Published : 09 Aug 2016 09:28 AM
Last Updated : 09 Aug 2016 09:28 AM

இந்த இணைப்பு மேலும் முன்னேற வழி வகுக்கட்டும்!

பாரத ஸ்டேட் வங்கியும் அதன் ஐந்து சார்பு வங்கிகளும் பாரதிய மகிளா வங்கி என்ற புதிய வங்கியும் இணைந்து, உலகின் பெரும் வங்கிகளில் ஒன்றாக உருவெடுக்கவிருக்கிறது.

பொதுத் துறை வங்கிகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, சார்பு வங்கிகளின் இணைப்பு நீண்ட காலமாகப் பேசப்பட்டுவந்த விஷயம். ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர்-ஜெய்பூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் பாடியாலா, ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் ஆகியவை இணையும் சார்பு வங்கிகள். பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் 2,22,033 பேரும், சார்பு வங்கிகளில் 38,000 பேரும் பணிபுரிகின்றனர். ஸ்டேட் வங்கிக்கு 36 நாடுகளில் 191 கிளைகள் உட்பட 14,000 கிளைகளும், சார்பு வங்கிகளுக்கு 6,400 கிளைகளும் உள்ளன. வங்கிகள் இணைக்கப்பட்ட பிறகு, மொத்த சொத்து மதிப்பு ரூ. 37 லட்சம் கோடியாகிறது. சார்பு நிறுவன வங்கிகளின் நிரந்தர சொத்து மதிப்பு மட்டும் ரூ.4,000 கோடி. வங்கியின் ஆண்டு வருமானம் உயர்ந்து, ஆண்டுச் செலவு குறைந்து மாதம் ரூ.23 கோடி மிச்சப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இணைப்பால் வங்கியின் டெபாசிட்டுகள் அதிகரிக்கும். கடன்கள் மீதான வட்டியைக் குறைக்க முடியும். வங்கிக் கிளைகளும் வாடிக்கையாளர்களும் அதிகரிப்பதால் சேவையை விரிவுபடுத்த முடியும், லாபமும் அதிகரிக்கும்.

அடுத்தகட்டமாக, அரசுடைமை வங்கிகளின் மொத்த எண்ணிக்கையை 27-லிருந்து 10-ஆகக் குறைக்க அரசு உத்தேசித்துள்ளது. வெவ்வேறு வங்கிகளின் கிளைகள் சிற்றூர்களில்கூடப் போட்டியில் ஈடுபடுவதையும், வங்கிக் கிளைகளே இல்லாமல் பல ஊர்கள் தவிப்பதையும் நாம் பார்த்துவருகிறோம். பாரத ஸ்டேட் வங்கியின் சார்பு வங்கிகளே ஒன்று இன்னொன்றுக்குப் போட்டியாக ஒரே ஊரில் கிளைகளைத் திறந்ததும் உண்டு. இந்தச் சூழல் இனி மாறும். அதேசமயம், வங்கிகள் இணைப்பில் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. ஊழியர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருப்பதால், அவர்களுடைய பதவி நிலை, பதவி உயர்வு வாய்ப்பு, ஓய்வூதியம், படிகள் போன்றவை பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்திருக்கிறது. இடமாற்றம், பதவி மாற்றம் போன்றவை ஊழியர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது. வங்கியின் நலன் கருதிச் செய்யும் செயல்கள், வங்கி ஊழியர்களின் நலன்களுக்கும் ஏற்ப இருக்க வேண்டும். ஊழியர்களின் பணிக் கலாச்சாரமும் வாடிக்கையாளர்கள் போற்றும் வகையில் பராமரிக்கப்பட வேண்டும். தங்கள் நலன்கள் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில், வங்கி ஊழியர் களின் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துவருவதை எளிதாகப் புறம்தள்ளிவிட முடியாது. சார்பு வங்கிகளில் சில சிறியவையாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட கவனிப்புகளைப் பெற்றிருப்பார்கள். இந்நிலையில், வங்கிகள் இணைப்புக்குப் பிறகு, அவர்கள் முன்பைப் போலவே கவனிக்கப்பட வேண்டும். பாரத ஸ்டேட் வங்கி இணைப்புக்குப் பிறகு பெரிதாவதால், வர்த்தகத்தைப் பெருக்க அதற்கு அதிக முதலீடும் தேவைப்படும். வங்கிகளை இணைப்பது அவற்றின் நிதி நிலைமைக்கும் வியாபார நலனுக்கும் ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செய்வதுடன், வாடிக்கையாளர்களுக்கும் விரைவான - கனிவான சேவை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். வங்கி ஊழியர்களுக்கும் மனம் மகிழும் படியான பணிச்சூழலை நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். பெரிய வங்கியான பிறகு, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பிற வங்கிகளுக்கு நல்ல போட்டியாளராக பாரத ஸ்டேட் வங்கி உருவெடுக்க வேண்டும். அதுதான் இந்த இணைப்பு முடிவை நியாயப்படுத்தும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x