Published : 07 Mar 2016 09:06 AM
Last Updated : 07 Mar 2016 09:06 AM

கொள்ளைக்கு முடிவுகட்டுவோம்!

நாட்டிலேயே முதல் முறையாக ஆற்று மணலை அத்தியா வசியப் பொருட்களின் பட்டியலில் சேர்த்திருக்கிறது ஆந்திர அரசு. கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணல், இனி பொதுமக்களுக்குக் கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்றும் கொள்கை முடிவெடுத்திருக்கிறது. மக்களுக்கு மணலைக் கட்டணமில்லாமல் வழங்குவது எனும் முடிவு சரியானதா, இல்லையா என்கிற விவாதத்துக்கு அப்புறம் செல்வோம். தமிழ்நாடு மணல் கொள்கை தொடர்பாக ஒரு திட்டவட்டமான முடிவை எடுக்க வேண்டியதன் அவசியத்தை நம்முடைய அண்டை மாநிலங்களின் முடிவுகள் தொடர்ந்து உணர்த்துகின்றன.

கட்டுமானப் பொருட்களில் மிக முக்கியமானதாகவும் மலிவான தாகவும் கருதப்படுவது மணல். ஆனால், சுற்றுச்சூழலில் மிக முக்கியமான கண்ணி. இந்திய அளவில் பெரிய நதிநீராதாரங்கள் இல்லாத தமிழகம், மணல் சுரண்டப்படும் மாநிலங்களில் முன்னிலை வகிப்பது அபாயகரமானது.

மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இனிமேல் தமிழகத்தில் அரசு மட்டுமே மணல் குவாரி நடத்த வேண்டும் என்று 2003-ல் சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. அந்த உத்தரவின்படி, பொதுப்பணித் துறை மூலம் மணல் குவாரிகளை நடத்தத் தொடங்கியது தமிழக அரசு. 2014-15-ல் மணல் விற்பனை மூலம் அரசுக்குச் சுமார் ரூ.200 கோடி கிடைத்திருக்கிறது.

ஒரு லாரியில் ஏற்றக்கூடிய 3 யூனிட் (300 கன அடி) மணல் விலை ரூ. 945. இது அரசு நிர்ணயித்த விலை. ஆனால், வெளியில் ஒரு லோடு மணல் விலை சென்னையில் ரூ.12,000 முதல் ரூ.18,000 வரை. மதுரையில் ரூ.12,000, கன்னியாகுமரியில் ரூ.22,000 என்று ஆங்காங்கே ஒரு விலை விற்கிறது. ஆக, ஒரு லோடு மணலுக்குப் பல ஆயிரம் ரூபாயை அரசின் கஜானா இழக்கிறது என்றால், ஒரு ஆண்டுக்கு நேரும் இழப்பு எவ்வளவாக இருக்கும்? கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இவ்வாறு மடைமாறிச் சென்ற தொகையைக் கணக்கிட்டால், சில லட்சம் கோடி இருக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

மணல் அகழ்வில் நிலவும் ஊழல் ஒருபுறம் அரசுக்கு இழப்பை உருவாக்குகிறது என்றால், மறுபுறம் தேவைக்கும் அதிகமான, மிதமிஞ்சிய இந்த மணல் சுரண்டல் நம் மாநிலத்தின் இயற்கைச் சூழலைச் செல்லரித்துக்கொண்டிருக்கிறது. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. பல கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் அபாயகரமான நிலையில் இருக்கின்றன. விவசாயப் பாதிப்பையும் எதிர்கொள்கிறோம்.

அண்டை மாநிலமான கேரளத்தில் 45 ஆறுகள் ஓடுகின்றன. ஆனால், ஒரு ஆற்றில்கூட மணல் குவாரி நடத்த அரசு அனுமதிக்கவில்லை. கொடுமை என்னவென்றால், அங்கே காவிரி, அமராவதி, தாமிரபரணி என்று தமிழகத்தின் எந்த ஆற்று மணல் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என்று கூவிக் கூவி விற்கிறார்கள். அவர்கள் புத்திசாலிகளா, நாம் புத்திசாலிகளா?

மணல் ஒரு உதாரணம். தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில், வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் இயற்கை வளச் சுரண்டலைத் தடுத்து நிறுத்த தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். வழிகள் இல்லாமல் இல்லை. துணிவிருந்தால் நிச்சயம் இயற்கை வளச் சுரண்டலுக்கு முடிவுகட்ட முடியும். இயற்கை வளக் கொள்ளையில் அரசியலோடு இருக்கும் தொடர்புகள் அறுபட வேண்டும் என்றால், இதுபற்றியெல்லாம் வாக்காளராகிய மக்கள் நாம் உரக்கப் பேச வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x