Published : 01 Apr 2016 08:19 AM
Last Updated : 01 Apr 2016 08:19 AM

உதவும் உள்ளங்களைக் காக்க ஒரு சட்டம்

விபத்துகளின்போது காயமடைகிறவர்களை மீட்டு மருத்துவ சிகிச்சைக்குக் கொண்டுசெல்ல விரும்பினாலும் காவல் துறையினரின் விசாரணைகளுக்கு அஞ்சி வேடிக்கை பார்ப்பவர்கள் ஏராளம். காவல் துறை விசாரணை மட்டுமின்றி, சட்டரீதியான நடைமுறைகளும் அவர்களை அச்சுறுத்துகின்றன. இந்நிலையில், விபத்துகளில் காயமடைபவர்களுக்கு உதவி செய்ய முன்வருபவர்களைக் காக்க சட்டம் இயற்ற கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

விபத்துகளில் உதவி செய்யப்போய் அநாவசியமான விசாரணைகள், இழுத்தடிப்புகளால் பலர் சங்கடத்துக்குள்ளாகிறார்கள். இதை உணர்ந்த உச்ச நீதிமன்றம், அவர்களைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. இதையடுத்து, மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம், ‘நிலையான செயல்பாட்டு நடைமுறை’(எஸ்.ஓ.பி.) என்ற விதிகளை வகுத்தது. பிறகு 2016 ஜனவரியில் அதை அறிவிக்கையாகவே வெளியிட்டது.

விபத்து நடைபெறுவதைப் பார்த்துக்கொண்டிருப்பவர் காயம்பட்டவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றால், அவரை சிவில் அல்லது குற்றவியல் சட்டப்படியான விசாரணைகளுக்கு உட்படுத்தக் கூடாது, அந்த விபத்து வழக்கில் அவரைச் சாட்சியாக்கக் கூடாது என்று அந்த விதிமுறையில் கூறப்பட்டது. அவராக விரும்பி சாட்சி கூற விரும்பினால் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்தியது. அப்படி அவர் முன்வந்தாலும் அவரிடம் ஒரு முறை மட்டுமே சாட்சியம் பெற வேண்டும். அவரை மிரட்டியோ அலைக்கழித்தோ சாட்சியம் கூற வற்புறுத்தக் கூடாது என்றும் கூறியது. இதன் தொடர்ச்சியாகத்தான், இந்நடவடிக்கையை கர்நாடக அரசு எடுத்திருக்கிறது.

இதே போன்ற மசோதாவைத் தயாரிக்க ராஜஸ்தான், டெல்லி மாநில அரசுகளும் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. எல்லா மாநிலங்களுமே இத்தகைய மசோதாக்களை நிறைவேற்றி சட்டமாக்க வேண்டும். ஒரு தனி நபர் மசோதா நாடாளுமன்றத்தின் பரிசீலனையில் இருக்கிறது. ‘காப்போம் உயிரை’ என்ற நோக்கிலான அறக்கட்டளை 2012-ல் உச்ச நீதிமன்றத்தை அணுகியது. விபத்துகளில் சிக்கியவர்களுக்கு உதவுகிறவர்களைச் சட்டச் சிக்கல்களிலிருந்தும் வழக்குகளிலிருந்தும் காப்பதற்கான இடைக்கால ஆணையொன்றை உச்ச நீதிமன்றத்திடம் அந்த அமைப்பு பெற்றது. இது தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் வழிகாட்ட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியிருந்தது. அது தொடர்பாக ஒருவரைவு வாசக அறிக்கையையும் அது அளித்திருந்தது. சாலை விபத்துகள் என்பது காவல்துறை, மருத்துவமனைகள், சாலைப் போக்குவரத்துத் துறை, நீதித் துறை என்று பல்வேறு துறைகளுடன் தொடர்புடையது. எனவே, அந்தந்த மாநில அரசுகள் இதற்கான சட்டம் இயற்றுவதுதான் இதை அமல்படுத்துவதற்கு எளிதாக இருக்கும். மத்திய அரசு பொதுவான மாதிரி மசோதாவைக் கூட மாநிலங்களின் பார்வைக்காகத் தயாரித்து வழங்கலாம்.

விபத்துகளில் சிக்கியவர்களுக்கு உதவ நினைப்பவர்களுக்கு சட்டபூர்வ பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டியது மிகமிக அவசியம். படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அல்லது முதலுதவி அளிக்க தனியார் மருத்துவமனைகளும், சொந்தமாகத் தொழில் செய்யும் மருத்துவர்களும் தயங்குவது இப்போதும் தொடர்கிறது. உயிர்காக்கும் சிகிச்சைகளுக்குத் தேவைப்படும் எல்லா கருவிகளும் வசதிகளும் தங்களிடம் இல்லை என்று அவர்கள் கூறுவது உண்மையே என்றாலும், சாதாரண மனிதர்களைவிட மருத்துவர்களும் மருத்துவமனைகளும் அதிகம் உதவிட முடியும் என்பதால், அரசும் மருத்துவத் துறை சார்ந்தவர்களும் இதைப் பற்றிச் சிந்திப்பது நல்லது. ஆம்புலன்ஸ்கள் கிடைக்காத பட்சத்தில் தங்களுடைய வாகனங்களைக் கொடுத்து உதவ ஒரு சிலரே முன்வருகின்றனர். எனவே, இத்தகைய சட்டம் இயற்றப்படும்போது அதையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x