Published : 20 May 2016 09:00 AM
Last Updated : 20 May 2016 09:00 AM

இரு கழகங்களின் கைகளிலும் பெரும் பொறுப்புகள்!

தன்னுடைய அசாத்தியமான அரசியல் கணக்காற்றலை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் ஜெயலலிதா. கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக திமுக, அதிமுக என்று மாற்றி மாற்றி இரு கட்சிகளையும் ஆட்சியில் அமர்த்திவந்த தமிழ் மக்களின் மரபை மாற்றியமைத்து, மீண்டும் தன் ஆட்சியைத் தொடர்கிறார்.

ஆறு முனைப் போட்டி இந்தத் தேர்தலில் நிலவியது. ஏனைய ஐந்து முனைகளிலிருந்தும் வெவ்வேறு தலைவர்கள் தமிழகத்தைச் சுற்றிச் சுற்றி வந்தனர். அனல் கக்கும் பிரச்சாரத்தில் அவர்கள் ஈடுபட்டனர். எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி தனியொருவராய் நின்று அதிமுகவுக்கு இந்த வெற்றியைப் பறித்திருக்கிறார் ஜெயலலிதா. காமராஜர், கருணாநிதி, எம்ஜிஆர் வரிசையில் ஆளும் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்திய முதல்வர் எனும் பெருமையை இதன் மூலம் பெறுவதோடு, தமிழகத்தின் ஆறாவது முறை முதல்வர் என்கிற பெருமையையும் பெறுகிறார் ஜெயலலிதா. இதற்காக மீண்டும் ஒரு பூங்கொத்தை மக்கள் சார்பிலும் வாசகர்கள் சார்பிலும் நாம் அவருக்கு அளிக்கிறோம். அதேசமயம், சில விஷயங்களைச் சுட்டிக்காட்டுவதும் அவசியமாகிறது.

முந்தைய தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடும்போது, அதிமுக-வின் வெற்றி விகிதம் குறைவு. இன்னொருபக்கம், இதற்கு முன்பெல்லாம்விட வலுவான ஒரு எதிர்கட்சியாக இம்முறை அமர்கிறது திமுக. தன் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, ஆட்சி மீதான அதிருப்தி இவை இரண்டையுமே ஜெயலலிதா கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தத் தேர்தலில் ஏனைய கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் பெரிய செல்வாக்கை உருவாக்க முடியாமல் போகக் காரணம், எதிர்க்கட்சிகளின் வாக்குறுதிகளைப் பெருமளவில் சுவீகரித்துக்கொண்ட அதிமுகவின் தேர்தல் அறிக்கை. ஜெயலலிதா தன் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக, இந்தத் தேர்தலில் எல்லாக் கட்சிகளும் முந்தைய அரசின் மீது சுமத்திய பெரும் குற்றச்சாட்டான ‘அணுக முடியா முதல்வர்’எனும் பிம்பத்திலிருந்து வெளியே வர வேண்டும். தமிழகத்தின் ஓட்டத்தை வளர்ச்சிப் பாதையை நோக்கி முடுக்கிவிட வேண்டும்.

ஒரு பெரும் வீழ்ச்சிக்குப் பின் திமுகவை மீண்டும் கண்ணியமான இடத்துக்குக் கொண்டுவந்திருக்கின்றனர் தமிழக மக்கள். இதுவரை இல்லாத அளவுக்கு வலிமையான எதிர்க்கட்சியாக திமுகவை சட்டப்பேரவைக்குள் அனுப்பியிருக்கின்றனர் மக்கள். திமுகவை மீண்டும் எழுச்சிப் பாதைக்குக் கொண்டுவந்ததில் அக்கட்சியின் தலைவர் கருணாநிதியைத் தாண்டி, பொருளாளர் ஸ்டாலினுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. தொடர்ந்து ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக சட்டப்பேரவையில் திமுகவை வழிநடத்திச் செல்வதிலும் கட்சிக்குள்ளான களைகளை எடுப்பதிலும் ஸ்டாலின் இதே உழைப்பைக் காட்ட வேண்டும்.

அதிமுக, திமுக இரு கட்சிகளுக்கும் மாற்றாகத் தங்களை முன்னிறுத்திய மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக, தமாகா கூட்டணியையும் பாமகவையும் நாம் தமிழர் இயக்கத்தையும் மக்கள் நிராகரித்துள்ளனர். தமிழ் மக்கள் எப்போதுமே இன, மத, சாதியவாதத்துக்கு எதிரானவர்கள் என்பதால், பாமக, நாம் தமிழர் இயக்கம் இரு கட்சிகளுக்கும் அளிக்கப்பட்ட தண்டனையைப் புரிந்துகொள்ள முடிகிறது. இடதுசாரிகள் முன்னெடுத்த மாற்று அணி இந்த அளவுக்கு மோசமான அடி வாங்கக் காரணம், அதிமுக, திமுக மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து எந்த வகையிலும் மாறுபாடில்லாத தேமுதிகவையும் அதன் தலைவர் விஜயகாந்தையும் மாற்றாக முன்னிறுத்தியதை மக்கள் ஏற்கவில்லை என்பதுதான். எனினும், மூன்றாவது அணிக்கான தேவையும் எதிர்பார்ப்பும் மக்களிடையே இருக்கத்தான் செய்கிறது என்பதையும் இந்த அணிகள் வாங்கிய மொத்த வாக்குகளைப் பார்க்கும்போது புலனாகிறது. மக்கள் தீர்ப்பிலிருந்து பாடம் கற்க வேண்டும்.

இந்தத் தேர்தலில் தமிழகத்தைத் தாண்டியும் ஒட்டுமொத்த தேசத்தையும் கவனிக்கவைத்த விஷயம் பணநாயகம். ஆட்டத்தின் கண்ணியமே வெற்றியைக் கண்ணியமாக்கும். தஞ்சாவூர், அரவக்குறிச்சி இரு தொகுதிகளிலும் தேர்தலையே நிறுத்திவைக்கும் அளவுக்கு மிக மோசமாகப் பணம் இந்த முறை ஆட்டம் போட்டது. இதற்கான பொறுப்பை இரு திராவிடக் கட்சிகளுமே ஏற்க வேண்டும். மேலும், எதிர்வரும் தலைமுறையிடம் இரு கட்சிகளும் சம்பாதித்துவரும் வெறுப்பும் அந்தக் கட்சிகளைத் தாண்டி தமிழகத்துக்கும் நல்லதல்ல. தத்தமது தவறுகளையும் தமிழக அரசியல் சூழலையும் சேர்த்தே மாற்றும் பொறுப்போடு, அதற்கான வாய்பையும் நம்பிக்கையோடு இரு கழகங்களுக்கும் வழங்கியிருக்கிறார்கள் தமிழக மக்கள். நம்பிக்கை பலிக்கட்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x