எங்களின் நீண்ட அனுபவம் கற்றுக்கொடுத்திருக்கிறது. அநாகரிகமான அந்தரங்கச் செய்திகள் ஒருபோதும் இதில் இடம்பெறாது. சுருக்கமாக, ஒவ்வொரு புதிய நாளையும் தொடங்கும்போது, நம்பிக்கையைத் தாங்கிவரும் உங்கள் குடும்ப நாளிதழாக இது திகழும்.

முக்கியமாக, வாசகர்களாகிய உங்களுடைய பங்கேற்புக்கும் விசாலமான களம் இங்கே காத்திருக்கிறது. கருத்துச் சித்திரம் வரையும் பொறுப்பை இன்று முதல் உங்களிடமே ஒப்படைக்கிறோம்.

இனி, தரம் விரும்பும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் மேடையாக உங்கள் 'தி இந்து' தமிழ் திகழும்… என்றென்றும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x