Published : 06 Jul 2016 09:11 AM
Last Updated : 06 Jul 2016 09:11 AM

சூரியனைக் கையாள மேலும் யோசியுங்கள்!

இந்தியாவில் சூரிய மின்உற்பத்தித் திட்டங்களை அதிக அளவில் மேற்கொள்ள புதிய ஊக்குவிப்பு கிடைத்திருக்கிறது. உலக வங்கியும் இந்தியா தலைமையிலான ‘அனைத்து நாடுகள் சூரியஒளிக் கூட்டணி’யும் சூரிய மின்உற்பத்தித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு 2030-க்குள் சுமார் ரூ.67 லட்சம் கோடி முதலீடாகத் திரட்ட ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. இந்தியாவில் மட்டும் இதற்காக சுமார் ரூ.6,700 கோடி செலவிடப்படவிருக்கிறது.

2022-க்குள் 100 கிகா வாட் (ஒரு லட்சம் மெகா வாட்) மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதர புதுப்பிக்கத்தக்க இயற்கை ஆற்றல்கள் மூலம் 75,000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படவிருக்கிறது.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் மின்சாரத்தைத் தயாரிக்கும் தூய வழிமுறையாக சூரிய மின்உற்பத்தித் திட்டம் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது. சூரிய மின்சாரத்தின் விற்பனை விலை குறைந்துவருகிறது. ஆனால், சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஒளிமின்னழுத்தச் சில்லுகள், சில்லுகள் பதிக்கப்பட்ட சட்டங்கள் போன்றவற்றின் உற்பத்திச் செலவு அதிகரித்துவருகிறது. அதேசமயம், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் சூரிய மின்னழுத்தச் சில்லுகளும் சில்லுகள் பொருத்தப்பட்ட சட்டங்களும் உள்நாட்டில் தயாரிப்பதைவிட விலை குறைவாக இருப்பதால், சூரியஒளி மின்சாதன உற்பத்தியாளர்களுக்கு ஆர்வம் இல்லை. எனவே, ‘இந்தியாவில் மின்உற்பத்திக்குப் பயன்படுத்தும் சூரிய மின்னழுத்தச் சில்லுகளையும் சட்டங்களையும் குறிப்பிட்ட சதவீதத்துக்கு உள்நாட்டிலிருந்துதான் வாங்க வேண்டும்’ என்று இந்திய அரசு வலியுறுத்தியது. இது உலக வர்த்தக நிறுவனத்தின் தலைமையில் செய்துகொள்ளப்பட்ட அனைத்துலகத் தடையற்ற வர்த்தக நடைமுறை அமல் சட்டத்துக்கு எதிரானது என்று சில அமெரிக்க நிறுவனங்கள் முறையிட்டன. அதை உலக வர்த்தக நிறுவனம் ஏற்று, இந்தியா அப்படியான நிபந்தனைகளை விதிக்கக் கூடாது என்று தீர்ப்பளித்தது. உலகமயமாக்கல் யுகத்தில் உற்பத்தித் துறையில் நாம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவால் இது. ஒப்பந்தங்களின் வாயிலாக அல்ல; உற்பத்திக்கேற்ற சூழலை உருவாக்குவதன் மூலமே இந்தச் சவாலை வெற்றிகரமாக நாம் எதிர்கொள்ள முடியும்.

சூரியஒளி மின்உற்பத்தித் தொழிலை வலுப்படுத்துவதுதான் நாட்டின் தொடர் பொருளாதார வளர்ச்சிக்கும் இதுவரை மின்சார வசதியையே பெறாத பகுதிகளுக்கும் மின்இணைப்பை வழங்கவும் உதவியாக இருக்கும். கூரைகளில் சூரிய மின்உற்பத்திப் பிரிவுகளைப் பொருத்த நவீனமான, அதிகப் பலன் தரும் கூட்டுத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். கூரைகளில் தயாரிக்கும் மின்சாரத்தைச் சேமிக்கவும், கம்பி வழியே தொகுப்புக்குக் கொண்டுசெல்லவும் ஏற்பாடுகள் அவசியம். ரூ.4,200 கோடி மதிப்புள்ள கூரைவழி சூரிய மின்உற்பத்திப் பிரிவுகளை, மின்சாரத்தைக் கணக்கிடும் மீட்டருடன் இணைத்து வீடுகளில் பொருத்துவதன் மூலம், வீடுகளுக்குப் பயன்படுத்தியது போக எஞ்சும் மின்சாரத்தை மாநில மின்சாரத் தொகுப்புக்கு எடுத்துக்கொள்ள முடியும். அதிகார வர்க்கத்தின் சிவப்பு நாடா நடைமுறையால் தாமதம் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்வதுடன், எல்லா செயல்களையும் வெளிப்படையாக மேற்கொண்டால் கோடிக்கணக்கான தனி நபர்கள் தங்களுடைய சேமிப்பிலிருந்து பணத்தை எடுத்து இதில் முதலீடு செய்வார்கள். இந்த விஷயத்தில் ஜெர்மனியின் அனுபவத்திலிருந்து நாம் பாடம் கற்கலாம்.

மின்சாரத்தைக் கொண்டுசெல்லும் தடங்களை வலுப்படுத்த வேண்டும். தயாராகும் மின்சாரத்தை வீணாக்காமல் தொகுப்பில் சேர்க்க வேண்டும். சூரிய மின்உற்பத்தியில் மிகையாக இருக்கும் மாநிலங்கள், மின்சாரம் தேவைப்படும் பிற மாநிலங்களுக்கு உடனுக்குடன் மின்சாரம் வழங்க உலக வங்கியின் திட்டமும் வழிகாட்டலும் உதவும். சூரிய மின்சாரத்தைச் சேமித்துவைத்து நீண்ட நேரம் கழித்துப் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் கிட்டிவிட்டால், இத்துறையின் வளர்ச்சிக்கு அது பெரிய தூண்டுதலாக இருக்கும். ஆராய்ச்சிகள் இந்தத் திசையிலும் தொடர வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x