Published : 01 Jul 2015 09:10 AM
Last Updated : 01 Jul 2015 09:10 AM

அதிநவீன நகரங்களும் கூவம்வாசிகளும்!

நாடு முழுவதும் 100 அதிநவீன நகரங்களை உருவாக்கும் சிறப்புத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்திருக்கிறார். அத்துடன் 500 நகர்ப்புறங்களின் மேம்பாட்டுத் திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன. நகர நிர்வாகத்தில் அரசின் தலையீடு மிகவும் குறைந்தபட்ச அளவுக்கு இருக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்று அறிவித்திருக்கிறார்.

அறிந்தும் அறியாமலும் நகர்மயமாக்கலை வெறித்தனமாக அரவணைத்துக்கொண்டிருக்கும் இந்தியா, தன்னுடைய நகரங்களின் எதிர்காலம் தொடர்பாக யோசிப்பது மிக முக்கியமான ஒன்று. உலகில் நகர்மயமாக்கல் வேகமாக நடந்துகொண்டிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நகர்மயமாக்கல் எவ்வளவு வேகமாக நடக்கிறதோ, அதே அளவுக்கு வேகமாக நகரப் பிளவும் நடந்துகொண்டிருக்கிறது. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, நகரங்களையொட்டிய குடிசைப் பகுதிகளில் வசிப்போர் எண்ணிக்கை நம் நாட்டில் சுமார் 6.5 கோடி. யமுனை, ஹௌரா, கூவம் என பெருநகரப் பிரமாண்ட சாக்கடைகளின் கரையோரங்கள்தான் அவர்களுக்கான இருப்பிடங்களாக இருக்கின்றன. அவர்களுக்கான எந்த அடிப்படைக் கட்டமைப்பையும் அரசு அமைப்புகள் யோசிப்பதாக இல்லை. ஆக, நகரமயமாக்கல் - காலச்சூழலுக்கேற்ற நகரங்களில் புதிய மாற்றங்கள் தொடர்பாகத் தொடர்ந்து நாம் பேசிவருகிறோம். ஆனால், மோடி அரசின் புதிய திட்டம் இது சார்ந்ததாகத் தெரியவில்லை.

இந்திய அரசு ‘ஆங்கிலோ - ஐரோப்பிய நகர்ப்புறக் கட்டமைப்பு முறை’யிலிருந்து அமெரிக்கப் பாணிக்கு மாற விரும்புவதையே மோடியின் திட்டம் உணர்த்துகிறது. நகர்ப்புற வளர்ச்சி என்பது திட்டமிட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக சண்டிகரை உருவாக்கினார் பிரதமர் ஜவாஹர்லால் நேரு. அனைத்து வருவாய்ப் பிரிவினரும் வசிக்கக் கூடியதாகவும், அடித்தளக் கட்டமைப்பு வசதிகளும், நீதித் துறை, நிர்வாகத் துறை, அரசியல் தலைமைத் துறை ஆகிய அனைத்தையும் மக்கள் எளிதாக அணுகும் வகையிலும் நகரமைப்பு இருக்க வேண்டும் என்று நேரு விரும்பினார். ஆனால், மோடியின் பாணி நியூயார்க் பாணியாகத் தெரிகிறது.

நியூயார்க் நகரம் ஒரு அதிநவீன நகரம்தான். அதன் ஒரு பகுதியான மன்ஹாட்டனில் உள்ள வணிக வளாகங்களும் குடியிருப்பு அடுக்ககங் களும் பெருத்த பணக்காரர்களுக்கானது. வாடகைக்குக் குடியிருப் பதற்குக்கூட அதிகம் செலவிட வேண்டும். விரும்பத்தகாதவர்களை அதாவது ஏழைகளை, நகர்ப்புறப் பகுதிக்குள்ளேயே நுழையவிடாமல் தடுக்கும் உடல் அடையாளப் பாதுகாப்பு ஏற்பாடுகள் (பயோ-மெட்ரிக்) அங்கே ஆதிக்கம் செலுத்துகின்றன. அந்நகரின் எல்லாச் சேவைகளும் தனியாரிடம் விடப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்கள் வேலைக்கு அதிக ஆட்களை நியமிக்காமல் இயந்திரங்களின் உதவியுடன் எல்லாவற்றையும் செய்கின்றன. இதனால் வேலைவாய்ப்பு சுருங்கிவிட்டது. சாதாரண கூலி வேலைதான் அதிநவீன நகர்மயமாக்கல் உருவாக்கியிருக்கும் பிரதான வேலைவாய்ப்பு.

இந்தியாவிலும் இப்படியான 100 அதிநவீன நகரங்களை நிர்மாணித்துவிடலாம். இன்றைய சந்தைப் பொருளாதாரம் இயல்பாகவும் எளிமையாகவும் அவற்றை வாரி அணைத்துக் கொள்ளும். ஆனால், நாம் எதிர்கொள்ளும் நகர்மயமாக்கல் பிரச்சினைகளை, சவால்களை அவை தீர்க்குமா? யமுனை, ஹௌரா, கூவம் கரையோர மக்களுக்கு அவை தீர்வைக் கொடுக்குமா? நம்முடைய தவறான கொள்கைகளின் விளைவாக ஒவ்வொரு நாளும் கிராமங்களிலிருந்து வேலைவாய்ப்புகளை இழந்து அகதிகளைப் போலப் பிழைப்புக்காக நகரங்களை நோக்கி வரும் கோடிக் கணக்கான இந்தியர்களுக்கு என்றேனும் கண்ணியமான வாழ்வளிக்கும் நம்பிக்கை அவற்றிடம் உண்டா? பிரதமர்தான் பதில் அளிக்க வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x